விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிகையில்,
கடந்த சில நாட்களாக ஈழத்தில் சிங்கள இனவெறியாட்டம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை
அறிந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண
நகரில் புகுந்து 25க்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள காவல்துறை கைது
செய்துள்ளது. அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரமும்
வெளியிடப்படவில்லை.
மாவீரர்
நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில்
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்குள் புகுந்த சிங்கள காவல்துறையினர்
அங்கிருந்த தமிழ் மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியது மட்டுமின்றி
பத்துக்கும் மேற்பட்டவர்களைப் பிடித்துச் சென்றிருக்கிறது. அவர்கள் மீது
பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அவர்கள் இருக்கும் இடமும் வெளியில் அறிவிக்கப்படவில்லை.
இதனால்
வெகுண்டெழுந்த தமிழ் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுக்கு எதிராக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலைக்குப் பிறகு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்ததில்லை என்ற
அளவுக்கு மக்கள் அதில் பங்கேற்றுள்ளனர்.
அதைத்
தொடர்ந்து யாழ்ப்பாணம் நகருக்குள் தமிழர்களை வீடு புகுந்து வேட்டையாடும்
நடவடிக்கையில் சிங்கள காவல்துறை இறங்கியுள்ளது. நேற்று முன்தினம் 25க்கும்
மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காவல்துறையால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இராஜபக்சேவின்
போர்க்குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டுவரும் நிலையில், சர்வதேச
நாடுகளின் அழுத்தம் அதிகரித்துவரும் சூழலில் மீண்டும் இனவெறி நடவடிக்கையில்
இலங்கை அரசு ஈடுபட்டிருப்பது எதற்கும் கட்டுப்படாத அதன் போக்கையே
காட்டுகிறது.
ஏற்கனவே
போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென ஐ.நா. உள் அறிக்கை
ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் மேலும் தமிழர்கள் வேட்டையாடப்படுவதை
வேடிக்கை பார்க்கக்கூடாது.
இந்திய
அரசு உடனடியாக இலங்கை அரசை எச்சரிக்க வேண்டுமெனவும்
பொய்க்குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்படிருக்கும் மாணவர்களையும்
தமிழ் மக்களையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை
விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது’’என்று கூறியுள்ளார்.
0 Responses to ஈழத்தில் சிங்கள இனவெறியாட்டம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது: திருமாவளவன்