Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல் காந்தி அறிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் சோனியா காந்திக்கு அடுத்து இந்தியாவின் சக்திவாய்ந்த காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி உத்தியோகபூர்வமாக தெரிவாகியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த இரு நாட்களாக காங்கிரஸ் கூட்டம், கட்சித்தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இதில் தீவிரமாக ஆராயப்பட்டது. இரு நாள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின்னர் இன்று இரவு நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில், ராகுல் காந்தியை கட்சியின் துணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி பரிந்துரைத்தார். இது ஏனையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் புதிய துணைத்தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் எனவும், சோனியாவுக்கு அடுத்தபடியாக கட்சியில் ராகுல் காந்தி செயற்படுவார் எனவும் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி அறிவித்துள்ளார்.

காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் பல இம்முடிவை வரவேற்றுள்ளன. காங்கிரஸ் தொண்டர்கள் இந்த அறிவிப்பை, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக கருதி பட்டாசு, வெடி கொளுத்தி அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக முன்னிறுத்த வேண்டுமென ஜெய்ப்பூர் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
42 வயதான ராகுல் காந்தி 9 வருடங்களுக்கு முன்னர் தீவிர அரசியலில் உள்நுழைந்தார்.  காங்கிரஸில் இருக்கும் 11 பொதுச்செயலாளர்களில் ஒருவராக இதுநாள் வரை ராகுல் காந்தியும் செயற்பட்டு வந்தார்.

இதேவேளை ராகுல் காந்தியை காங்கிரஸ் துணைத்தலைவராக அறிவித்தமையால் எவ்வித பயனும் கிடைக்க போவதில்லை என பாஜக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு துணைத்தலைவராக ஒருவர் நியமிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக ராஜீவ் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்த போது அர்ஜுன் சிங்கும், சீதாராம் கேசரி தலைவராக இருந்த போது ஜிதேந்திரா பிரசாதாவும் இவ்வாறு துணைத்தலைவரளாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்திரா காந்தியின் காலத்தில், கமல்பதி திரிபாதி ஆக்டிவ் தலைவராக செயற்பட்டிருந்தார்.

2004ம் ஆண்டு அமெதி தேர்தல் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான ராகுல் காந்தியை 2007ம் ஆண்டு சோனியா காந்தி, பொதுச்செயலாளராக நியமித்திருந்தார்.

0 Responses to காங்கிரஸின் துணைத் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com