திமுக நடத்தவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டின் பெயரில் ஈழம் என்ற சொல்லே இருக்கக் கூடாது என மத்திய அரசு கூறியுள்ளது.
அதையே பின்பற்றி, ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்ற காரணம் உட்பட வேறு பல காரணங்களையும் கூறி மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடந்த காலத்தில் நாங்கள் நடத்திய ஈழ ஆதரவாளர் மாநாடுகளுக்கு தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட போது உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று நடத்தியிருக்கிறோம்.
ஈழத் தமிழர் என்ற சொல்லை உயர்நீதிமன்றமே அனுமதித்திருக்கும் போது அதற்கு தடை விதித்திருப்பது நீதிமன்றத் தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் அவமதிப்பதாகும்.
இலங்கையிலும் உலக நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் கருணாநிதியின் மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள்.
யாருடைய வாழ்வுரிமைக்காக இந்த மாநாட்டை நடத்த கருணாநிதி முன் வந்தாரோ அவர்களே அவரைப் புறக்கணித்த பிறகு தமிழக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை வெறும் வாயை மெல்லுகிறவருக்கு வாயில் அவல் போடுவதாகும், என்று அதில் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு பழ. நெடுமாறன் கண்டனம்
பதிந்தவர்:
தம்பியன்
11 August 2012
0 Responses to டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு பழ. நெடுமாறன் கண்டனம்