Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக இலங்கை அரசினால் கட்டவிழ்த்து விடப்படும் கருத்துக்கள் தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை இலக்காக கொண்டு சிங்கள நலன்சார் ஊடகங்களினால் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பிலும் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழினப் படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசானது, தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை மழுங்கடிக்கவும், தாயகத்தில் தமிழினத்தைக் கபளீகரம் செய்வதற்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே பேச்சுவார்த்தை நாடகம் ஆடுகிறதெனத் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ள பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள இலங்கை அரசின் சூழ்ச்சி குறித்து ஈழத் தமிழர் தேசம் விழிப்பாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனவெறி இலங்கை அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடாது என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறேன் எனத் உறுதிபடத் தெரிவித்துள்ள பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் இத்தகைய பேச்சுவார்த்தை முயற்சிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எந்தவகையிலாவது தொடர்பு படுத்தி வெளிவரும் செய்திகள் யாவுமே உண்மைக்கு புறம்பானவையாகவே இருக்கும் என்பதனையும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் எனவும் உலகத் தமிழர்களின் கவனத்திற்கு பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவடிவம்:

தமிழினப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசு தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை மழுங்கடிக்கவும், தாயகத்தில் தமிழினத்தைக் கபளீகரம் செய்வதற்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே பேச்சுவார்த்தை நாடகம் ஆடுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, புலம் பெயர் மக்களுடன் நடாத்தப்படப் போவதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளாயினும் சரி- இவை தமிழின அழிப்பினையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஈழத் தமிழர் தேசம் இலங்கை அரசின் சூழ்ச்சி குறித்து விழிப்பாக இருக்க வேண்டும.

இலங்கை அரசு புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்த இருப்பதான அறிவிப்பினை அண்மையில் விடுத்திருந்தது. புலம்பெயர் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி எமது மக்களின் விடுதலை வேட்கையினை மழுங்கடிக்க வேண்டும் என்பதே இவ் அறிவிப்பின் உண்மையான நோக்கம். இது குறித்துத் தமிழ் மக்கள் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினைத் தொடர்புபடுத்தி இலங்கை கார்டியன் எனும் இணையத்தளத்தில் கடந்த சனிக்கிழமை 27.10.2012 அன்று உண்மைக்குப் புறம்பான செய்தியொன்று வெளியாகியிருந்தமை எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக உறவுகள் துறைப் பொறுப்பாளர் கே.பி தொடர்புகளை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாக இலங்கை கார்டியன் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தன்னை வெளிப்படுத்த விரும்பாத, கே.பிக்கு நெருக்கமான ஒருவர் தமக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படும் மின்னஞ்சலினை அடிப்படையாகக் கொண்டு அச் செய்தியினை இவ் இணையத்தளம் பிரசுரித்திருந்தது. இந்த முயற்சி குறித்த தகவல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகிய எனக்கு மறைக்கப்பட்டே மேற்கோள்ளப்படுவதாகவும் இம் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

இச் செய்தியில் உண்மை எதுவுமில்லை என்பதனை எமது மக்களுக்கு வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

கபட நோக்கம் கொண்டு எவராலோ அனுப்பப்பட்ட இம் மின்னஞ்சலை அடிப்படையாகக் கொண்டு, எம்முடன் தொடர்பு கொண்டு அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் இதனைப் பிரசுரித்தமை குறித்து எமது அதிருப்தியினையும் கண்டனத்தையும் இலங்கை கார்டியன் ஆசிரியர் பீடத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்து எம்முடன் தொடர்பு கொள்ளாது அதனை உண்மை போலவே வெளியிட்டு இலங்கை அரசின் நோக்கங்களுக்குத் துணைபோகும் ஓரிரு தமிழ் இணையங்களின் பொறுப்பற்றதனமும் எமக்கு கவலையைத் தருகிறது.

இவ்விடயத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எமது மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கை அரசு ஒரு சிங்கள பௌத்த அரசாக முற்றிப் பழுத்து முதிர்ச்சியடைந்து விட்டது. இந்த அரசு ஈழத் தமிழ்த் தேசிய இனத்துடன் எந்தவிதமான அரசியல் உடன்பாட்டுக்கும் வரப் போவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போயுள்ள நிலை இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்கள பௌத்தத்தின் இன அழிப்பில் இருந்தான ஒரு பாதுகாப்பு ஏற்பாடு எனும் வகையிலும் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு ஒன்று அமைக்கப்படுவதே ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்திரத் தீர்வாக அமையும் என்ற நிலைப்பாட்டையே நாம் உறுதியாகக் கொண்டுள்ளோம்.

தமிழினப் படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசு தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை மழுங்கடிக்கவும், தாயகத்தில் தமிழினத்தைக் கபளீகரம் செய்வதற்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே பேச்சுவார்த்தை நாடகம் ஆடுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, புலம் பெயர் மக்களுடன் நடாத்தப்படப் போவதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளாயினும் சரி- இவை தமிழின அழிப்பினை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஈழத் தமிழர் தேசம் இலங்கை அரசின் சூழ்ச்சி குறித்து விழிப்பாக இருக்க வேண்டும்.

இனவெறி இலங்கை அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடாது என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறேன். இத்தகைய பேச்சுவார்த்தை முயற்சிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எந்தவகையிலாவது தொடர்பு படுத்தி எவராவது செய்தி வெளியிட்டாலும் இவை உண்மைக்கு புறம்பானவையாகவே இருக்கும் என்பதனையும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை அரசின் சூழ்ச்சி குறித்து தமிழ்மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: தமிழீழ அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com