Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று மலரும் 2013 ஆம் புதிய ஆண்டினை உலகம் நம்பிக்கையுடன் வரவேற்றுக் கொண்டாடும் இத்தருணத்தில் தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும்வாழ் தமிழ் மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.

கடந்த வருடம் 2012 ஆண்டு மலர்ந்தபோது நான் விடுத்திருந்த செய்தியில் 2012 ஆம் ஆண்டு நமக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமையும் எனத் தெரிவித்திருந்தேன்.

நடந்து முடிந்த 2012ம் ஆண்டு அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசாங்கம் சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க ஆரம்பித்த ஆண்டாக அமைந்திருக்கிறது.

2012 மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் அமெரிக்காவின் முன்னெடுப்பில் இந்திய ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை அனைத்துலக மட்டத்தில் அரசியல் ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் 2009 மே க்குப் பின்னர் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட முதற் தோல்வியாகப் பலராலும் வர்ணிக்கப்பட்டது.

இத் தீர்மானம் நமது எதிர்பார்ப்புக்களைத் திருப்தி செய்யக்கூடியதாக அமையாது விட்டிருந்தாலும்கூட சிறிலங்காவினைத் தனது பல்வேறு குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்தின்முன் பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

2012 ல் தமிழீழத் தாயகத்தில் நமது மக்கள் நேரடி அரசியல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுiணையாகப் புலத்தில் தோழமை வெளிப்பாட்டுப் போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்குமெனவும் கடந்த வருடப் புத்தாண்டுச் செய்தியில் வெளிப்படுத்தியிருந்தேன்.
2012 தாயகத்தில் நேரடி அரசியல் போராட்டங்கள் முளைகொண்ட ஆண்டாக அமைந்திருந்தது கண்டு நாமெல்லாம் துணிவுகொள்கிறோம்.

2013 ஆம் ஆண்டும் ஈழத் தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை போராட்டம் திருப்பம் காணும் ஆண்டாகவே அமைய வேண்டும்.
இவ் ஆண்டில் அனைத்துலக அரங்கில் சிங்களத்தை மேலும் தனிமைப்படுத்துவதில் நாம் காத்திரமான காலடிகைள எடுத்து வைத்தாக வேண்டும்.

ஈழத் தாயகத்தில் சிங்களத்தின் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் இவ்வாண்டு மேலும் வலுவடைய வேண்டும்.

இவ் ஆண்டின்போது 1983 யூலை தமிழ் இனப்படுகொலையின் 30வது வருட நினைவுகள் எமது கூட்டு நினைவினில் எழுவது தவிர்க்க முடியாதது. யூலை இனப்படுகொலையும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பும் சிங்களத்தின் ஆக்கிரமிப்பின் மத்தியில் தமிழர் தேசம் அவர்களுடன் இணைந்து வாழமுடியாது என்பதனைப் பச்சையாக வெளிப்படுத்திய இரத்த சாட்சியங்கள்.

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு இரு அரசுகள் தான் தீர்வுமுறை என்பது குறித்து அனைத்துலக சமூகத்தின் கூடுதல் கவனத்தை ஈர்க்கும் வகையிலான செயற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொள்வது என்பது 2013 ஆம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான செயற்திட்டமாக அமைகிறது.
இரு அரசுகள் தீர்வுமுறையானது அனைத்துலக அரசுகளின் நலன்களுடன் ஒத்துவரக்கூடியது என்பதனையும் சிங்கள மக்களின் நலன்களுக்கும் உதவக்கூடியது என்பதனையும் நான் எனது 2012 ஆம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியில் வெளிப்படுத்தியிருந்தேன்.

இன்றைய புத்தாண்டுச் செய்தியிலும் நான் இதனையே வலியுறுத்த விரும்புகிறேன்.

புதிய ஆண்டில் போராட்டம் திருப்பம் பெற வேண்டும்! அனைத்துலக அரங்கில் சிங்களம் மேலும் தனிமைப்படுத்தப் படவேண்டும்!!

ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் சார்ந்தவர்கள் என்ற வகையிலும் சிங்களத்தின் இனஅழிப்புக்கு உள்ளாகும் மக்களினம் என்ற வகையிலும் அனைத்துலகச் சட்டங்கள் தரும் உரிமையின் அடிப்படையில் தம்மை ஒரு தேசமாகப் பாதுகாத்து வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைத்து வாழ்தல் மட்டுமே அவர்கட்கான தீர்வாக அமையமுடியும்.

