Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் மேரிலாண்ட் வெளியுறவுத்துறைத் துணைச் செயலராக (அமைச்சர்) டாக்டர் ராஜன் நடராஜன் உள்ளார்.
அமெரிக்காவில் நடக்கும் பெரும்பான்மையான விழாக்களில் சிறப்பு விருந்தினர் இவர்தான்.

சமீபத்தில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் மாநாட்டிலும், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் பால்டிமோர் மாநாட்டிலும் (ஃபெட்னா), அதைச் சார்ந்த தமிழ் தொழில் முனைவோர் கருத்தரங்கத்திலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் முத்துக்காடு என்ற கிராமத்தில் பிறந்த டாக்டர் ராஜன் நடராஜன் சமீபத்தில் அளித்த சிறப்புப் பேட்டி ஒன்று :

கேள்வி: ஆராய்ச்சியாளராக அமெரிக்காவில் அடியெடுத்து வைத்த நீங்கள் சில புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமம் (Patent) பெற்றுள்ளீர்கள். பல்வேறு தொழில் முயற்சிகளின் வெற்றிக்கு பின்,  தற்போது அரசியல் ரீதியாகவும் உயர் பதவி பெற்றுள்ள  நீங்கள், அமெரிக்காவில் உள்ள தமிழ் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

டாக்டர் ராஜன்: அமெரிக்க தமிழர்கள் மிகுந்த திறமைசாலிகள். பல்முனை போட்டிகளிலும் வெற்றி பெற்று பல நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளிலும், சிறந்த தொழில் முனைவோராகவும் இருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது. அமெரிக்க மாநிலங்கள் மற்றும்  மத்திய அரசுத்துறையில்  பெருவாரியான அமெரிக்கத் தமிழர்கள் உயர் பதவிகளுக்கு வரவேண்டும்.  வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.

தலைமைப் பொறியாளார், தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, அரசுத்துறைச் செயலாளர் (அமைச்சர்) என பல நியமனப் பதவிகள் உள்ளன. அமெரிக்க தமிழர்கள் முயற்சி செய்தால் இந்த பதவிகளை அடைய முடியும்.மேலும் அமெரிக்கத் தமிழர்கள், தேசிய அளவில் அரசியல் மேடைகளிலும் பங்கெடுக்க வேண்டும். தேர்தல் விவகாரங்கள், வாக்களித்தல், தேர்தலில் போட்டி என ஈடுபட வேண்டும்.

கேள்வி: ஒரு தொழில் முனைவோராக, சக அமெரிக்க தமிழ் தொழில் முனைவோருக்கு நீங்கள் தரும் குறிப்புகள் கொடுக்கலாமா?

டாக்டர் ராஜன்:  அமெரிக்காவில் உள்ள தமிழ் தொழில் முனைவோர்கள் அரசுத்துறையில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதுதான் உண்மை. சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவி, வட்டியில்லா கடன் என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைத் திட்டங்கள் இருக்கின்றன. மேலும், அரசுத்துறை வாய்ப்புகளான ஒப்பந்த பணிகளிலும் (Contracts) அதிக ஆர்வம் காட்ட வேண்டும். அரசு வாய்ப்புகளை சரியாக உபயோகித்துக் கொண்டால் வளர்ச்சியை விரைவில் எட்டிப்பிடிக்க முடியும்.

கேள்வி: அமெரிக்காவில் பல்வேறு தமிழ் சங்கங்கள் / அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவை இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா?

டாக்டர் ராஜன்: அமெரிக்க தமிழ் அமைப்புகள் சிறந்த பணியாற்றி வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் தன்னார்வத்துடன் பங்காற்றி வருகிறார்கள். மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும். கூடுதலாக, அமெரிக்க தமிழ் மையம் ( USA Tamil Center) ஒன்று அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழ் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும், நமது பண்பாட்டு, சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணையாகவும்,  வருங்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் இது அமையும் என நம்புகிறேன்.

இந்திய மாநிலங்களுடன் வர்த்தக உறவு…

கேள்வி:  இந்திய மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் மேரிலாண்ட் மாகாண வர்த்தக, அரசாங்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக  பல்வேறு  நடவடிக்கைகளை நீங்கள் எடுத்து வருவதாக அறிகிறோம். அது குறித்து சொல்லுங்களேன்…

டாக்டர் ராஜன்:  இந்திய – மேரிலாண்ட் வர்த்தக உறவுகளுக்கு தளகர்த்தாவாக  நான் பொறுப்பேற்று கொண்ட பிறகு, எங்கள் கவர்னர்  மார்டின் ஒ’மலெ,  வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டார். ஏழு நாட்கள், 110 பிரதிநிதிகளுடன் ஹைதராபாத், மும்பை மற்றும் புது டெல்லிக்கு சென்று, மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்தார்.

