Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்று நிலத்தில்... இன்று புலத்தில்!

பதிந்தவர்: தம்பியன் 29 November 2012


நவம்பர் கடைசி வாரம்...நாசப்படுத்தும் நாட்டில் இருந்து விடு​பட்டு, விடுதலைக் காற்றை சுவாசிக்க ஈழத் தமிழர்கள் உறுதி எடுத்துக்கொள்ளும் காலம். 'இதுவரை இறந்த மாவீரர்களே... உங்கள் வழித்​தடத்தில் நாங்களும் வருவோம்!’ என்பதே ஒற்றை வரி உறுதிமொழி.

30 ஆண்டுகளைக் கடந்த ஈழ விடுதலைப் போராட்டம் இதுவரை தாய் நிலத்தில் நடந்தது. இப்போது தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் நடக்கிறது!

'பூமிப்பந்திலே ஈழத் தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும், நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமைபெருமைகளை எல்லாம் அழித்து, தமிழ் ஈழத் தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்து விட்டு ராணுவ பலத்தால் சிங்களம் தனது இறையாண்மையைத் திணித்துவிடத் துடிக்கிறது.

எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழர்களின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை தொடர்ந்து போராடு​வோம்.’

 - இது 2008-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆற்றிய மாவீரர் தின உரையின் இறுதி வாசகங்கள்.

சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக முப்படைகளுடன் போராடிய ஈழத் தமிழ் மக்கள், இப்போது அனைவருமே படைகளாக மாறி போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அன்று ஈழத்தில் நடந்ததுகூட மறைக்கப்பட்டது. ஆனால், இன்று ஐ.நா. வரை எதிரொலிக்கிறது. அன்று உலக நாடுகள், ஈழப் பிரச்னையைக் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் இன்று உலகமே இரண்டாக நின்று நிலைப்பாடு எடுக்கிறது.

 2009-ம் ஆண்டு வரை 'தீவிரவாத அமைப்புக்கு எதிரான போர்’ என்று நினைத்த பல நாடுகள், அதற்குப் பின் உண்மையை உணர்ந்து, 'இது ஓர் இனத்துக்கு எதிரான போர்’ என்ற முடிவுக்கு வந்தன. மொத்தத்தில் உள்ளூர்ப் பிரச்னையை உலகப்பிரச்னையாக நகர்த்த, விடுதலைப் புலிகளின் போராட்டம் பயன்பட்டு இருக்கிறது.

விடுதலைப் புலிகளில், முதலாவது வீரச்சாவு அடைந்தவர் சங்கர். அவர் தனது மூச்சை நிறுத்திய நாள் நவம்பர் 27. அதையே மாவீரர் தினமாக 1989-ல் பிரபாகரன் அறிவித்தார். அதுவரை அந்த அமைப்பில் 1,207 போராளிகள் இறந்து போயிருந்தனர். 'எந்தப் போராளிக்கும் தனித்தனியாக நினைவு நாள் கொண்டாடக் கூடாது’ என்று பிரபாகரன் அறிவித்தார். ''எமது போராளிகளை நினைவுகூரும் தினத்தை ஒரே நாளில் நடத்துவதால், எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம்.

வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாக மாறி அழிந்து விடும்'' என்று சொல்லி மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இதுவரை அழிந்திருக்கக்கூடும். மூன்று லட்சம் தமிழ் மக்கள் பலியாகி விட்டனர். அகிம்சைப் போராட்டங்களில் 30 ஆண்டுகளும், ஆயுதப் போராட்டங்களில் 30 ஆண்டுகளும் கடந்து​விட்டன.

ஆனாலும், போர்க் குற்றவாளிகள் தப்பியபடியே இருக்கிறார்கள். ஆனால், இறுதி நிலவரம் இப்படியே இருக்காது என்பதற்கு உதாரணமே ஐ.நா-வில் நடக்கும் விவாதங்கள்!
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகத் தாக்கல் ஆன தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தன. தீர்மானத்தை எதிர்த்தது 15 நாடுகள்.

