Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்களப் பேரினவாத அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலைக்கு, முழுக்கமுழுக்க உடந்தையாக இருந்து, தமிழ் குலத்துக்குத் துரோகம் இழைத்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், பங்கேற்றுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கு அவரும் ஒரு பொறுப்பாளி ஆவார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அனுப்பியுள்ள அறிக்கையில்,

தமிழக மக்களையும், ஈழத்தமிழர்களையும், தரணிவாழ் தமிழர்களையும், எப்படியும் ஏமாற்றி விடலாம் என எண்ணி, திடீரென ‘டெசோ மாநாடு’ என்றார்.

மாபாதகம் செய்த சிங்கள அரசுக்கு, வர்த்தக பொருளாதார உதவி செய்யும் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே, மாநாட்டுத் தேதியை மாற்றியதோடு, தமிழ் ஈழத்துக்காகத் தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னபோதே, அவரது ஏமாற்று வேலை அம்பலமாகி விட்டது.

அவர் ஆட்சியில் இருந்தபோது, தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்ததோடு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தை, அடக்குமுறையை ஏவினார். அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களின் கூட்டங்களுக்குத் தடை விதித்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அனுமதி பெற்றுத்தான் கூட்டங்கள் நடந்தன. ஈழத்தமிழரை ஆதரித்துப் பேசியதற்காக, நாஞ்சில் சம்பத், சீமான் உள்ளிட்டோர் மீது, தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிச் சிறையில் பூட்டினார்.

என்மீது, இரண்டு முறை தேசத்துரோக வழக்குகள் போட்டு, என்னைச் சிறையில் அடைத்தார். தற்போது நீதிமன்றத்தில் அவற்றை எதிர்கொண்டு உள்ளேன்.

எனவே, பேச்சு உரிமை பற்றிக் குரல் கொடுக்கும் தகுதி அவருக்கு இல்லை. உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் வந்து சந்தித்து விட்டுப் போன மறுநாள், தமிழ் ஈழ ஆதரவு மாநாடு என்ற தலைப்பையே மாற்றி விட்டார்.

நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த மாநாட்டில், ‘ஈழம்’ என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்று, மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் அறிவித்து, தனது துரோக முகத்தைக் காட்டி விட்டது.

கருணாநிதி நாளை நடத்த இருந்த மாநாட்டுக்கு, தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்து இருக்கிறது.

அ.தி.மு.க. அரசு, பொறுப்பு ஏற்றபின்பு, தமிழ் இனக் கொலை புரிந்த சிங்கள அரசை, அனைத்து உலகக் குற்றக்கூண்டில் நிறுத்தவும், இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கவும், மூன்று தமிழர் உயிர்களைக் காக்கவும், சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றி, ஈழத்தமிழர் பிரச்சினையில் மேற்கொண்டு வந்த சரியான அணுகுமுறைக்கு எதிராக, மாநாட்டில், ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்படுவதாலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள், மாநாட்டில் பங்கு ஏற்பார்கள் என்றும் காரணங்களைக் காட்டி அனுமதி மறுத்து இருப்பது, ஜனநாயக உரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் ஆகும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பைப் பெற்று இருக்கின்றோம்.

‘தமிழ் ஈழம்’ என்ற சொல், கோடானுகோடித் தமிழர்களின் நெஞ்சில் பதிந்து உள்ள சொல். அதை உச்சரிப்பதைத் தடுக்க, உலகில் எந்தச் சக்தியாலும் முடியாது.

எனவே, ஜனநாயக உரிமையைப் பறிக்கும் தமிழக காவல்துறையின் செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, மாநாடு ஒரு நயவஞ்சக நாடகம் என்றாலும், ஜனநாயக உரிமைகளின்படி அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

0 Responses to டெசோ மாநாடு ஒரு நயவஞ்சக நாடகம்! என்றாலும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்!- வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com