இத்தீர்வு முறை இந்தியாவினதோ மேற்குலகினதோ அல்லது உலகின் ஏனைய அரசுகளது நலன்களுக்கோ முரணானது அல்ல. மாறாக உலக அரசுகளின் நலன்களுடன் இத் தீர்வுமுறை ஒத்திசையக் கூடியது.

மேலும் நெடுங்காலமாக ஒற்றையாட்சி அரசாகவே இறுகிப்போயுள்ள சிங்கள அரசு எந்தவித மறுசீரமைப்புக்கும் தன்னை உள்ளாக்கிக் கொள்ள மாட்டாது. இதனால் அதிகாரப் பரவலாக்கம் என்பதோ அல்லது அதிகாரப் பகிர்வு என்பதோ வெறும் பகற்கனவுதான். காலத்தை வீணடிக்கும் நடவடிக்கை தான்.

சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் நட்புணர்வுடன் வாழ்வதற்கும் இரு அரசுகள் தீர்வுமுறை வழிசமைக்கக்கூடியது. ஆனால் இனவாதத்தைக் கக்கியபடி தமிழ் மக்கள் மீதான தமது ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவினைச் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ் மக்களை ஆக்கிரமித்து அடக்கியாளும் சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கூட நசுக்குகிறார்கள். தொடந்தும் நசுக்குவார்கள். தமிழ் மக்களை சிங்கள அரசு ஆக்கிரமிக்கவும் இனஅழிப்புச் செய்யவும் சம்மதம் கொடுக்கும் போது தமக்குத் தாமே விலங்கை மாட்டிக் கொள்கிறார்கள் என்பதனை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று மகிந்த ராஜபக்ச ஆட்சியில் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளும் அப்பட்டமாக மீறப்படுகின்றமை இந்நிலையை நன்கு சுட்டிக் காட்டுகிறது. ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அணுகுமுறையினைச் சிங்கள தேசம் எடுக்கும் வரை சிங்கள மக்களும் விடுதலை அடையப் போதில்லை.

இரு அரசுகள் தீர்வுமுறையின் நியாயப்பாடுகளை வலுப்படுத்தும் வகையிலும், உலகத் தமிழ் இனத்தை இணைத்து ஈழத் தமிழர் தேசத்தின் மென்வலுவை அதிகரிக்கும் வகையிலும், மாறிவரும் இந்து சமுத்திர அரசியல் நிலைப்பாடுகளையும் அவற்றின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாய நகர்வுகளைச் சீரமைக்கும் முகமாவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ் வருடம் மே மாதம் 9, 10, 11 ஆம் திகதிகளின் போது ஒரு அனைத்துலக மாநாட்டினை அமெரிக்காவில் நடாத்தவுள்ளது.

அம் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ சுதந்திர சாசனமும் பிரகடனம் செய்யப்படுகிறது என்பதனை மக்களுக்கு இன்றைய புத்தாண்டு தினத்தில் அறியத் தருகிறேன்.

2013 ம் ஆண்டில் மக்களுடனான எமது அரசாங்கத்தின் தொடர்பாடலை விருத்திசெய்யும் பொருட்டு சர்வதேச மக்கள் தொடர்புத் தொலைபேசி சேவையொன்று +1 (212) 537-4054 என்னும் இலக்கத்தில் தை திங்கள் 14 ம் நாள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மலர்ந்திருக்கும் இப் புதிய வருடம் நமது விடுதலை நோக்கிய பயணத்தில் காத்திரமான காலடிகளை முன்னோக்கி வைக்க உதவும் என்ற உறுதிப்பாட்டுடன் நமது செயற்பாடுகளை அயராது முன்னெடுப்போமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

2 Responses to இரு அரசுகள் தீர்வுமுறையே எமக்கும் சிங்கள மக்களின் நலன்களுக்கும் உகந்தது!

  1. Itha solla nee yar?

     
  2. அனைத்துத் தமிழரும் ஒன்றினைந்து எமது விடுதலையை பெற உறுதியுடன் போராடுவோம். இழந்தவைகள் அதிகம் இனி இழக்க ஒன்றுமில்லை. இனியாவது இவ்வருடத்தில் ஒன்றுபட்டு எம் இனத்தின் விடுதலைக்காய் ஒன்றினைவோம்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com