டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது
டெல்லி மருத்துவ மாணவி பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட
சம்பவம் போன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற
பலாத்கார சம்பவம் ஒன்று தற்போது ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 20ம் திகதி, பேருந்துக்காகா காத்திருந்த 11 வயதான சிறுமி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பலவந்தமான முறையில் காரில் இழுத்து சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். நீண்டநேரத்திற்கு பிறகு குற்றுயிராய் போராடிக்கொண்டிருந்த சிறுமியை சிலர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அப்பெண்ணுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மருத்துவர்கள் குழுவினர் கருத்து தெரிவிக்கையில் அவரது பாலியல் உறுப்புக்கள் மோசமாக சிதைக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் அவர் உடல் கழிவு அகற்றும் பாதை அடைக்கப்பட்டிருந்ததாகவும் கடந்த நான்கரை மாதங்களாக பல பாரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இப்பெண்ணை காப்பாற்ற போராடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்னமும் ஒரு வாரத்தில் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படவுள்ள போதும் அவரது மனநிலையை இயல்பாக தக்கவைத்திருக்க அவர் போராட வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பீகாரை சேர்ந்த இப்பெண்ணின் குடும்பத்தில் இவருக்கு 6 சகோதரர்கள். அதில் ஒருவர் மட்டுமே ஆண் சகோதரர். தந்தை இறந்துவிட்டதால் இக்குடும்பம் சீகாருக்கு குடியேறியுள்ளது. இச்சம்பவம் நடந்த பின்னர் காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்யாது அலட்சியம் காண்பித்ததாகவும், சமூக அமைப்புக்கள் சில போராட்டம் நடத்திய பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இது குறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கொலட்டிடம் பேசிய பிறகே நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 6 பேரில் 2 பேர் ஏற்கனவே ஜாமினில் வெளிவந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பிருக்கலாம் என்பதால், பொலிஸார் இவ்வழக்கில் அதி சிரத்தை காட்டவில்லை என பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற வைக்க முயற்சித்துள்ளனர். எனினும், அப்பெண்ணின் சகோதரர்கள் அதை வாங்க மறுத்துவிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த பலாத்கார சம்பவத்திற்கு பிறகு அவரது மற்றுமொரு சகோதரிக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தமும் தடைபட்டுவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது போன்று உத்தர பிரதேச மாநிலம் ஷன்ந்தாவுலி மாவட்டத்திலும் ஒரு பெண் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் நடந்த பிறகாவது காவல்துறையினர் மாநில அளவில் விழிப்புணர்வுடன் செயற்பட தொடங்கியிருந்தாலோ அல்லது நாடு முழுவதும் இது தொடர்பிலான விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியிருந்தாலோ, டெல்லியில் நிர்பயா பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிரிழக்கும் சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் சமூக நோக்குனர்கள்.
0 Responses to டெல்லியை போன்று ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ள சீகார் பாலியல் பலாத்கார சம்பவம்!