Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழ் உணர்வாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று மாலை சரியாக 17.00 மணியளவில் யேர்மனியின் Wuppertal நகரை வந்தடைந்தார்.. ஏற்கனவே, மக்கள் திரள் நிறைந்து காணப்பட்ட வுப்பர் அரங்கத்தினுள் அவர் நுழைந்தபோது, மக்கள் கரவொலி செய்து அவரை வரவேற்றார்கள்.
சரியாக 18.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், பொதுச்சுடரினை திரு.சிவந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதன் பின்னர் செந்தமிழன் சீமான் அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த வாரம் தீக்குளித்து தன்னுயிரை விடுதலைக்காக அர்ப்பணித்த செல்வன்.
விக்ரம் அவர்களது திருவுருவப்படத்திற்கு அண்ணன் சீமான் அவர்கள் மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

அதன் பின்னர் கூடியிருந்த உறவுகள் மலர், சுடர் வணக்கம் செலுத்தினர். முதலில் தமது உணர்வுகளைக் கவிதையாக வடித்த உறவுகளைத் தொடர்ந்து , அண்ணன் சீமான் அவர்கள் மேடையில் பலத்த கரவொலியொடும் , கொட்டொலியொடும் வரவேற்கப்பட்டார். 

தேசியத்தலைவர் அவர்களது சிந்தனைகளோடு தனது உரையை ஆரம்பித்த சீமான் அவர்கள், தமிழகத்தின் மாணவர் எழுச்சி பற்றி விரிவாக எடுத்துரைத்தார். என்று தமிழகத்திற்கு ஒரு தமிழன் முதலமைச்சராக வருவானோ, அன்றுதான் தமிழனுக்கு விடிவு உண்டாகும் என்றும் , தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது கவனிக்காத இந்திய அரசாங்கம், ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டால், அதீத கவனம் எடுப்பதில் உள்ள பாகுபாடு ஏன் என்று வினவியதுடன், தேசியத் தலைவரின் பாதையில் அணிவகுக்கும் இளைஞர்களுக்கு என்றுமே தடைகள் என்பது கிடையாது என்று கூற , மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

தமிழ் மொழியின் சிறப்புப் பற்றிப் பேசுகையில் , இன்று அனைத்துத் தமிழ் மக்களும் வேற்று மொழிகளைக் கலந்து பேசுவதைத் தவிர்க்குமாறு கூறி, அதற்குச் சில உதாரணங்களையும் கூறிக்கொண்டார். ´´லெமன் சாதம் ரெடி´´ என்பதில் , முறையே லெமன் என்பது ஆங்கிலம்,சாதம் என்பது சமஸ்கிருதம், ரெடி என்பது மீண்டும் ஆங்கிலம் என்று தமிழ் மக்கள் கலந்து கட்டிப் பேசும் கலாசாரத்தை வன்மையாகக் கண்டித்த அவர்,  இனி யாராவது லெமன் சாதம் ரெடி என்று கூறினால், ´´இந்தா உனக்கு ஒரு அடி´´ என்று திருப்பிக் கூறுமாறு நகைச்சுவையாகக் கூற , அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

அதே போல, பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைப்பதைத் தவிர்த்து, வேற்றுமொழிப் பெயர் வைப்பதை தமிழர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக விசனப்பட்ட சீமான் அவர்கள், வாயில் நுழையாத பெயர் வைப்பதைத் தவிர்த்து ,  சிறந்த தமிழ்ப் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்குமாறு வேண்டிக்கொண்டார். தூய தமிழ் பேசாத தமிழனும், தமிழ்ப்பெயர் வைக்காத தமிழனும் தான் , தமிழினத்தின் முதல் துரோகிகள் என்று கூறிய அவர் , முயற்சி செய்து தூய தமிழில் பேசுமாறு வேண்டிக்கொண்டார்.

