Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கள்ளத்தனமாக அவுஸ்தி​ரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஈழ அகதிகள் கேரள பொலிஸாரிடம் பிடிபட்டார்கள். 'அகதி முகாமில் பெண் தற்கொலை’ என்று அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

அகதி முகாம் மக்களது வாழ்க்கை நிலைமை என்ன என்பதை அறிய மண்டபம் முகாம் பற்றி விசாரித்தோம்.

மண்டபத்தில்தான், தமிழகத்திலேயே பெரிய அகதிகள் முகாம் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி இயங்கிவருகிறது.

ஈழப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முதலில் வந்து சேர்வது, இங்கேதான். இங்கே இருந்துதான் தமிழகம் முழுக்க உள்ள 103 முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள்.

மண்டபம் அகதி முகாமில் உள்ளவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்து வந்திருக்கிறார் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா. அவரிடம் பேசினோம்.

முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மாத உதவித் தொகை சரியாகக் கிடைத்துவிடுகிறது என்றாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

நீண்டகாலமாக முகாமில் தங்கி உள்ளவர்கள் விடுமுறையில் செல்லவேண்டும் என்றாலோ, வேறு முகாம்களுக்கு மாறிச் செல்லவேண்டும் என்றாலோ, முன்பு இங்குள்ள அலுவலரிடம் கோரிக்கை வைத்தாலே போதும்.

இப்போதோ இராமநாதபுரம் கலெக்டரிடம் சென்று அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் அடிக்கடி அலைவதால் பேருந்துக்குச் செலவு ஆவதோடு, மன உளைச்சலும் அடைகிறார்கள்.

இவர்கள் சமையல் செய்வதற்காக இலவச காஸ் சிலிண்டர்கள் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டன. தற்போது அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. இவர்களின் அனைத்துக் குறைகளையும் முதல்வரிடம் நேரடியாகப் பேசித் தீர்க்க முயல்வேன் என்றார்.

இவரை அடுத்து அகதிகள் நிலைமை அறிவதற்காக சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பெரியகுளம் எம்.எல்.ஏ. லாசர், மதுரை எம்.எல்.ஏ. அண்ணாதுரையுடன் மாநில, மாவட்டக்குழு நிர்வாகிகள் கிளம்பி வந்தனர்.

முகாமுக்குள் செல்ல ஏற்கெனவே அனுமதி வாங்கி இருந்த நிலையிலும், அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் இவர்களை முகாம் வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.

நாங்கள் கலெக்டரிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம்’ என்று அவர்கள் எடுத்துச் சொல்லியும் உள்ளே விடவில்லை. அதனால் முகாம்வாசிகள் வெளியில் வரும்போது குறைகளைக் கேட்டனர்.

எம்.எல்.ஏ-க்கள் லாசர் மற்றும் அண்ணாதுரையிடம் பேசினோம்.

முகாமுக்குள் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. வீடுகள் மோசமாக பழுதடைந்து உள்ளன. மருத்துவ வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

தொண்டு நிறுவனம் வழங்கிய அம்புலென்ஸை அதிகாரிகள் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச காஸ் அடுப்புகளையும் பறிமுதல் செய்துவிட்டதால், சமைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.

முகாம் வாசிகள் கூடுதல் வருமானம் பெறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களையே முகாமுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்றால் உள்ளே அந்த அளவுக்குச் சிக்கல் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இதுதான் அகதிகள் மீது தமிழக அரசு காட்டும் அக்கறை என்றனர்.

முகாமில் இருக்கும் ஓர் ஈழத்தமிழரிடம் பேசினோம்.

ஓரளவு வாழ்வதற்கு ஏற்ற குடியிருப்புகள் முன்பு இருந்தன. இப்போது எல்லாமே பழுதடைந்து விட்டன. இங்கேயே இந்த கதியென்றால் மற்ற முகாம்களைப்பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.

முன்னே 5,000 பேர் இங்கே இருந்தாங்க. இப்போ 2,000 பேர்தான் இருக்கோம். கட்டட வேலை, மர வேலை, கடல் தொழில் எல்லாம் தெரியும். முகாமுக்குள் அப்பப்ப சோதனை போடுறோம்னு அதிகாரிங்க அடிக்கடி வர்றதால வெளி வேலைக்குப் போக முடியலை.

தமிழ்நாட்டுக்கு முக்கிய ஆளுங்க விஜயம் செஞ்சா, எங்களை மூணு நாளைக்கு வெளியே விட மாட்டாங்க. ஒரு அவசரம்னாகூட போகமுடியாது. ஜெயில் வாழ்க்கைதான். காசுள்ள எங்க ஆட்கள் அப்பவே வெளிநாடுகளுக்குப் போயிட்டாங்க.

தொப்புள்கொடி உறவென்று தமிழகம் வந்தோம். சொல்ல முடியாத துயரத்தில் வாழ்கிறோம்.

இங்குள்ள அதிகாரிங்க எங்களை கேவலமாத்தான் பாக்குறாங்க. எப்பாவது வெளியில வேலைக்குப் போனாலும், எங்களுக்கு மட்டும் கூலியைக் கம்மியா தர்றாங்க. இப்படியே கழியுது எங்கட வாழ்க்கை என்றார் வருத்தத்தோடு.

மண்டபம் முகாம் தனித் துணை ஆட்சியரான துரையிடம் பேசினோம். நான் எதைப்பற்றியும் பேசக் கூடாது. இங்குள்ள அகதிகளுக்கு வருகைப் பதிவேடு எடுப்பது மட்டும்தான் என் வேலை. எந்த முடிவையும் சென்னையில் இருக்கும் கமிஷனர்தான் எடுக்க முடியும் என்று சொன்னார்.

நம்மிடம் பேசிய தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஐ.நா-வின் அகதிகள் மறுவாழ்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டாலே, அத்தனை உதவிகளையும் அவர்களே செய்துவிடுவார்கள். நாங்களே பார்த்துகொள்கிறோம் என்று நம் நாடு இருப்பதால்தான் இந்த நிலை.

திபெத் அகதிகள், வங்க தேச அகதிகளுக்கு எல்லாம் நிறைய சலுகைகள் கொடுக்கும் மத்திய அரசு, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும் வஞ்சனை செய்கிறது என்கின்றனர்.

தேடிவந்த நாடும் சரியில்லை என்றால் நாதியற்ற மக்கள் என்னதான் செய்வார்கள்?

இவ்வாறு இவ்வார ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to தொப்புள் கொடி உறவென்று வந்தோம்! துயரத்தில் வாழ்கிறோம்! வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com