Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் மூட்டிய தீ இன்று சிங்களத்தையே மீளச் சூழத் தொடங்கியுள்ளது. தமிழரைச் சிங்களம் சுட்ட தீ இன்று சிங்களத்தை மீளச் சுடுகிறது.

சிங்கள அரசின் தலைவர் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச செல்லும் இடமெங்கும் அவரை இத் தீ கலைத்து கலைத்துத் துரத்துகிறது. இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்தார்.

ராஜபக்சவின் ஐக்கிய நாடுகள் சபை விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக விடுத்த ஊடக அறிக்கையில் ருத்ரகுமாரன் மேற்கண்டவாறு குறிப்பட்டுள்ளார்.

இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகிந்த ராஜபக்ச தனது ஐக்கிய நாடுகள் சபைக்கான பயணத்தை ரத்துச் செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார். தமிழ் மக்களின் எதிர்ப்பினையும் அனைத்துலக அழுத்தங்களையம் ஒரு சேர எதிர் கொள்ள வேண்டியிருந்த சூழலிலேயே இவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது தற்செயலானதொன்றல்ல. முக்கியமான கருமம் ஒன்றுக்காக கைவிடப்பட்ட பயணமும் அல்ல. இது ஒரு அரசியல் முடிவு. அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழர் தேசத்துக்கு இழைத்த கொடுமைகள் குறித்து கேள்விக்குள்ளாக்கபடுவதைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு.

சிங்கள அரசாங்கம் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் அந்நியப்பட்டு வரும் நிலையினை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு.
இம் மாத நடுப்பகுதியில் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றபோதும் தமிழரைக் கொன்ற தீ அவரைத் துரத்தியது.

தமிழரைக் கொன்ற கொலைகாரனை இந்திய மண்ணில் அனுமதிக்காதே என்று நீதிக்குரல் எழுப்பியவர்று தனக்குத்தானே தீ மூட்டி விஜயராஜ் என்ற தமிழினப் போராளி தனது உயிரை ஈகம் செய்து ராஜபக்சவுக்கெதிரான உலகத் தமிழினத்தின் எதிர்ப்பை உயிர்ப்பாய் வெளிப்படுத்தினான்.

நமது நெஞ்சங்களிலெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்திய இத் தியாகிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தலைவணங்கி வணக்கம் செய்கிறது.

ராஜபக்சவின் இந்திய வருககைக்கு எதிரப்புத் தெரிவித்து மத்தியப் பிரதேசம் வரை தனது தோழர்களுடன் அணிவகுத்துச் சென்று தமிழகத்தினதும் உலகத் தமிழர்களதும் உணர்வுகளை இந்திய தேசமெங்கும் வெளிப்படுத்திய மறுமலர்ச்சிக் திராவிடர் கழகத் தலைவர் வைகோ மற்றும் தோழர்கள்,

சென்னையில் அமைந்திருந்த சிறிலங்கா துணைத் தூதுவராலயம் முன்பாகப் போராட்டம் நடாத்திய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் தோழர்கள்,
ராஜபக்சவின் வருகையினை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடாத்திய நாம் தமிழர் இயக்க மற்றும் வாழ்வுரிமைக்கட்சித் தோழர்கள் உட்பட ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிராகப் போராடிய அனைத்துத் தமிழன உணர்வாளகளதும் கரங்களையும் நாம் தோழமையுடன் பற்றிக் கொள்கிறோம்.

ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் ஒரு தனமனிதனுக்கு எதிரான போராட்டமல்ல. வெறும் உணர்சிமயப்பட்டு மேற்கொள்ளப்படுமொன்றுமல்ல. இது சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம்.

தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களத்தின் தலைவனும் தளபதியும் ராஜபக்சவேதான்.

மானுட உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் நடைபெற்ற மனிதப்படுகொலையினை நிகழ்த்தி முடித்த அரச இயந்திரத்துக்கு தலைமை வகித்தவரும் இவரேதான்.

இதனால் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் ஓர் அரசியல் இலக்குக் கொண்டது. சிங்கள அரசுக்கு சார்பாக இருக்கும் அனைத்துலக நாடுகள் தமது வெளியுறவுக் கொள்கையினை மீளப்பரிசீலனை செய்யவும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவும் கோரும் முனைப்புக் கொண்டது.

அரசுகளில் தமது சுயஇலாபம் கொண்டு இயங்கும் நிலை கொண்டவை என்பதால் இவற்றின் வெளியுறவுக் கொள்கைளில் மாற்றம் ஏற்படுத்துவதும் இலகுவானதல்ல. எனினும் இது என்றும் சாத்தியமாக முடியாத விடயமும் அல்ல.

இந்திய அரசின் வெளியறவுக் கொள்கைக்கும் இது பொருந்தும். உள்நாட்டுச் சூழல் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றத்தை எற்படுத்தும் வல்லமை கொண்டது என்பது இன்று பலராலும உணரப்படுகிறது.

இச் சூழலில் நமது பிரதான பணி அனைத்துலக அரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் சிங்களத்துக்கு எதிரானதும் நமக்குச் சாதகமானதுமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நமது செயற்பாடுகளை முன்னெடுப்பதே.

இவ் விடயத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் நமக்குச் சாதகமான மாற்றம் ஏற்படின் அது அனைத்துலக அரங்கில் நமக்குச் சாதகதான மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதனால் தமிழகத்தின் தற்போதய முக்கியமான பணி இந்திய அரசின் நிலைப்பாட்டில், வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முறையில் வியூகம் அமைத்துச் செய்படுவதாகத்தான் அமைய முடியும்.

தமிழீழ விடுதலைப்போர் தற்போது அடைந்துள்ள காலகட்டம் நிதானமான அரசியல் இராஜதந்திர நகர்வுகளையே மையமாகக் கொண்டுள்ளது. இது நாம் விரும்பும் வேகத்தில் கருமங்களை வென்றெடுப்பதற்கான வாய்ப்புக்களை உடனடியாகத் தந்து விடாது. உரிய சூழலுக்கும் தருணத்துக்கும் காத்திருக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கு மிகுந்த சகிப்புத்தன்மையும் பொறுமையும் தேவைப்படும்.

இதேவேளை மிகுந்த உறுதியும் அதிகாரத்துக்கு பயந்தோ பணிந்தோ தலைவணங்காத பண்பும் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் ஆற்றலும் அவசியமானதாக இருக்கும். நமது சுதந்திரரமான கௌரவமான வாழ்வக்கு சுதந்திரத் தமிழீழ அரசினை அமைத்தலே ஒரேவழி என்பதிலும் நாம் உறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அமைதி வழியில், நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து தனது உயிரை உருக்கி நமது தேசத்துக்கு அரசியல் வலுவூட்டிய தியாகி திலீபனின் 25வது ஆண்டு நினைவுதினத்தை உலகத் தமிழனம் நினைவுகூரும் இவ்வேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தியாகி திலீபனுக்கு தனது வீரவணக்கத்தைச் செலுத்தி நிற்கிறது.

அமைதிவழியில் நாம் தொடரும் விடுதலைப் பயணத்துக்குத் தேவையான ஆன்ம பலத்தையும் உறுதியையும் திலீபனின் நினைவுகள் என்றும் நமக்கு வழங்கிக் கொண்டேயிருக்கும்.
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to தமிழரைச் சுட்ட தீ இன்று சிங்களத்தை மீளச் சுடுகிறது : பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com