Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேமுதிக எம்.எல்.ஏக்கள் பலர், தமிழக முதல்வரை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்களில் ஒருவரான மைக்கேல் ராயப்பனுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

'கடந்த 1 1/2 ஆண்டுகளாக தொகுதியில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அமைச்சர்கள் யாரையும் சந்திக்க கூடாது என கட்சி கட்டளையிட்டுள்ளது. அதிகாரிகளை சந்தித்து பேசினாலும் தொகுதியில் எந்த வேலையும் நடைபெறவில்லை. எமது தொகுதி பிரச்சினை பற்றி பேசவே முதல்-அமைச்சரை சந்தித்தோம். தே.மு.தி.க. கரை வேட்டி அணிந்து கொண்டு தான் முதல்வரை சந்தித்தோம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இச்சந்திப்புக்கு பிறகு, 6 பேர் வரை என்னிடம் தொலைபேசியில் அசிங்கமாக பேசி என்னை கொன்று விடுவோம் என மிரட்டினர்.  போனில் மிரட்டியவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.' இவ்வாறு அவர் கூறினார்.

இதேவேளை, தேமுதிகவில் இருந்து யாரும் அதிமுகவுக்குப் போகவில்லை எனவும், சந்திப்பு என்பது முதல்வர் ஜெயலலிதா நடத்தும் நாடகம்,  அவர் ஆரம்பித்த அந்த நாடகத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவேன் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 'எதிரிகளைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் துரோகிகளை ஏற்கமுடியாது' என பிரேமலதா விஜயகாந்த் விழா ஒன்றில் பேசியுள்ளார். தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் தங்களது தொகுதி பிரச்னைகளை எடுத்துரைப்பதற்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளதாகக் கூறுவது சரியல்ல. முதல்வரைச் சந்தித்துப் பேசியவர்களது கோரிக்கைள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதை பார்க்கவேண்டும். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சிலர் முதல்வரை சந்தித்துள்ளனர். தேமுதிக கட்சியானது சட்டப்பேரவை உறுப்பினர்களை மட்டும் நம்பி இருக்கவில்லை. கட்சியின் அடிப்படை தொண்டர்களின் பலத்தில் தான் தேமுதிக செயல்படுகிறது. எதிரிகளைக் கூட ஏற்றுக்கொள்வோம். ஆனால் துரோகிகளை ஒரு போதும் ஏற்கமாட்டோம். அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என அவர் கூறுகிறார்.

இதேவேளை தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏவாக இருக்கும் நடிகர் அருண்பாண்டியனும் நேற்று தமிழக முதல்வரை சந்தித்து பேசினார். இதையடுத்து ஆத்திரமடைந்துள்ள பேராவூரணி தேமுதிக பொறுப்பாளர்கள், பேராவூரணி அண்ணா சாலையில் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு திரண்டு, அங்குவைக்கப்பட்டிருந்த அருண் பாண்டியனின் பிளக்ச் போர்டை அடித்து கிழித்து சேதப்படுத்தினர்.  பின்பு அருண் பாண்டியனின் உருவ பொம்மையையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

0 Responses to அருண் பாண்டியனின் உருவ பொம்மை எரிப்பு, மைக்கெல் ராயப்பனுக்கு கொலை மிரட்டல்: பிளவடைகிறதா தேமுதிக?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com