அதை நிறைவேற்ற வழிசெய்த தமிழக மாணவர்களோ வணக்கத்திற்குரியவர்கள்…
தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென மாணவர்கள் போராட்டம் நடாத்த… அதே கோரிக்கையை தமிழக முதல்வர் சட்டசபை தீர்மானமாக முன்வைத்து நிறைவேற்றியுள்ளார்.
மேலும் முதல்வர் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் மூலமாக வேண்டுதல் கொடுக்க.. அதற்கு மன்மோகன் சிங் பதில் கடிதம் எழுதும், ” கலைஞர் – மன்மோகன் சிங் கண் துடைப்பு கடிதம்” போல இது அமையவில்லை.
மேலும் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுண்சிலுக்கு விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அந்தப் பிரேரணை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.
ஆக.., இந்தியா மூடி மறைத்தாலும்.. முழுப்பூசினியை சோற்றில் மறைத்தாலும்… இந்த விவகாரத்தை முன்னெடுக்க ஐ.நாவுக்கு புதுவழி பிறந்திருக்கிறது.
சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமற்றது என்று நிராகரித்துவிட முடியாது, கொசோவாவில் இதுபோன்ற சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது, அது தனிநாடாக போனது, சேர்பியா எதிர்த்தது பின் அடங்கிக் கொண்டது.
கொசோவா தனி நாடாவதற்கான வாக்கெடுப்பு வந்தபோது அதைக் குய்யோ முறையோ என்று எதிர்த்த நாடுகளில் சிறீலங்காவும் ஒன்று, அதை மதித்தவர் யாரும் இல்லை.
கோசோவாவில் நடந்ததைவிட மோசமான போர்க்குற்றம் புரிந்த சிங்கள இனவாத அரசுடன் தமிழர்கள் சேர்ந்து வாழ முடியாது என்பதை இன்று அறுதியும், உறுதியுமாக எட்டுக்கோடிக்கு மேற்பட்ட தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசே நிறைவேற்றியுள்ளது.
இவ்வளவு காலமும் இலங்கையில் ஒரு தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் உள்ள தமிழரும் தனிநாடு கேட்பார்கள் என்று மத்திய அரசு போலி விளக்கம் கொடுத்து ஏமாற்றி வந்தது.
ஆனால் இப்போது தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுள்ளது, இதன் மூலம் இந்திய நடுவண் அரசு இதுவரை முன் வைத்த போலி நியாயம் சுரத்துக் கெட்டுப் போயுள்ளது.
மேலும் இப்படியொரு தீர்மானத்தை மு.கருணாநிதி தலைமையில் இயற்றியிருந்தால் அது வலுவற்ற தீர்மானமாக போயிருக்கும்.
காரணம் கடந்த காலங்களில் விடுதலைப்புலகளின் போராட்டங்களை வலிமையாக எதிர்த்த செல்வி ஜெயலலிதா இதை முன் வைத்துள்ளார், இதுதான் இந்தப் பிரேரணையின் திருப்பம், வெற்றி, பலம்..!
தீர்மானம் வெளியானதும் அதை எதிர்த்து தற்போது காங்கிரசிற்காக கொக்கரித்துத் திரியும் அரைவாசி அமைச்சர் நாராயணசுவாமி இரண்டு சப்பைக் காரணங்களை முன் வைத்தார்.
01. இதுபோல காஸ்மீரில் இருக்கும் முஸ்லீம்களும் தனிநாடாக போவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தும்படி கேட்டால் என்ன செய்வது..?
02. காஸ்மீரில் இந்திய இராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக குற்றச்சாட்டு வந்தால் இந்தியா அதை எதிர் கொள்ளுமா..?
நாராயணசாமியின் மடைத்தனமான கேள்விகளுக்கான பதில்..
காஸ்மீர் தனிநாடாக போக வேண்டும், அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென்ற தீர்மானத்தை இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசு இயற்றியது..?
இந்திய மண்ணில் தமிழகத்தில் வெடித்தது போன்ற மாணவர் ஆர்பாட்டங்கள் காஸ்மீருக்கு ஆதரவாக எந்த மாநிலத்தில் வெடித்திருக்கிறது..?
நாராயணசாமியின் முதலாவது கேள்வி அவுட்..!
