Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயக விடுதலைக்காய் களமாடி விதையாகி வீழ்ந்த எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு, தாயகத்தில் எவ்வகையில் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்வோமோ, அதேபோன்று, அதே உணர்வெழுச்சியுடன், இன்று, பிரான்சிலே மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

தாயகத்தில், மாவீரர் துயிலும் இல்லங்களில், நடைபெறுகின்ற மாவீரர் நாளை முழுமையாகப் பிரதிபலிப்பதுபோல், வன்சன் மைதானத்தில், மிகவும் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் மாவீரர்நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஸ்தான் மைதானத்தில் இந்நிகழ்வை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும், அதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தபோதும், இறுதி நேரத்தில், தவிர்க்கமுடியாத காரணங்களால், நிகழ்வு நடைபெறும் இடத்தை வன்சன் மைதானத்திற்கு மாற்றவேண்டிய நெருக்கடியை நாம் எதிர்கொண்டோம். மக்களுக்கு அதனை சரியானமுறையில் தெரியப்படுத்தமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. மக்களுக்குச் சரியான முறையில் இடம்மாற்றம் பற்றிய தகவல்கள் போய்ச்சேரவில்லை.

இருந்தபோதும், இந்நிகழ்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருந்தனர். தாயகத்தில், நிகழ்வுகள் நடைபெறும் நேரத்திற்கு சற்றும் பிசகாமல், தமிழீழத் தேசியவானொலியான புலிகளின் குரல் வானொலியின், ஒத்துழைப்புடன், நிகழ்வுகள், ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
பொதுச்சுடரினை, சமூகம் கலை அரசியல் சார்ந்த நீண்டகாலச் செயற்பாட்டாளர் திரு .பரா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை, தேசியச் செயற்பாட்டாளரும், நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினருமான திருமதி. உமா அவர்கள் ஏற்றிவைத்தார்.
புலிகளின் குரல் வானொலியின் நேரடி ஒலிபரப்பில், தமிழீழ தேசியத் தலைவர் உரையாற்றுகின்ற நேரம், அந்த ஒளிமுகத்தையும், ஆன்மாவை நிறைக்கும் அந்த அன்புக்குரலுக்காகவும், தமிழ்மக்களின் விழிகளும், செவிகளும் தாகத்தோடும் ஏக்கத்தோடும் காத்திருக்கின்றன என்ற செய்தி சொல்லப்பட்டு, அவரின் சிந்தனைகளை மனம்எண்ணிப்பார்க்கும் கணங்களாக அவை ஆக்கப்பட்டன.

தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் மாவீரர்நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. நினைவொலி எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான ஈகைச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. பிரதான ஈகைச் சுடரை தலைமைச் செயலகத்தின் பிரான்சுக்கான இணைப்பாளர் திரு. தமிழரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மற்றும் பொதுமக்கள் என, பலநூற்றுக்கணக்கான மக்கள் ஒருசேர நினைவுக்கற்களுக்கும், பொதுத் தீபங்களுக்கும் முன்னால் நின்று, மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி, வணக்கம் செலுத்தினர். துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கவிடப்பட, தாயகத்தில் நிற்பதுபோன்ற ஒரு உணர்வு எல்லோரையும் ஆட்கொண்டது. கண்கள் கலங்க நின்றபடி, அவர்கள், மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திய காட்சி, தாயகத்தில், மாவீரர் துயிலும் இல்லத்தில், நெய்விளக்கேற்றும் கணங்களை நினைவுபடுத்தியது. வானமும் மெல்லக் கசிந்துருகியது. மெல்லிளம் குளிர்காற்று சூடான அந்தக் கணங்களை ஈரப்படுத்தியது.

நான்கு மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவுபெற, தேசியக்கொடி இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கை வரிகள் தாங்கிய தாயகப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற அசையா உறுதிமொழியுடன் நிகழ்வு சிறப்புற நிறைவுபெற்றது.

தாயகத்தில் இருந்த கல்லறைகளை அப்படியே பிரதியெடுத்ததுபோல், திறந்தவெளியை, உணர்வுததும்பும் மாவீரர் துயிலும் இல்லமாக வடித்தெடுத்த தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான உழைப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

அதிலும் சில மணிநேர இடைவெளியில், ஒரு தளமாற்றமே இடம்பெற்றிருந்தபோதும், மிகச் சிறப்பான முறையில், ஒழுங்கு பிசகாமல், அதிசயிக்கத்தக்கவகையில், அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டமை நிகழ்வுக்கு வந்த பலராலும், வியந்து பாராட்டப்பட்டது. இதற்காக, பாடுபட்ட அனைவரும் நிட்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே.

நிகழ்வுகள், பிற்பகல் நான்கு மணிக்கு நிறைவு பெற்ற பின்னரும், தொடர்ச்சியாக மக்கள் வருகைதந்து மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தியபடியே இருந்தனர்.

தவிர்க்கமுடியாத வகையில் இடமாற்றம் என்பது இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும், மக்களுக்கு உரியநேரத்தில் அதை தெரியப்படுத்த முடியாமல் போனமை குறித்தும் நாம் மக்களிடம் வருத்தத்துடன் மன்னிப்பைக் கோருகின்றோம்.

எமது சக்திக்கு அப்பாற்பட்ட முறையில் இவை நடந்துவிட்டன என்பதை எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். இந்த திடீர் மாற்றங்களால், மக்களுக்கு ஏற்பட்ட அலைச்சல்கள், மன உளைச்சல்கள் மற்றும் ஏமாற்றங்களுக்கு, மீண்டும் வருத்தம் தெரிவிப்பதுடன், மன்னிப்பையும் கோருகின்றோம். இந்நிகழ்வுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் எமது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து புறப்பட்டுவரும் நன்றிகள் உரித்தாகட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு- பிரான்ஸ்


0 Responses to பிரான்சில் தாயக மாவீரர் துயிலும் இல்லத்தைத் தரிசிக்கக்​கிடைத்ததுபோ​ல் உணர்வெழுச்​சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com