Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவிற்குள் நடைபெறும் உள்நாட்டுப் போர் தற்போது லெபனானுக்குள் நுழைந்துள்ளது.

நேற்று சனிக்கிழமை சிரியப் படைகள் வட லெபனானிற்குள் தமது ஆட்டிலறி தாக்குதலை முன்னெடுத்தன, சரமாரியாக பொழிந்த குண்டுகளில் ஐந்து பேர் மரணித்து பலர் காயமடைந்தார்கள், இறந்தவர்களில் மூவர் பெண்கள்.

சிரியாவின் அதிபர் ஆஸாட்டை பதவிக்கட்டிலில் இருந்து இறக்குவதற்காக போராடும் போராளிகள் லெபனானின் வட பகுதியில் தமது முகாம்களை அமைத்து சிரிய அதிபருக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இவர்கள் சிரியாவில் தாக்குதலை நடாத்திவிட்டு லெபனானுக்குள் நுழைந்தபோது இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 20 கி.மீ நீளமான எல்லைப் பகுதியை நோக்கி இந்தத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

வட லெபனான் மீதான ஆட்டிலறி தாக்குதல்கள் போரின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகின்றன.

ஏற்கெனவே துருக்கியின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா, இப்போது லெபனானுக்குள் நகர்ந்துள்ளது.

சிரியாவில் நடப்பது உள்நாட்டு போர்தான் என்ற ஐ.நாவின் வரையறைகளை உடைத்து அங்கு நடப்பது போரே என்று சிரிய அதிபர் ஆஸாட் முன்னரே பிரகடனம் செய்திருந்தார்.

சீனா ரஸ்யா போன்ற நாடுகளின் இராஜதந்திர வழிகாட்டலை அடியொற்றி அயல் நாடுகளுடனான தாக்குதல்களை ஆஸாட் வளர்த்தெடுப்பதன் நோக்கம், நேட்டோ படைகளுக்கு முன்னர் ரஸ்யா – சீனாவை களமிறக்கும் உத்தியாகவும் இருக்கலாம்.

இந்தச் சகதிக்குள் நேட்டோ கால் வைத்தால் ரஸ்யா, சீனா ஆகிய நாடுகள் பெரிய விலை கொடுத்து நிலமையை சூடேற்றும் என்ற அச்சம் நிலவுகிறது.

நேட்டோவின் பரம எதிரியான ஹிஸ்புல்லா கூடுகட்டியிருப்பது லெபனானிலேயே.. எனவேதான் ஹிஸ்புல்லா – அல் குவைடாவின் குளவிக்கூடுகளை கலைத்தால் நேட்டோ களமிறங்க முடியாது என்ற வழிகாட்டல் ஆஸாட்டுக்கு இருப்பதை இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது.

விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தவுள்ள புதிய தகவல்கள் சிரிய போருக்கு பின்னால் சாதாரண ஊடகங்கள் எழுதுவதற்கு அப்பால் வேறு பல இரகசியங்களும், சதியும், நய வஞ்சகமும் புதைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

இது ஒரு பக்கமாக நகர சிரிய விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டனுக்கு எதிராக சீனா திரும்பியுள்ளது.

நேற்று முன்தினம் பிரான்சில் ஆரம்பித்த சிரிய நண்பர்கள் மாநாட்டில் உரையாற்றிய கிளரி கிளின்டன் சர்வதேச சமுதாயத்தின் நோக்கங்களுக்கு சீனாவும், ரஸ்யாவும் பாரிய முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத காரியம் என்று தெரிவித்திருந்தார்.

இவருடைய கருத்து சீனாவின் பிடரியைப் பிடித்து உலுக்குவது போல இருந்ததால் சீன வெளிநாட்டு அமைச்சகம் இவருக்கு நெற்றி முட்ட எதிரான கருத்தை முன் வைத்துள்ளது.

சிரிய விவகாரத்தில் சீனா சரியான படிமுறைகளையே கையாண்டு, அனைத்து தரப்பின் மேன்மைக்குமான காய் நகர்த்தல்களையே செய்கிறது என்று தெரிவித்து, கிளின்டனின் கருத்து தப்பானது என்று இடித்துரைத்துள்ளது.

உலகப் பொருளாதார மந்தம், எரிபொருள் மோசடி, வீட்டோ அதிகாரம், சுரண்டல், அதிகார துஷ்பிரயோம், துவேஷம், மதவெறி ஆகிய விடயங்கள் சிரியாவில் எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றி பேயாட்டம் ஆடி வருகின்றன.

தொடர்கின்றன பேய்களின் ஆட்டம்…

0 Responses to சிரியப் போர் வடக்கு லெபனானுக்குள் நுழைந்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com