Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று காலை புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் 7 பேர் புதிதாக கேபினட் அமைச்சர்களாகவும், 15 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரகுமான் கான், சுரங்கத்துறை இணை அமைச்சராக இருந்த தின்ஷா பண்டே, விளையாட்டு துறை இணை அமைச்சராக இருந்த அஜய் மக்கான், பாதுகாப்பு துறை இணை அமைச்சராக இருந்த பல்லம் ராஜூ, அஷ்வின் குமார், உணவுத்துறை அமைச்சராக இருந்த ஹரீஷ் ராவத், சந்திரேஷ் குமாரி கடோஜ் ஆகிய 7 பேர் புதிதாக கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, ஆந்திராவை சேர்ந்த நடிகர் சிரஞ்சீவி, ஏற்கனவே அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சசி தரூர், கேரளாவை சேர்ந்த நடிகர் குனில் சுரேஷ் ஆகியோர் தனி பொறுப்புக்களுடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர்.

மேலும், தாரீக் அன்வர், ஜெய சூர்ய பிரகாஷ் ரெட்டி, ராணி நாரா, ஏ.ஆர்.சௌத்ரி, சத்யநாராயணா, ஏ.எச்.கான் சௌத்ரி, நினாங் ஏரிங், நடிகை தீபா தாஸ் முன்ஷி, பொரிகா பல்ராம் நாயக், கிருபா ராணி, லால் சந்த் கடாரியா  ஆகியோருக்கு இணை அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

அமைச்சு பதவிகள் வழங்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, தமிழகத்தை சேர்ந்த மீனாட்சி நடராஜன் மற்றும் மாணிக் தாகூர் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸை வலுப்படுத்தும் முகமாகவும், கூட்டணி கட்சிகளாக இருந்து பிரிவடைந்த திரிணாமூல் காங்கிரஸ், மற்றும் புதிய அமைச்சு பதவிகளை ஏற்க மறுத்த திமுக ஆகியவற்றின் அமைச்சு பதவிகளின் வெற்றிடங்களை நிரப்பும் முகமாகவும், மூத்த அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்தமையினால், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கிலும் இன்று இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

யார் யாருக்கு என்னென்ன பதவிகள்?

எஸ்.எம்.கிருஷ்ணா ராஜினாமா செய்ததால் வெற்றிடமான வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு சல்மான் குர்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதலாவது இஸ்லாமிய வெளியுறவு துறை அமைச்சர் எனும் பெருமையை சல்மான் குர்ஷித் பெறுகிறார்.

சட்டத்துறை அமைச்சராக அஷ்வானி குமார் பதவியேற்கிறார். பெற்றோலிய துறை அமைச்சராக வீரப்ப மொய்லி பதவியேற்றுள்ளார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக ஜெய்பால் ரெட்டியும், மனிதவள அபிவிருத்தி அமைச்சராக பல்லம் ராஜுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொலைத்தொடர்பு துறை அமைச்சராக கபில் சிபில் தொடர்ந்து நீடிக்கிறார்.

ரயில்வே துறை அமைச்சராக பவான் பன்சாலும், பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராக கமல் நாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதா?

ராகுல் காந்திக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டுமென தான் விரும்பிய போதும், கட்சியை பலப்படுத்தவே அவர் விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராகுல் காந்திக்கு அமைச்சு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இதுவே, கடைசி அமைச்சரவை மறுசீரமைப்பாக இருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்: விரிவான பார்வை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com