இந்திய இராணுவம் மட்டுமல்ல உலகின் எந்த நாட்டு இராணுவம் போர்க்குற்றம் புரிந்தாலும் குற்றச்சாட்டு ஐ.நாவில் வரும் அதை இந்தியாவானாலும், இஸ்ரேலானாலும் எதிர்கொள்ளவே வேண்டும்.
காரணம் ஈராக்கில் நடந்தது போர்க்குற்றம் என்று சென்ற வாரம் சுயாதீன அறிக்கை வெளியாகியுள்ளது.
குர்டிஸ்தானியரை நச்சுப்புகை அடித்து கொன்று போர்க்குற்றம் புரிந்த சதாம் உசேனை தூக்கில் ஏற்றியது ஏன்..?
யுகோசுலாவிய அதிபர் மிலோசெவிச் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்று சிறைக்கொட்டடியில் தற்கொலை செய்தது எதற்காக..?
ஒரு நாடு குற்றவாளி மற்ற நாடு நிரபராதி என்றால் அது என்ன நீதி..?
போர்க்குற்றம் புரிந்த அனைவருக்கும் தூக்குத்தண்டனையே எதிர்கால தீர்ப்பு..
நாராயணசாமியின் இரண்டாவது கேள்வியும் அவுட்..!!
அடுத்த கேள்வி தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றுள்ளார் சுப்பிரமணியசுவாமி..
குடித்த சாரயத்திற்கு பூர்வபுண்ணிய பலன் கிடைத்ததாக நினைக்கும் குடிகாரன் கல்யாணம் நடக்கும்போது, கலைவிழா நடக்கும்போதும் புகுந்து கொக்கரிப்பான் காரணம் அவன் பேச்சைக் கேட்க ஆளில்லாதபோது அவன் அப்படிச் செய்வது வழமை.
இப்படிப்பட்ட குடிகாரர் போல தன்னை அடையாளம் காட்டவே செல்லாக்காசான சுப்பிரமணியசாமி இப்படி அதர்மமாகப் பேசுகிறார்.
இப்படி பேசாவிட்டால் இவரை ஏன் இந்த இடத்தில் எழுதுகிறோம், சிந்திக்கிறோம்.. இது ஒரு பழைய களிம்பேறிய செப்பு லோட்டா கொள்கை.
இதே சுப்பிரமணிய சுவாமி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டம் ஒன்றில் துப்பாக்கியை எடுத்துக் காட்டி பரபரப்பூட்டிய நிகழ்வு 30 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை யாரும் மறந்துவிட முடியாது.
இதில் எந்தச் சுப்பிரமணியசாமி நிதானமானவர் என்று பார்த்தால் எரிகிற வீட்டில் புடுங்கினது இலாபம் என்று புறப்பட்ட பேர்வழியே இவர் என்பது தெரியவரும்.
இப்படி சுப்பிரமணியசாமிகளும், நாராயணசாமிகளும் ஆடாத ஆட்டம் ஆடினாலும் இப்போது நடக்கும் மாணவர் போராட்டம் இலக்கை தொடப்போவதை இவர்களால் தடுக்க முடியாது.
உலக சமுதாயத்திடம் இரண்டேயிரண்டு கேள்விகள்…
சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு இனியும் தமிழனை ஆள உரிமை இருக்கிறதா..?
140.000 பேரை ஒரு மாதத்தில் கொன்ற கொலைகார சிங்கள இராணுவமா தமிழ் மக்களின் பாதுகாவலர்கள்..?
இந்தக் கேள்விக்கு ஒரேயொரு பதில்..
உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனநாயக ரீதியில் சிங்களவரிடமிருந்து ஒரு வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து செல்வதே நீதியான முடிவாகும்.
இந்தப் பிரேணைக்காக முதல்வரை இலட்சக்கணக்கான மலர்களால் வாழ்த்தலாம்.
எவராலுமே பிறக்க வைக்க முடியாதிருந்த இந்தக் குழந்தையை ஒரு மாதப் போராட்டத்தில் பிறக்க வைத்த தமிழக மாணவர்களின் பாதங்களில் ஒரு கோடி மலர்களை தூவி வாழ்த்த வேண்டும…
அலைகளுக்காக கி.செ.துரை




0 Responses to பிரேரணையை நிறைவேற்றிய முதல்வர் பாராட்டுக்குரிய தலைவர்...