Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றத்தில், அரசிற்கு பதிலளித்தும், சர்வதேசத்தை நோக்கி சமகால வெளிநாட்டமைச்சர் தொடரும் பரப்புரைக்கும் குற்றச்சாட்டிற்கும் பதிலடி கொடுக்கவும், சமாதான இணக்கத்திற்கு கூட்டமைப்பினர் முரணானவர்கள் அல்ல என்பதை பேச்சு ரீதியான உடனபாட்டின் வாயிலாக வெளிப்படுத்தவும்,

புலிகளின் கூட்டாளி என்ற, அரசின் குற்றச்சாட்டைத் தகர்க்கவும், சர்வதேச சட்டங்களையும், தடைகளையும் தாயகத் தமிழ் இனமாவது “மீறாது” மதிக்கிறது என்பதைக் நிரூபணம் செய்யவும் தேவைப்பட்ட திரு. சம்பந்தன் அவர்களது சூழ்நிலை சார் உரையைப் பாராளுமன்றப் பதிவேட்டிலிருந்து பெற்று அது அறிஞர் ஒருவரால், மொழி பெயர்க்கப்பட்டதை வாசித்த பின்னரே இது எழுதப்படுகிறது.

உலகிலேயே கடினமாக பணி அரசியல்
அதுவும் ஜனநாயக விழுமியங்களிற்குட்பட்டு சகல மட்டத்தினரையும் உள்ளடக்கி நகர்வது அதை விடக் கடினம்.
புத்திஜீவியுடனும், பாமரனுடனும் ஒரே நேரத்தில் அனைவரும் புரியும் வண்ணம் பேச வேண்டிய ஆற்றல் அரசியல்வாதிக்கு தேவை.

கூட்டமைப்பின் அரசியலானது, ஐநா மன்றை மையமாகக் கொண்டு, அங்கு அங்கத்தவராகவுள்ள பன்னாட்டு அரசுகளை நோக்கியதாக நேர்த்தியாக வடிவமைக்கப்படுகிறது என்பதை முதலில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

கொழும்பை நோக்கிய தமிழர் அரசியல், பின்பு இந்தியாவை நோக்கி இன்றளவில் ஐநாவை எட்டியுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள தமிழ்க குழுக்கள் எவையும் அதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல.

பலன் மட்டுமல்ல, பதிலோ சந்திப்போ அற்ற சிந்திப்பற்ற உணர்ச்சி மய அரசியலையும் ஆர்ப்பாட்டங்களையுமே அவை தொடர்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் யார் இனப்பற்றை வெளிப்படுத்தி அல்லது பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பத்தினரை வசப்படுத்துவது என்ற போட்டியிலேயே இறங்கியுள்ளன.

இங்கிலாந்தில் தொடர்ந்த போராட்டத்திற்கு கிடைத்த பலனோ பதிலோ தான் என்ன? தாங்கள் தடை போட்ட அமைப்பை , தங்களது அரச முடிவை மதியாது, ஏற்கும் படி திணிக்கும் பணிவற்ற இனம் தமிழ் இனம் என்ற கணிப்பே இன்று வரை பன்னாட்டு அரச மட்டங்களிலும் தொடர்கிறது.

எனவே தான் திரு சம்பந்தன் அவர்கள், புலிகள் விட்ட சில தவறுகளையும் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இது பற்றி எல்லாம் சிந்தியாது குற்றஞ்சாட்டுவது இலகு. ஆனால் அது நியாயமாகாது.

கூட்டமைப்பினராகிய நீங்கள் புலிகளை ஆதரித்து அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்று கூக்குரலிட்டதால், அவர்கள் எங்கள் சகாக்களையும் சுட்டவர்கள் என்று சம்பந்தன் கூற வேண்டியேற்பட்டிருக்கலாம்.

எனவே சமய, சந்தரப்பம் என்னவென்று பாராது பேச்சின் சில பகுதிகளை மட்டும் மேற்கோள்காட்டி அபாணடமாக பழி சுமத்துவது ஊடக தர்மமுமாகாது தனி மனித கண்ணியமுமாகாது. இது இன ஆரோக்கியமானதும் அல்ல.
புலிகள் இயக்கத்திற்கு சுமார் முப்பது ஆண்டு கால வரலாறு உண்டு. அதன் செயற்பாடுகள் பல உலக நாடுகளினால் கண்டித்து தடை செய்யப்பட்டவை.