இவர்களும் இலங்கை செய்தது சரி என்று நியாயப்படுத்துபவர்களாக இல்லை. தீர்மானத்தைக் கொண்டுவந்த அமெரிக்காவைப் பிடிக்காதவர்களே இதில் பெரும்பான்மையோர். அந்த அடிப்படையில் பார்த்தால், இலங்கையில் வேண்டுமானால் தமிழன் அனாதையாக இருக்கலாம். ஆனால் ஐ.நா-வில், இலங்கையின் நிலைமைதான் அது.

போர் நடந்த நேரத்தில் ஐ.நா. அலுவலர்களை விரட்டி, அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து, அதன் செயலாளருக்கு எந்தத் தகவலும் சொல்லாமல் மறைத்து, போர் முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து சண்டையே நடக்காத இடங்​களுக்கு ஹெலிகாப்டர் பயணமாக அழைத்துச் சென்று, அவருக்கு எதிராக இலங்கை அமைச்சரே உண்ணாவிரதம் இருந்து... என்று ஐ.நா-வை மதிக்காத நாடாகவே இலங்கை நடந்து கொண்டது.

இது ஒருபுறம் என்றால், தன்னுடைய அதிகாரம் எதையும் பயன்படுத்தாமல் வெறுமனே வேடிக்கை பார்த்த ஐ.நா-வின் அலட்சியமும் இன்னொரு பக்கம் அம்பலமாகி இருக்கிறது. லட்சக்​கணக்கானவர்களைக் கொன்றவரும், அதை வேடிக்கை பார்த்தவரும் உலக மனசாட்சியின் முன் மண்டியிட்டு நிற்கின்றனர்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைப்படி, 40 ஆயிரம் தமிழ் மக்கள் இறுதிக் கட்டப் போரில் இறந்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டு உள்ளது. முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசு முகவர் அலுவலகக் குறிப்பின்படி 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வன்னியில் இருந்த மக்கள் தொகை 4 லட்சத்து 29ஆயிரத்து 59 பேர். போருக்குப்பின் இலங்கை அரசு அமைத்த முகா​முக்கு வந்தவர்கள் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 பேர்.

அப்படியானால், மீதமுள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் என்ன ஆனார்கள் என்பதை இலங்கை அரசு சொல்லியாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. ஆயுதங்களே இல்லாமல் சூழ்ந்துள்ள நெருக்கடி இது!

கோப்பாய் என்ற இடத்தில் ஆயுதத்துடன் நின்ற மாலதியை நோக்கி ராணுவம் சுடத் தொடங்கியது.  ராணுவத்துக்கு மிகஅருகில் நின்று மாலதி சுட்டுக்கொண்டு இருந்தார். திடீரென அவரது காலில் காயம்பட்டது. 'நான் காயப்பட்டு விட்டேன். என் ஆயுதத்தைப் பிடியுங்கள். என் ஆயுதத்தைக் கொண்டுபோய் அன்னையிடம் கொடுங்கள்’ என்றார். 'என் ஆயுதம் பத்திரம்.

என்னை விட்டு​விட்டு ஆயுதத்தைக் கொண்டுபோ’ என்று தனக்குப் பக்கத்தில் இருந்த விஜிக்கு உத்தரவு போட்டார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதைவிட ஆயுதத்தை காப்பாற்றினால், அது தன் மக்களைக் காப்பாற்றும் என்று நம்பிக்கையோடு எத்தனையோ மாலதிகள், சங்கர்கள் இறந்துபோனார்கள். அவர்கள் லட்சக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் ஈழம் என்ற விதையை விதைக்கச் செய்ய மூச்சை​விட்டனர். அன்று, இரும்பு ஆயுதம் இருந்த கை​களில், இன்று அறிவு ஆயுதமாய் ஐ.நா. அறிக்கை இருக்கிறது.

அன்று, தமிழர்கள் மட்டுமே சில சதுர கிலோ​மீட்டர் பரப்புக்குள் நின்று போராடினர். இன்று, பல தேசங்கள் சேர்ந்து ஒரு தேசத்துக்காக வாதாடுகிறது.

அடுத்த நவம்பருக்குள் நல்லது நடக்க, உறுதி எடுத்துக் கொள்கிறார்கள் தமிழர்கள்!

- ப.திருமாவேலன்

0 Responses to அன்று நிலத்தில்... இன்று புலத்தில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com