Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதை தொடர்ந்து முடங்கியிருந்த கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய்வதற்காக யாழ்.பல்கலைக்கழக துனைவேந்தர், பேரசிரியர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் யாழ்.மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்கவை பலாலி படைத்தளத்தில் சந்தித்தார். அப்போது அங்கு உரையாற்றிய ஹத்துருசிங்க, முப்பது வருட கால அழிவுக்கு வி.புலிகளும் அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழர்களும், பல்கலைக்கழக சமூகமுமே காரணம் என அடிக்கடி சுட்டிக்காட்டியவாறு பேசியுள்ளார்.

இதன் போது குறுக்கிட்ட பேராசிரியர் சிறீ சற்குணராஜ தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகவே புலிகள் தோன்றினர். இன்று மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது என்றால் அந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு  இடித்துரைத்தார்.

1981 ஆம் ஆண்டு நீங்கள் படையில் இணைந்தபோது அப்போது இராணுவத்தின் எண்ணிக்கை வெறும் 12ஆயிரம் மட்டுமே என்று கூறினீர்கள். அந்தக் காலத்தில் புலிகளின் எண்ணிக்கைகூட 20 பேர் வரையில் மட்டுமே. அவ்வாறு சொற்ப எண்ணிக்கையாக இருந்த புலிகளை பெருகவைத்தமைக்கு காரணம் தமிழர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டுமல்ல, தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்ட மூலப் பிரச்சினையும், சிங்கள அரசியல்வாதிகளுமே காரணம்.

இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்துவிடும் நிலையில் இருந்தபோது ஆயுதங்களை வழங்கி புலிகளின் அழிவைத் தடுத்தவர் அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸ தான். இந்த நிலையில் தமிழ் மக்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே புலிகளை வளர்த்தார்கள் என்று சொல்வது என்ன நியாயம்?

படையினரால் கைது செய்யப்பட்ட விஞ்ஞானபீட மாணவனை நான் தனிப்பட்ட முறையிலும் என்னுடைய மாணவன் என்ற ரீதியிலும் நன்கறிவேன். குறித்த மாணவன் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவன் என்று நீங்கள் கூறுவதை ஒரு போதும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் அவன் அப்படிப்பட்ட மாணவன் அல்லன் என்பது எனக்கு தெரியும்.

நீங்கள் (அரசும் இராணுவமும்) மூலப் பிரச்சினையைத் தீர்க்காமல் விளைவுக்கு மாத்திரம் அதனைக் காரணம் சொல்லி தீர்வு தேட நினைக்கிறீர்கள். ஆனால் மூலப் பிரச்சினையை தீர்க்காவிட்டால்  அதனால் உண்டாகின்ற   விளைவுகள் தொடரவே செய்யும் எனவும் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

எனினும் இதற்கு மறுதளித்து பேசியுள்ள ஹத்துருசிங்க, பிரபாகரன் வருவார் மீண்டும் ஈழவிடுதலைப் போராட்டத்தை நடத்துவார் என்ற கனவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களான சொலமன் தர்ஸானந் ஆகியோர் மாணவர்களை வழிநடத்திய பிரிகேடியர்கள் எனவும், இவர்களை நெடியவன் - விநாயகம் - ருத்ரகுமாரன் ஆகியோரின் கும்பல்கள் பின்னிருந்து இயக்குவதாகவும் கடுமையான தொனியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், ஹத்துருசிங்க அவற்றை கணக்கில் எடுக்கவில்லை என்றும், கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட 4 மாணவர்களின் பெற்றோர்களையும் வெளியெற்றி புனர்வாழ்வுக்கு முன்னர் அவர்களின் விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 Responses to மாணவர்களை விடுவித்தால் தான் பல்கலைக்கழகம் திறக்கப்படும் எனில் அது மூடியே இருக்கட்டும்: யாழ் இராணுவ தளபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com