புலிகள் என்றதும் எந்த நாட்டுத் தலைவரிற்கும் ஞாபகத்திற்கு வருபவர் ராஜீவ் காந்தியே. அவர்களது பார்வையில் புலிகள் கொலைகாரர்கள் எனபதே பதிந்துள்ளது. நீலன் திருச்செல்வம், பிரேமதாசா, என இது தொடர்ந்து செல்கிறது. மாத்தையா சம்பவம் காரணமாக இது மேலும் வலுப்பெறுகிறது.

அதே சமயம் எம்மைப் பொறுத்தவரை புலிகள் என்றால் அவர்கள் தியாகிகள். நாட்டைக் காக்க தயங்காது உயிரைக் கொடுப்பவர்கள் என்பதே முதலில் வரும் அம்சமாகும்.

இந்த முரண்பாட்டுச் சிக்கலை நாம் புரிந்து கொள்ளாது உலகே உனக்கு கண் இல்லையா? என்கிறோம். பிறநாட்டு அரச தலைமைகளோ, கொலை செய்தவர்களை நாம் எப்படி சந்தித்துப் பேசுவது என்று கேட்கிறார்கள். இதனால் அவர்கள் எங்கள் குறைகளையும், நியாயங்களையும் முறைப்பாடுகளையும் கேட்கும் வாய்ப்பு தவறிப் போகிறது.

ஆகவே புலிகளின் சில மட்டங்கள் சில காலங்களில் செய்த பிழைகளினால் அனைத்துப் புலிகளும் கொலைகாரக் கும்பலாக கருத வேண்டிய ஒரு அவலம் இன்னமும் உலகில் தொடர்கிறது. இதை ஒத்துக் கொள்ளத் தயங்குவது விவேகமும் இல்லை. வீரமும் இல்லை.

இந்த உரை இவ்வளவு சிக்கலாவதிற்கும், வேறு விதமாக பொருள் கொள்ளும் வண்ணம் திசை திருப்பபபட்டதிற்கும் பல பின்னணிகள் உள்ளன.

தேசியக் கொடிக்கு முன்னிருந்தே மாசுபடுத்தும் களங்கப் பணியில் உள்ள நம்மவர் அரசியல்வாதிகளும், இன்னும் ஒரு சில மாதங்களில் ஐநா மன்றைச் சந்திக்க வேண்டிய அரச தரப்பு “ நல்லிணக்க முயற்சியும் “ தான் இந்தப் பேச்சின் தவறான மொழி பெயர்ப்பிற்கு காரணம் என்பதை குறிப்பிட்டுத் தொடர்வோம்.
அரசியலை விமர்சிப்பது இலகு. அதற்கு “கடந்த கால” பத்திரிகைத் தனம் போதுமானதாகும். பாராளுமன்றத்தில் பேச நிகழ்கால எதிர்காலப் பார்வைகளும் அவசியம்.

சர்வதேச நாடுகளின் அனுசரணை புரிந்துணர்வு ஆதரவு அனுதாபம் எதுவும் தேவையில்லை. இல்லை என்றால் இன்றைய தமிழரின் அரசியலை தலையைப் புதைக்காது எவ்வாறு தலைமை தாங்கி செல்ல இயலும் என்ற மாற்றின்றி விமர்சனம் செய்வதும் இலகுவானது.

அரசியல் இயற்கை விஞ்ஞானமல்ல. அதற்கு மாற்று வழியை முன் மொழியாது, ஒரு அரசியல் நகர்வை தவறு என்பது அல்லது அதன் பாதகங்களை மட்டும் பட்டியலிடுவது முறையானதும் அல்ல. சமூக விஞ்ஞான முடிவுகளில் சாதகம் பாதகம் ஆகிய இரண்டும் இருக்கும். எனவே எதுவும் தவறா இல்லையா என்பதை காலந்தான் காட்ட வேண்டும்.

