கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து விடுதலை நோக்கிய பயணம் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. சுவிஸ் நாட்டின் ஊடகங்கங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் ஈழப்பற்றாளன் வைகுந்தனைச் சந்தித்து செய்திகளைச் சேகரித்தனர்.
07.08.2012 அன்று முற்பகல் கிளாறவுஸ் தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவின் முன்பாகவிருந்து விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் ஆரம்பமானது.
இதன் போது ஈழத்திமிழரவை உறுப்பினரும், தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்து வருபவருமான பேர்னாட்டும் அவரின் துணைவியாரும் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்ததுடன், போராட்டம் விடுதலை கிடைக்கும் வரைத் தொடரப்பட வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தனர்.
ரி.எஸ்.ஓ. தொலைக்காட்சி மற்றும் கிளாறவுசில் உள்ள ஊடகவியலாளர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.
செங்காளனை நோக்கி ஆரம்பித்த விடுதலை நொக்கிய பயணத்திற்கு கிளாறவுசில் உள்ள பலரும் ஆதரவை வழங்கியிருந்தனர். சிறார்கள் இளைஞர்கள் எனப் பலரும் செங்காளன் எல்லைவரை மிதிவண்டியில் பயணித்து வைகுந்தனிற்கு உற்சாகம் ஊட்டினர்.
கணேஸ் என்ற இளைஞர் செங்காளன் வரை பயணம் செய்யப் போவதாகத் தெரிவித்து வைகுந்தனுக்கு ஆதரவாக மிதிவண்டிப் பயணம் செய்தார்.
கிளாறவுஸ் வரை விடுதலை நோக்கிய பயணத்தை 600 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்த வைகுந்தன், பயணத்தைத் தொடர்கின்றார்.
ஊடகவியலாளர்கள் அவரின் கோரிக்கை பற்றியும், பயணத்தால் பயன் உண்டா? என்ற கேள்வியினையும் எழுப்பியிருந்தனர்.
சுவிஸ் மக்களிடமும், ஊடகங்களிடமும் இந்தப் போராட்டத்தைக் கொண்டு செல்வதே! விடுதலை நோக்கிய பயணத்தை வெற்றியடையச் செய்து, தமிழரின் விடுதலையை வென்றெடுக்க முடியும்.
இன்னும் ஏராளம் போராட்டங்களைச் செய்வதற்கு இது ஓர் உந்து சக்தியாக அமையும்.
இதனை உணர்ந்த செயற்பாடு அனைத்துத் தரப்பினரிடமும் வருவது நன்றென கிளாறவுசில் உள்ள இளையோர் சிலர் கருத்துக் கூறினார்கள்.
விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணத்தின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்.
(1)சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழரிடம் நடத்தப்பட வேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடத்த வேண்டும்.
(2)தமிழர் தாயகத்திலிருந்து இலங்கையின் ஆயுதப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும்.
(3)விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
(4)தமிழரின் பூர்வீக நிலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் செய்வதைத் தடுத்து நிறுத்துவதுடன், ஏற்கனவே குடியேற்றப்பட்டவர்களையும் வெளியேற்ற வேண்டும்.
(5)சுவிஸ் அரசாங்கம் மனிதாபிமான நோக்கத்தைக் கருத்திலெடுத்து அரசியல் தஞ்சம் கோரிய தமிழரைத் திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும். இலங்கைத் தீவிற்குள் தமிழரின் உயிர்வாழ்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை தமிழரைத் திருப்பி அனுப்பாதிருப்பது மனிதநேயம் கொண்டதாக இருக்கும். ஆகவே! இதனை சுவிஸ் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
ஆகிய ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மனம்தளராமல் விடுதலை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ள வைகுந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பற்றிச் சவிஸ் நாட்டவரின் கவனத்திற்கும் கொண்டு செல்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
„விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணத்திற்கு சுவிஸ் வாழ் தமிழர் ஆதரவு தாரீர்!“
கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்
பதிந்தவர்:
தம்பியன்
08 August 2012
0 Responses to கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்