இந்தியா-மேரிலாண்ட் அரசுகளுக்கிடையே உறவுப்பாலம் அமைக்கவும், புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும், கல்வித்துறையில் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்த பயணம் வழிவகை செய்தது.

மேரிலாண்ட் – ஆந்திரபிரதேசம் மற்றும் மேரிலாண்ட்- மஹாராஷ்ட்ரா மாநிலங்களுக்கிடையே சகோதர உறவு (State to State relationship) ஏற்பட்டது. மேரிலாண்ட் பல்கலைக் கழகங்களுடன் பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த பயணத்திற்கு பிறகு, நிறைய இந்திய தொழில் முனைவோர்கள் மேரிலாண்ட்டிற்கு வர்த்தக பரிமாற்றத்திற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். கவர்னரின் இந்த பயணத்தினால், மேரிலாண்ட் – இந்தியாவிற்கிடையே, பல துறைகளில் பொருளாதார வளர்ச்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.

இப்போதைய பயணத்தில் உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் புதுவை மாநிலங்களுக்கு பயணம் செய்தேன். அந்தந்த மாநில முதல்வர்களுடன் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினேன்.

இந்தியாவில் கட்டமைப்புகள் அதிகம் வேண்டும்…

கேள்வி :  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு என்னென்ன துறைகளில் அதிக வாய்ப்புகள் உள்ளது என நினைக்கிறீர்கள்

டாக்டர் ராஜன்: சாலை, விமான, கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்துகளின் கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

இந்தியாவில் நூறு சதவீதம் மின்சாரம் (24/7) இருந்தால் ஆண்டு வளர்ச்சி விகிதம் மும்மடங்காக அதிகரிக்கும். வெளிநாட்டு புதுமைத்தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளுதல், உதாரணத்திற்கு சோலார் எனர்ஜி மற்றும் சோலார் தெர்மல் எனர்ஜி, விரைவான வளர்ச்சிக்கு அவசியம்.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் உற்பத்தி அதிகரித்து உலக சந்தைக்கு அனுப்ப வேண்டும்.

அன்னிய நேரடி முதலீடுகளை பயன்படுத்திக் கொண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
பஞ்சாப், குஜராத் மாநில அரசுகள் போல் வெளி நாட்டு இந்தியர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தின் சார்பாக வெளிநாடுகளில் பிரதிநிதிகளை நியமித்தால், அன்னிய முதலீடுகளை, சொந்த மாநிலத்திற்கு அதிகமாக கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன. சீனா, பிரேசில், கொரியா, நைஜீரியா போன்ற நாடுகள் இதை கடைப் பிடிக்கின்றன.

கழிவுபொருட்கள் மேலாண்மை மூலம், கழிவுப்பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி (Wealth from Waste) செய்வதற்கான் பல தொழில்நுட்பங்கள் வெளி நாடுகளில் உள்ளது. உதாரணத்திற்கு,  நகராட்சி கழிவுகளிலிருந்து எத்னால், பயோகேஸ், ரசாயன உரம், கட்டிடப் பொருட்கள் போன்றவைகளை தயாரிக்கலாம். இது ஒரு க்ரீன் டெக்னாலஜி (Green Technology) தொழில் நுட்பம் ஆகும்.

நீண்ட கடற்பரப்பு, கடற்கரை, வளைகுடாக்களை சுற்றுலா வளர்ச்சிக்கு உபயோகித்துக் கொள்ளுதல். உதாரணமாக, சுற்றுலா கப்பல் துறைமுகங்கள் உருவாக்கி, சுற்றுலாத்துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடையலாம். இதன் மூலம் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர முடியும. மேலும் கடற்கரை பூங்காக்களையும் அமைக்கலாம்.

தமிழகத்துக்கு என்னென்ன செய்ய முடியும்?

கேள்வி: தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றமடையவேண்டும் என்ற ஆவல் உங்களிடம்  நிறைய தெரிகிறது.  உங்களின் எல்லைக்கு  உட்பட்டு தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்ய முடியும் என்று கருதுகிறீர்கள்?

டாக்டர் ராஜன் :  'உலக நாடுகளுடன் வலுவான தொலை நோக்கு ஒத்துழைப்பு, பரஸ்பர உறவுகள் உருவாக்குவது போன்றவை தான்’ என்னுடைய தற்போதைய பொறுப்புகளில் முதன்மையானவைகள்.