தான் தேசியத் தலைவரைச் சந்தித்த இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்த சீமான் அவர்கள், தலைவனைச் சந்தித்தபோது தான், உண்மையான விடுதலைக்கான ஒரு வீச்சு தன்னிடத்தில் ஒட்டிகொண்டாதாகவும் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் விரிவாக்கம் பற்றிப் பேசுகையில், ´நாம் விழுந்த இடத்தில் இருந்து எழுவோம் ´´ என்ற கருப்பொருளை உள்ளடக்கியே , மே - 18 அன்று நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப் பட்டதாகவும் , நாம் தமிழர் கட்சியில் சாதி , மத , வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியில் இன்று இணைந்திருக்கும் இளைஞர்கள் , தன்னைவிட வீராவேசம் கொண்டவர்கள் என்றும், அரசியல் திறன் மிக்கவர்கள் என்றும் கூறிய சீமான், இன்னமும் இளைஞர்களை வளர்த்து வருவதாகவும் 
தெரிவித்தார்.

தொடர்ந்து .....
என்னை அழிப்பதே , பல இந்திய நாசகார சக்திகளுக்கு இன்றைய இலட்சியமாக இருப்பதாகவும், அதைப்பற்றி நான் என்றும் கவலைப்படப்போவதில்லை . ஏன் எனில் , சாவு எப்போது வந்தாலும் அது வருவதை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் என்னை விட்டுவைத்தால் ஒரு சீமானோடு தான் மோதவேண்டி ஏற்படும். என்னைக்கொன்றால், இலட்சக்கணக்கான சீமான்களோடு மோதவேண்டிய நிலை நாசகார அரசியல் வாதிகளுக்கு ஏற்படும் . எனவே எது சிறந்தது என்று அவர்களே தேர்ந்தெடுக்கட்டும்.
எத்தனையோ அரசியல் கட்சிகள் ஈழ விடுதலைத் தாகத்தோடு இருக்கலாம். ஆனால், காலையில் ஈழப்போராட்டம், மாலையில் ஈழத்தை எதிர்க்கும் சக்திகளோடு கூட்டம் என்று அவர்கள் அடிக்கும் கூத்தின் காரணமாகவே நான் யாரிடம் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. ஏன் எனில், கூட்டணி வைத்துகொண்டால் , தேர்தல் வேளை வரும்போது, அவர்கள் பண பலம் மிக்கவர்களோடு சேர்ந்துகொள்ள, நான் அனாதையாக நிற்கவேண்டி ஏற்படும் . அதைவிட , நான் ஆரம்பத்திலிருந்தே அனாதையாக நிற்பதே மேல்...!
எமது கட்சி விரைவில் தேர்தலில் போட்டியிடும். ´´ 2015 நிச்சயம், ஈழம் இலட்சியம் ´´ எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் அறியத்தரப்படும் . ஒரு முறை ´´நாம் தமிழர் ´´ கட்சியின் புலிக்குட்டிகள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தால், அதன்பிறகு நாசகார சக்திகளின் ஆட்டம் அவ்வளவுதான். அன்று தெரியும் எமது வீரியம்.
நாம் தமிழர் கட்சியின் கொடியில் ´´ பாயும் புலி ´´ நிறுவப்பட்டிருப்பது ஏன் என்று பலரும் வினவலாம் . புலி என்பது ஒரு தன்மானமுள்ள உயிரினம். வீரியம் கொண்ட உயிரினம். ஓயாது உழைக்கும் உயிரினம் என்பதற்காகவும் , புலியே உலகத்தமிழர்களின் இலட்சினை என்பதற்காகவே அதனை நிறுவினோம்.