தவிர, தன் தரப்பு பலமேயற்று, பாதுகாப்பேதுமற்ற நிலையிலுள்ள போது சர்வதேச மத்தியஸ்தம், கண்காணிப்பு, கவனிப்பு, பார்வை எதுவுமற்ற நிலையில், அதுவும், இலங்கையில் இன்று தமிழர் அரசியலை தமிழரிற்காக தமிழர் நடாத்துவது ஒரு நெருக்கடி மிக்க பணியாகும்.

நெருக்கடி காலத் தலைமையையும், எதிர்காலத்தை நெருக்கடிக்குள் தள்ளும் தலைமைகளையும் ஒப்பிட்டு கணிப்பிடுவது தவறு. போரட்டத் தலைமைப் போக்குப் போலவே ஜனநாயகத் தலைமையும் நகர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.

அமெரிக்காவை ஆண்ட ஒரு குடும்பம் எதற்கெடுத்தாலும் போர் தொடுத்து அமெரிக்காவையும் வல்லரசு நிலையிலிருந்து இறக்கி நாட்டின் பொருளாதாரத்தையும் வீழ்த்தி விட்டு வெளகரியமாக சென்று விட்டது. ஒபாமா தான் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

கனடாவில், ஒரு மாகாணத்திலும் ஒரு கட்சி மாகாண நிதி நிலையை மோசமாக்கிவிட்டு, பின்னர் எதிர்க்கட்சி அரசமைத்த பின்னர், அதன் நிதித் திட்டமிடல்கள் மோசமென குறை கூறிக்கொண்டிருந்தது.

தந்தை செல்வா தமிழினத்தை ஒரு பலவீனமாக நிலையில் திரு அமிர்தலிங்கத்திடம் கையளித்து விட்டு மறையவில்லை.

அதற்கு முன்னைய தலைமைகளும் எதையும் பெறாவிடினும் ஒரு மோசமான நிலையில் பிரதேசத்தை கையளிக்கவில்லை.
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் நெருக்கடி கால தமிழ்த் தலமையைச் சந்தித்தோரில் சம்பந்தரும் ஒருவர். அதே சமயம், நிலவிய சிக்கலான முரண்பட்ட அரசியற் கால நிலைக்குள்ளும் , தனிப்பட்ட முறையில் சிந்திக்காது, இன ரீதியில் சிந்தித்து, விடுதலைப் புலிகளுடன் ஒத்துழைத்த நிலைமை சார் தலைமைத் தன்மை கொண்டவர் திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தர் அவர்களே.

அமரர் திரு அ அமிர்தலிங்கம் இதனைச் செய்திருந்தால் ஒரு வேளை இன்றைய நிலையே வேறுவிதமாக இருந்திருக்கவும் கூடும். இதனையே ஆங்கிலத்தில் “சிற்றிவேஜனல் தலைமைத்துவம்” என்பர். இது சந்தர்ப்பவாதத்தினின்றும் வேறுபட்ட நிலைமை சார் தலைமையாகும்.

மறு தரப்பில் பிரேமதாஸ அவர்களை குறிப்பிடலாம். மாற்றவே முடியாத நிலைமைகளுடன் முட்டி மோதி மாள்வதை விட, நிலைமைக்கேற்ப வளைந்து நெளிந்து தருணம் வரும்போது நிமிர்தல் அரசியலிற்கு மிக அவசியம்.

புலம்பெயர் தேசங்களில், குறிப்பாக கனடாவில் சம்பந்தரிற்கு எதிரான விஷமத்தனமான பரப்புரைகள் பலமான ஊடகங்கள் வாயிலாகவே என்றோ தொடங்கப்பட்டன. ஆனால் அவை கைகூடவில்லை. பின்னர் தேசியக் கொடி பிரச்சனையைக் கிளப்பி தமிழரை கொதித்தெழ வைத்தார்கள். அதுவும் ஓய்ந்து விட்டது.

காரணம் கட்சி அரசியல் ஆதரவானது உணர்ச்சி வழி மயமானதல்ல. இன்னமும் முதியோரது பூரண ஆதரவும், சுமார் நாற்பது வயதிற்கு மேற்பட்டோரின் கணிசமான ஆதரவும் வெளிநாடுகளில் கூட்டமைப்பிற்கு உண்டு.