முதல் கட்டமாக தமிழக மேரிலாண்ட் அரசுகளுக்கிடையே நேரடி உறவுகளை ஏற்படுத்த முயற்சி எடுக்க முடியும். அடுத்ததாக, அன்னிய  நேரடி முதலீடு, டெக்னாலாஜி வர்த்தக மயமாக்கல், வர்த்தக வாய்ப்புகள் போன்றவைகளுக்கு இரு மாநிலங்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்கலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, மேரிலாண்ட் கல்வித்துறையில் முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. இரு மாநிலங்களும கல்வித்துறையிலும், பரஸ்பர ஒத்துழைப்பு, கல்வித்திட்ட பரிமாற்றம் என முதல் தரமான கல்விக்கு வழி வகுக்கலாம்.

கேள்வி: இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினீர்களா?

டாக்டர்  ராஜன்:  கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் என்னுடைய முதல் அரசுமுறைப் பயணத்தின் போது தலைமைச் செயலாளர் சாரங்கி அவர்களை சந்தித்து இரு மாநிலங்களும் பயன் பெறும் வகையில் பல திட்டங்கள் குறித்து விவாதித்தோம். அடுத்த கட்டமாக டிசம்பர் மாதம் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் தலைமைச் செயலாளர் சாரங்கி ஆகியோரையும் ஒன்றாக சந்தித்தேன். மேரிலாண்ட்  மாநிலத்தின் ‘பலம்’ எவ்வாறு தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என விவரித்தேன்.

இந்த பயணத்தின் போது முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்து இரு மாநிலங்களுக்குமிடையே அரசு, வர்த்தக உறவுகளை உருவாக்கவும், இரு மாநிலங்களும் தொழில்துறையில் இணைந்து பணியாற்ற உள்ள வாய்ப்புகளை பற்றி ஆலோசிக்கவும் முயற்சி செய்ய உள்ளேன்.

கேள்வி: தமிழக அரசு எடுத்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

டாக்டர் ராஜன்:  முதல்வர் ஜெயலலிதாவின் ‘விஷன் 2023’ திட்ட அறிக்கையை பார்த்திருக்கிறேன்.  மாநில வளர்ச்சிக்கு இது முக்கியமான வரைவுத் திட்டமாக (blueprint)  தெரிகிறது. முக்கிய அம்சங்களான பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி, சுகாதாரம், உலகத்தர கட்டமைப்புகள்,  ஆரோக்கியமான முதலீட்டு சூழல், அறிவாற்றல் மையம் மற்றும் தமிழகத்தை புதிய கண்டுபிடிப்புகளுக்கான தலைமையிடமாக்குதல், மனிதவள மேம்பாட்டுக்கு இணக்கமான சூழல், சுற்றுப் புறவியலை பேணுதல் மற்றும் பாதுகாத்தல்,  நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் என பரவலாக அனைத்து துறைகளிலும் விஷன் 2023 வரையறுக்கப் பட்டுள்ளது.

கேள்வி: அமெரிக்காவில் உங்கள் வேலைகளுக்கிடையில், தமிழக அரசு திட்டங்களையும் அறிந்து வைத்துள்ளீர்கள். இந்த திட்டத்தால் மக்களுக்கு என்ன நன்மை என்று சுருக்கமாக சொல்லுங்களேன்.

டாக்டர் ராஜன்:   இந்த பத்துவருட வரைவுத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், சராரி குடும்ப வருமானமும் வாழ்க்கைத் தரமும் உயரும், உலகத்தரத்துடன் கட்டமைப்புகள் அமையும். மக்களுக்கு உலகத் தரத்தில் மருத்துவ வசதி, கல்வி, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

உள்ளூர் தொழில் முனவோர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், தமிழக அரசுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

கேள்வி: உலகத்தரமான கட்டமைப்பு, கல்வி என்று சொல்கிறீர்கள். இப்போது இருப்பதை விட என்ன பெரிய மாறுதல்கள் வந்து விடப்போகிறது?

டாக்டர் ராஜன்: எந்த ஒரு விரிவாக்கத் திட்டத்தையும் இன்றைக்கு அமல் படுத்தப்படும் போது, எதிர்காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி, மாற்றங்களை கருத்தில் எடுத்துக்கொண்டு தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தினால் எந்த துறை என்றாலும் எதிர்கால நெருக்கடிகளை எளிதாக தவிர்க்க முடியும்.