தொடர்ந்து கேள்வி நேரம் இடம்பெற்றது ...
கேள்வி 1. அண்ணா, இது கேள்வியல்ல .. எனது உள்ளக்கிடைக்கை. நான் எனது தாய் தந்தையரைக் கூட இதுவரை கண்டதில்லை.. ஆனால் உங்களைக் காண ஆவலாக ஓடி வந்திருக்கிறேன்.
உங்கள் காலில் விழுந்து வணங்கவேண்டும் ..
சீமான் அவர்கள் பதில் : யாரும் யார் காலிலும் விழுவது தவிர்க்கப்பட வேண்டும். நாம் எல்லோரும் சகோதரர்கள். நான் பெரிது நீ பெரிது என்று வாழாது நாடு பெரிதென்று வாழுவோம்.
கேள்வி 2:  புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாம், இன்று போரினால் சிதிலமடைந்த எமது உறவுகளுக்கு உதவும் வண்ணம் எமது உழைப்பை அங்கு அனுப்பிவருகிறோம்.  இந்தவேளையில்; போரில் மடிந்த தமிழர்களுக்காக ஒரு நினைவுத்தூபி அமைப்பதாக இருந்தால் கூட, தமிழகத்திலிருந்து  புலம்பெயர்ந்த தமிழர்களிடம், உதவி கோரப்படுகிறதே.. அது ஏன்..?
சீமான் அவர்கள் பதில்.. (சிரித்துக்கொண்டே ) எங்களிடம் காசு இல்லை ஐயா.. அதனால் கேட்கிறோம். ´´நாம் தமிழர்´´ கட்சிக்காக இதுவரை இருபது கோடி பணம் செலவழித்திருக்கிறோம். அதில் எனது சொந்தப் பணமாக , 25 இலட்சமும், தனது கட்சியிலுள்ள தம்பிகள் கிட்டத்தட்ட 60 இலட்சமும் செலவழித்திருக்கிறோம். மீதிப் பணம் தமிழக உறவுகளால் கொடுக்கப்பட்டது ..(கரவொலி ...) நாம் ஒவ்வொரு முறையும் உண்டியல் ஏந்தும் போதெல்லாம் அவர்கள் கொடுத்துதவுகிறார்கள் .. எனவே உங்களால் முடிந்தால் கொடுங்கள்.. இல்லையேல் அது பாரதூரமான குற்றம் அல்லவே...
கேள்வி 3 :  வணக்கம் சீமான் அவர்களே , நீங்கள் தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர்களுக்காகப் போராடி வருகிறீர்கள் . தமிழகத்தில் இருக்கும் எல்லாக் காட்சிகளையும் இணைத்துப் போராட முயர்சிக்கலாமே ...?
சீமான் அவர்கள் பதில் : தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் , காலையில் என்னுடன் கூட்டம் , மாலையில் ஈழவிடுதலைக்கு எதிரான கட்சிகளுடன் சந்திப்பு என்று அரசியல் செய்கிறார்கள். அது என்னால் முடியாது. அப்படிக் கூட்டணி அமைப்பதாக இருந்தால் , நான் முன்னுக்கு நிற்க , அவர்கள் என் பின்னே நிற்பார்களாயின் , நான் தயார் ..( கரவொலி + சிரிப்பொலி )
கேள்வி 4: வணக்கம் சீமான் அவர்களே ; எம்மை அழித்த ஸ்ரீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை நாம் கொள்வனவு செய்வது தவறு. தமிழகத்தில் இருந்து எமக்கான பொருட்களை ஏற்றுமதி செய்தால் , அந்தப் பணம் சிங்களவர்களைச் சென்றடையாது தடுப்பதுடன் , அப்பணத்தில் தமிழக உறவுகளை வாழ்விக்கலாம் அல்லவா ..?
சீமான் அவர்கள் பதில் : ( அருகிலிருந்த இளைஞர்களை நோக்கி ) தம்பி .. கப்பல் ஒன்று தயார் பண்ணுங்கடா.. அம்மாவுக்கு மரக்கறி இறக்கி விட்டுரலாம் ..( சிரிப்பொலி ) ஆம் .. அம்மா .. தயவு செய்து , இலங்கையின் பொருட்களைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் ..நாம் தமிழகத்திலிருந்து அனுப்புவதற்கான வேண்டுகோளை அதிகரிக்கச் செய்கிறோம் ..