தமிழரசுக் கட்சியினதும், பழைய தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் மகிமையை காணவும், உணரவும், வாய்ப்பற்ற, பின்னைய சந்ததியினரும், முன்னைய அரசியலைப் போராட்டமாக மாற்ற வேண்டிய காலத்தில் கற்பிக்கப்பட்ட மாசுகளும் தான் இவர்கள் ஆய்வின்றி முடிவுப் பாய்ச்சலிற்குட்படக் காரணமாகும்.

ஜனநாயகத்தின் வன்மறையற்ற அரசியலையும் அதன் மாண்பை உணராத போராட்ட கால நம் தலைமுறையினரும், இலகுவாக இவற்றை இனங்காண இயலாது.

தவிர, சர்வதேச அரசியல் தளம், அதன் நடைமுறைகளை புரியாதவர்களே யாரும் ஒரு இனத்தை பிரதிபலிக்கலாம் என நினைக்கிறார்கள். அதற்கு பாரிய அனுபவமும், ஆற்றலும் ,அறிவும் ஜனநாயகப் பண்புகளும் பக்குவமும் கூடத் தேவை என்பதை அவர்கள் சிந்திப்பதாகவே இல்லை.

அரசியல் என்பதும் போராட்டம் போலவே நகர வேண்டும் என போராட்ட காலத்தில் பிறந்தவர்களும் வளர்ந்தவர்களும் கருதுவதால் தான் வெளிநாடுகளிற் கூட இளையோரால் சர்வதேச அரசுகள் எதையும் இன்று வரை எட்டிக் கூடப் பார்க்க முடியவில்லை.

பழைய தமிழ்த் தலைமைகள் எதையும் யாரும் அரசியல் தெரியாதவர் என்று எதிர் அரசியல் மேடையிற் கூட பேசியதில்லை. சேர் பொன் இராமநாதனிலிருந்து, அமரர் ஜீ ஜீ பொன்னம்பலம், தந்தை செல்வா , தளபதி அமிர் வரை நிலவிய பல்துறை ஆற்றல் அரசியல் ஞானம் பற்றி அயல் நாட்டு உலகத் தர தலைமைகளே தங்கள் சான்றிதழ்களை வழங்கியுள்ளன. அமரர் சுந்தரலிங்கம் அடங்கலாக அனைவருமே ஏதோ ஒரு துறையில் உலக தரம் பெற்றவர்களே.

அந்த வரிசையில் சாமான்யர்கள் நிற்கலாம். ஆனால் நிரப்பமுடியாது. நம் இனமும் மீண்டும் நிலைக்க முடியாது. மேலும் அழியவே வாயப்புண்டு. வலிமையற்ற போது வளைந்து நெளிந்தவர்களே ஈற்றில் வெற்றி வாகை சூடியுள்ளமை வரலாறு.
இதற்கு பிந்திய உதாரணம் திரு ஜீ எல் பீரிஸ் அவர்களாவர்.

தாய்லாந்தில் அவர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களை நாடி நடந்ததை இங்கு வெளிநாடுகளில் வெளியாகும் கணணிகள் கேலி செய்தன. குடையுடன் நடந்த இங்கிலாந்தின் பிரதமர் தான் பின்னர் கிட்லரை வீழ்த்தினார்.

இந்தப் பாராளுமன்ற உரையையும், அங்கு எழுந்த தடைகள், குறுக்கீடுகள், மற்றும் கேள்விகள் பற்றியோ எந்தச் சந்தரப்பத்தில் இவை பேசப்பட்டது என்பதை வாசித்து அறியாது அப்படியா சொன்னார் ? ஏற்க முடியாது என்பது விவேகமாகாது.

தங்களது பிரதம நீதியரசரரையே குற்றஞ் சாட்டும் சபையில் புலியை குற்றமற்றது என்று யார் தான் வாதிட முடியும். தமிழராகிய எங்களிலேயே பிற இயக்கத்தினர் ஒரு புறம் புலி இயகத்தினர் மறு புறம் புலிகள் அநியாயமாக பலரைக் கொன்று விட்டதாகக் கூறும் போது, சம்பந்தர் மட்டும் எப்படி அவற்றை மறுப்பது?

kuha9@rogers.com

0 Responses to சம்பந்தரின் நிலைமை சார் தலைமைத்துவம் - பூநகரான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com