தமிழ்நாட்டில் விமானப்படையினரை வெளியேற்றினால் பயிற்சி வழங்கத் தாம் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.தமிழ்நாடு, தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை விமானப்படையினர் 9 பேரையும் அங்கிருந்து வெளியேற்றினால், அவர்களுக்கு பயிற்சி வழங்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக இராஜதந்திர தரப்பு தகவல் வெளியிட்டுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதனடிப்டையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை முகாமில் இலங்கை விமானப்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டு பெங்களூருக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவர்கள் தமிழகத்தை விட்டு நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனினும் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை. அத்துடன் இலங்கை விமானப்படையினரை திருப்பி அனுப்புவது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு, இந்தியா இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இலங்கை விமானப்படையினருக்கு பயிற்சி வழங்க பாகிஸ்தான் விமானப்படை விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தமிழக முடிவையடுத்தே பாகிஸ்தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை விமானப்படையினரை, திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்தால், அவர்களை பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வர பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என இலங்கையின் முப்படைகளின் பிரதான அதிகாரி ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இலங்கை விமானப் படையினருக்கு பயிற்சி வழங்கக் கூடாது என தமிழக முதல்வர் நேற்றைய தினம் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் தாம்பரத்தில் ஒரு கட்டப்பயிற்சியே நடாத்தப்பட்டது. அது முடிவடைந்த நிலையிலேயே குறித்த 9 வீரர்களும் பெங்களூருக்கு மாற்றப்பட்டனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to இந்தியா கைவிட்டால் பாகிஸ்தான்: சிங்கள நாளேடு தகவல்