போரில் 60 ஆயிரம் பொதுமக்களை கொன்றுகுவித்த ராணுவ தளபதிக்கு வெறும் 14 ஆண்டுகளே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள இட்டூரி மாகாணத்தில் கடந்த 1999 முதல் 2003-ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. அதில் ஈடுபட்ட பொதுமக்களை அடக்கி ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டது. அதில், ஈடுபட்ட ராணுவத்துக்கு தாமஸ் லுயின்கா டிலோ தளபதி ஆக இருந்தார்.
இவர் இட்டூரி மாகாணத்தில் முகாமிட்டு அப்பகுதியில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கடத்தி வந்து கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்தார். அவர்கள் மூலமே இட்டூரி பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். அதில் 60 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்துக்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட லூயின்காவை ஐ.நா. கைது செய்து சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் அவர் குற்றவாளி என கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி எலிசபெத் ஒடியோ பெனியோ உத்தரவிட்டார். இதுவே சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழங்கப்பட்ட முதல் தண்டனையாகும்.
இந்த தண்டனையை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. ஆனால் அவரது தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக காங்கோ ராணுவம் அறிவித்துள்ளது.
0 Responses to 60 ஆயிரம் பேரை கொன்று குவித்த ராணுவ தளபதிக்கு வெறும் 14 ஆண்டு சிறை