சென்னையில் காலரா பரவுவதைக் கண்டுகொள்ளாத மாநகராட்சியைக் கண்டித்து வடசென்னை மண்டல அலுவலகம் முன், பாஜக வினர் மறியல் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் தமிழிசை சவுந்தராஜன் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் காலரா நோயினால் இறந்து போன இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களுடன் வட சென்னை மண்டல அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார் தமிழிசை சவுந்தராஜன். ஆனால், அங்கு காவல்துறையினருக்கும், பாஜக வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு மனு கொடுத்த தமிழிசை சவுந்தராஜன், "தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டால், எப்படி போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டுமோ, அப்படித்தான், நோய்த்தாக்குதல் ஏற்பட்டாலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஆனால், இந்த மாநகராட்சி ஒரு செயல் படாத மாநகராட்சியாகவே இருக்கிறது. அதோடு காலராவே இல்லை என்றும் சாதித்து வருகிறது.
காலராவில் இறந்த குழந்தைகளை அவசர கதியில் புதைக்க நடவடிக்கை எடுத்தது ஏன்? மருத்துவர்கள் காலராவில்தான குழந்தைகள் இறந்தார்கள் என்று அறிவித்த பின்னும் காலரா இல்லை என்று சாதிப்பது ஏன்? காலராவே இல்லை என்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி தயாரா? அதோடு, வட சென்னையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள். குடிநீருக்கு பதில் சாக்கடை நீர் குடிநீராக வருகிறது. இதற்கெல்லாம் இந்த மாநகராட்சியைக் கண்டித்து இன்று பாஜக சார்பில் மறியல் அறப்போராட்டம் நடத்துகிறோம்' என்றார். குறித்த மறியல் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தராஜன் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சென்னையில் காலரா பரவுவதை கண்டித்து பாஜக வினர் அறப்போராட்டம்: பலர் கைது
பதிந்தவர்:
தம்பியன்
08 August 2012
0 Responses to சென்னையில் காலரா பரவுவதை கண்டித்து பாஜக வினர் அறப்போராட்டம்: பலர் கைது