கேள்வி 5: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் , ஆயுத அமைதிக்குப் பின்னர் , ஈழத்திலிருந்து புலம்பெயர் நாடுகளை நோக்கி வந்திருக்கும் போராளிகள் ´´ புலம்பெயர் கட்டமைப்புக்கள் தவறானவை ´´ என்று கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் பின்னால் நின்று செயற்படுவது  தவறா ..?
சீமான் அவர்கள் பதில் : ஈழ விடுதலைக்காக , தேசியத் தலைவரின் கட்டமைப்புகள் உடையாத வண்ணம் நின்று செயற்படுவது சிறந்தது. வந்திருக்கும் போராளிகள் , தேசியத் தலைவரின் சிந்தனைப்படி, அவர் உருவாக்கிய கட்டமைப்புகள் உடையாத வண்ணம் செயற்பாடுவார்களாயின் , நீங்கள் தாராளமாக அவர்களுடன் செயற்படாலாம்.
கேள்வி 6 : நான் ஒல்லாந்திலிருந்து வந்திருக்கிறேன். உங்களைக் காண்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது நாட்டிற்கும் நீங்கள் வரவேண்டும் ....எப்போது வருவீர்கள் ..?
சீமான் அவர்கள் பதில் : நிச்சயமாக ..., எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நாம் ஒல்லாந்து வரவிருக்கிறேன்.. எல்லா நாடுகளுக்கும் போகவேண்டிய தேவை இருப்பதால் , உடனடியாக வருவதற்கு இயலவில்லை.. பர்மாவில் இருந்து ஒரு வயதான மூதாட்டி என்னை அழைக்கிறார். தம்பி ,, நீ இங்கு வா .. இருபத்து ஐந்து இலட்சம் தமிழர்கள் இங்கே இருந்தும் , யாரும் தமிழ் வீரத்துடன் இல்லை.. நீ வந்து இங்கே பேசவேண்டும் என்று அழைக்கிறார்..அவரிடம் செல்லக்கூட இன்னமும் நேரம் அமையவில்லை .. எனவே முடிந்தவரையில் எல்லோரையும் சந்திக்கக முயற்சிப்பேன் ...
கேள்வி . 7 : தமிழகத்தில் தீக்குளித்து உயிரை மாய்ப்பவர்கள் தொகை அதிகமாகிறது .. தயவு செய்து எமது சார்பாக அவற்றைத் தவிர்க்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் ..
சீமான் அவர்கள் பதில் : நாமும் அதைத்தான் வலியுறுத்துகிறோம் . ஆனால் , சில இடங்களில் உணர்வு மேலீட்டின் காரணமாக தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன . எதிர்வரும் காலங்களில் இவ்வாறு நிகழாமல் இருக்க , பரப்புரைகள் மேற்கொள்ள இருக்கிறோம்.
இறுதியாக , சீமான் அவர்களுக்கு நன்றியுரை வழங்கப்பட்டது . அதனைத்தொடர்ந்து , தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் சிறீ இரவீந்திரநாதன் அவர்கள் உரையாற்றினார் . அதன்பின்பாக , நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலிக்க மக்கள் எழுந்து நின்று  கரவொலி செய்தனர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் , நிகழ்வு நிறைவு பெற்றது..
 


















1 Response to செந்தமிழன் சீமான் அவர்கள் யேர்மனியில்...! (படங்கள் இணைப்பு)

  1. Unknown Says:
  2. அண்ணன் சீமான் அவர்களின் புரட்சி பேச்சை நேரில் சென்று பார்த்தேன்.எம் தலைவனின் தம்பி என்பதை 100% உணர முடிந்தது.Ajay.Wuppertal.Germany

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com