ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க்குற்றவாளி கருணாநிதி. நீங்க விலகியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து,சர்வதேச பார்வையே தமிழன் பக்கம் திரும்பியிருக்கும். அதை தவறவிட்ட வரலாற்று துரோகி கருணாநிதி. என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறினார்.
'ஈழம் எமக்கு அரசியல் அல்ல... அவசியம்' என்ற தலைப்பில் நேற்றிரவு சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
சமீபத்தில் சென்னையில் கலைஞர் கருணாநிதி கூட்டிய டொசோ மாநாட்டில், ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை பற்றியோ அல்லது அந்தப் படுகொலைக்கு காரணமான ராஜபக்ச உள்ளிட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்றோ ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இன்றைக்கு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக டெசோ மாநாட்டைக் கூட்டும் கருணாநிதி, அங்கு தமிழினம் கொன்றொழிக்கப்பட்ட போது அதைத் தடுத்து நிறுத்திட செய்தது என்ன?
தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச நடத்திய அந்தப் போருக்கு முழு அளவிற்கு உதவிய நாடு இந்தியா. அதன் ஆட்சிப்பீடத்தில் இருந்த கட்சி காங்கிரஸ், அந்தக் கட்சியின் தலைமையில் இருந்த மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க.
எனவே இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டதற்கு ராஜபக்ச காரணமென்றால், அதே குற்றத்தை செய்த மத்திய காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோன கருணாநிதியும் குற்றவாளிகளே.
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, திருமாவளவன் நடத்திய மாநாட்டு சுவரொட்டிகளில் இருந்த 'ஈழம்' என்ற வார்த்தையை காவல்துறையை பயன்படுத்தி அழித்த கருணாநிதி, இன்றைக்கு 'ஈழம்' என்று கூறிதான் மாநாடு நடத்துகிறார் என்றால் அதற்குக் காரணம், ஈழத் தமிழர் பிரச்சனையை கையில் எடுக்காமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாத நிலை உள்ளதே.
இந்த நிலையை ஏற்படுத்தியது நாம் தமிழர் கட்சி. ஈழத் தமிழர் பிரச்சினையால் ஆட்சியை இழந்த கருணாநிதி, இப்போது அதே பிரச்சினையை கையில் எடுத்திருப்பது இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
போர் நடந்தபோது காயமுற்ற மக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட குருதியை காவல்துறையை ஏவி தடுத்து நிறுத்தியவர் கருணாநிதி. மருந்து பொருட்கள், மண்எண்ணெய் என்று எந்த பொருளும் ஈழத்திற்குச் செல்லாமல் தடுத்தவர் கருணாநிதி.
இந்த இடத்தில் நான் ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். ஜெயலலிதா ஆட்சியி்ல் இருந்தபோது, இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதுமில்லை என்றும், குருதி முதல் மண்எண்ணெய் வரை நாட்டிற்கு கொண்டு வருவதில் எந்தச் சிக்கலும் இருந்ததில்லை.
இதனை பிரபாகரனே என்னிடம் தெரிவித்தார். இப்படி ஆட்சியில் இருந்தால் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஈழத் தமிழர்களை காட்டிக்கொடுப்பதும், ஆட்சி போன பிறகு அரசியலிற்காக ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசுவதும்தான் கருணாநிதியின் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
என்னைப் பார்த்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்று கூறியுள்ளார். ஆம், மழையில் முளைத்த காளான்தான். ஆனால் அந்த மழை நீரோடு என் ஈழத் தமிழ் சொந்தங்களின் குருதியும் கலந்து ஒடிய நீரில் முளைத்த காளான்தான் சீமான்.
தனது அரசியலை நிலைநிறுத்திக்கொள்ளவே டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்தினார். ஆனால், அவரால் இதற்கு மேல் மீண்டும் ஒருமுறை அவர் தமிழ்நாட்டை ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அப்படி நடக்க நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது.
தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை கருணாநிதி இருந்தாரென்றால், அதற்கு அவருடைய அரசியல் வலிமையோ அல்லது திறனோ காரணமல்ல, தமிழ்நாட்டு மக்களின் அறியாமையே காரணம். அந்த நிலையை நாம் தமிழர் கட்சி மாற்றிவிட்டது.
அதனால்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தோற்று ஆட்சியை இழந்தது. அது மீண்டும் ஆட்சிக்கு வராது, வரவும் விடமாட்டோம் என்று சீமான் பேசினார்.
இக்கூட்டத்தில் இயக்குனர் மணிவண்ணன், கலைக்கோட்டுதயம், சாகுல் அமீது, ஊடகவியலாளர் அய்யநாதன், வெற்றிச்செல்வன், அன்புத் தென்னரசன், அமுதா நம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது கடுமையாக மழை பெய்தும், மக்கள் கலையவில்லை. சீமான் பேச்சை பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
நேர்க்காணல் சீமான்
0 Responses to ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க் குற்றவாளி கருணாநிதி!: சீமான்