புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் காவிரிப் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் பகுதிகள் ஏராளம் உள்ளது. இங்குள்ள குளம், ஏரிகள் நிறைந்திருந்தால் கோடை விவசாயமும் செய்வது வழக்கம். நாகுடி அருகில் உள்ள சந்தமனை கிராமத்தைச் சேர்ந்த ஐயனார் என்ற விவசாயிக்கு ஏகணிவயல் கிராமத்தில் வயல் உள்ளது.
நெல் விவசாயம் முடிந்த நிலையில் அருகில் உள்ள குளத்தில் உள்ள தண்ணீரை நம்பி ஒரு ஏக்கர் கடலை பயிரிட்டுள்ளார். பயிர் வளரும் போது குளத்தில் மீன்பிடிப்பதற்காக அந்த தண்ணீரை இறைத்து விட்டனர். அதனால் கடலை பறிக்கும் நிலையில் தண்ணீர் இன்றி கருகிப் போனது.
விளைந்த கடலையை பறிக்க மழை பெய்யும் என்று நம்பி இருந்தனர். மழையும் பொய்த்துவிட்டது. அதனால் தன்னிடம் உள்ள மாட்டு வண்டியில் இரண்டு தண்ணீர் டேங்க்களை வாடகைக்கு எடுத்து அருகில் உள்ள ஒரு குட்டையில் உள்ள தண்ணீரை கொண்டு வந்து கடலை செடிகளுக்கு ஊற்றி கடலை பறிக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் இதே போல தன் குடும்பத்து ஆட்களே கடலை பறிக்க வேண்டும் என்பதால் கடந்த 10 நாட்களாக ஆடு, மாடுகளுடன் தன் குடும்பத்தையும் வயலுக்கு கொண்டு வந்து வயல்வெளியில் தங்க வைத்துள்ளார். அம்மை நோய் வந்துள்ள ஒரு குழந்தையும் இந்த வயல் வெளியிலேயே தங்க வைத்துள்ளனர்.
கடலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த ஐயனார் மனைவி கூறும் போது, எங்கள் நிலத்தை சுற்றியுள்ள எல்லா நிலமும் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக போட்டு விட்டனர். நாங்கள் மட்டும் குளத்து தண்ணீரை நம்பி விவசாயம் செய்தோம். இப்போது குளத்திலும் தண்ணீர் இல்லை. அதனால் ஒரு குட்டையில் இருந்து டாங்க் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி கடலை பறிக்கிறோம். கடலை பறிக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்து தினமும் வர முடியாது என்பதால் பிள்ளைகள், ஆடு, மாடுகளுடன் வயலில் வந்து தங்கிவிட்டோம். பிள்ளைகளும் இங்கிருந்தே பள்ளிக்கு செல்கின்றனர் என்றார்.
0 Responses to விளைந்த கடலையை பறிக்க குடும்பத்துடன் வயலில் தங்கியுள்ள விவசாயி