உதாரணமாக் டெல்லி விமான நிலைய விரிவாக்கம் அடுத்த 25 ஆண்டுகள் மக்கள் தொகை மாற்றங்களை சமாளிக்க்க்கூடிய வகையில் அமைந்துள்ளது. தொலை நோக்குடன் ‘அடுத்த பத்தாண்டு திட்டங்கள்’ என செயல்படுத்தப்படும் போது தற்போதைய பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும், அடுத்து பத்தாண்டுகளுக்கான வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

கட்டமைப்பு குறைபாடுகள் (infrastructure deficiency)  தான் வளர்ச்சிக்கு பெரும் தடை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாக அமெரிக்க அரசுத் திட்டங்களில் CMO (Consolidation, Modernization, Optimization to deliver more with less) என்று மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். கட்டமைப்புகளை நவீனமயமாக்கல், ஒருங்கிணைத்தல், சீரியமுறையில் பயன்படுத்துதல் என பல்முனை செயலாக்கம் வேண்டும்.
உதாரணத்திற்கு போக்குவரத்துத் துறையில் ரெட்லைட் மற்றும் ஸ்பீடிங் காமிராக்களை பயன்படுத்தினால், விபத்துகளை தடுப்பது மட்டுமல்லாமல், மக்களுக்கு சாலைப் பயணம் எளிதாகவும் இருக்கும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் காவல்துறைக்கு உதவியாக இருக்கும்.

அரசுத்துறையில் தனித்தனியாக இருக்கும்,  டேட்டா செண்டர்களை ஒருங்கிணைந்த மையங்களாக உருவாக்கும் போது, நேரம், கட்டமைப்பு செலவீனம், மனிதவளம் என பலவகைகளில் சேமிப்பு, ஒருங்கிணைந்த செயலாக்கமும் சாத்தியம். இது போல், அனைத்து துறைகளிலும் ‘CMO’ விதிகளை செயல்படுத்த முடியும்.

அரசுத் துறையில் சாத்தியமா..

கேள்வி:  நீங்கள் சொல்வதெல்லாம் ஏதோ தனியார் துறை நிறுவனத்திற்கு பொருந்துவதாக தெரிகிறது. அரசுத்துறையில் இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது சாத்தியம் தானா?

டாக்டர் ராஜன் :   ’5Ps’ -  Promote Public Private Partnership Projects  என்பது தான் இதற்கு என்னுடைய பதிலாக இருக்கும். அரசு – தனியார் கூட்டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அதற்கான விளக்கம். அமெரிக்காவில் பல மாநிலங்கள் இந்த கொள்கையை பின்பற்றி பெரிய சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவிலும் டெல்லி, ஹைதராபாத், மும்பை விமான நிலையங்கள் இதே அடிப்படையில் தான் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு தொழில் நுட்பம் மற்றும் வளங்களை பயன்படுத்திக் கொண்டு கூடவே , வெளிநாட்டிலிருந்தும், அன்னிய நேரடி முதலீடு (FDI), அன்னிய புதுமைத் தொழில் நுட்பங்களையும் (Foreign Innovative Technology) இணைத்துக் கொண்டு செயல்படுத்தும் போது ’விஷன் 2023’ திட்டம் விரைவில் சாத்தியமே.

இந்த திட்டம் அமலாக்கப்பட்டால், இன்றைக்கு வேகமாக வளரும் மாநிலமாக உள்ள தமிழகம் முற்றிலும் ’வளர்ச்சி பெற்ற மாநிலம்’ என்ற நிலையை அடைந்து, இந்தியாவின் முதல் மாநிலமாக உருவாகவும் வாய்ப்புள்ளது.

கேள்வி :  23 வருடங்களாக அமெரிக்காவில் இருந்தாலும், இந்திய விவகாரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். தீர்வுகளுக்கான வழிமுறைகளும் உங்களிடம் ஏராளம் இருக்கிறது. தமிழக அரசுடன் இணைந்து  இதை நடைமுறைப் படுத்தலாமே.

டாக்டர் ராஜன் : தமிழகத்துடன்  எரிசக்தி (energy),  கல்வி, மருத்துவம், கட்டமைப்பு (போக்குவரத்து  நவீனமயமாக்கல் தொழில்நுட்பம்) துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். தமிழக முதல்வரின் விஷன்  2023 ல் சொல்லப்பட்டுள்ள முக்கிய அம்சங்களும் இதில் அடங்கும். தமிழக அரசு விருப்பம் தெரிவித்தால் கண்டிப்பாக இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். இதனால் இரண்டு  மாநிலங்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த எனக்கு தமிழகத்துடன் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இணையத்தளம் மூலம் கிடைத்த இந்த வாய்ப்புக்கு நன்றி.

0 Responses to அமெரிக்க தமிழர்கள், தேசிய அளவில் அரசியல் மேடைகளில் பங்கெடுக்க வேண்டும்: டாக்டர் ராஜன் நடராஜன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com