கோவை மாவட்டம் காரமடையை
அடுத்த கண்ணார்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ஹேமலதா (வயது
20). இவர் துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் உள்ள செயற்கை வைர தயாரிப்பு
தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்தார்.
வழக்கம்
போல் இவர் இன்று காலை பணிக்கு புறப்பட்டார். மேட்டுப்பாளையத்திலிருந்து
கோவைக்கு செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக
இருந்ததால் பஸ்சில் படிக் கட்டில் நின்று ஹேமலதா பயணித்ததாக தெரிகிறது.
ஆரம்பம்
முதலே பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கி வந்தார். பஸ்சை மெதுவாக ஓட்டுமாறு
பயணிகள் எச்சரித்தனர். இருந்த போதிலும் டிரைவர் தொடர்ந்து பஸ்சை வேகமாகவே
இயக்கி வந்தார். சின்னமத்தம்பாளையம் அருகே வந்த போது முன்னால் சென்ற ஒரு
அரசு பஸ்சை டிரைவர் முந்த முயன்றார். அப்போது திடீரென டிரைவர் பிரேக்
போட்டதால் படிக்கட்டில் நின்ற ஹேமலதா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது பஸ்சின் பின் பக்க டயர் ஹேமலதா மீது ஏறி இறங்கியது.
இதில்
உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஹேமலதா பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து
பஸ்சில் பயணித்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இருந்த
போதிலும் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் தொடர்ந்து வேகமாக அங்கிருந்து இயக்கி
வந்ததாக தெரிகிறது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கடும்
ஆத்திரமடைந்தனர்.
விபத்தை
பார்த்த அக்கம் பக்கத்தினரும் பஸ்சை பின் தொடர்ந்து விரட்டி வந்து மறித்து
நிறுத்தினர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி
விடப்பட்டனர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்களும், பயணிகளும் தனியார் பஸ்
கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பஸ்சுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் பஸ்
கொளுந்து விட்டு எரிந்தது.
தகவல்
கிடைத்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி. மோகன், இன்ஸ்பெக்டர்
சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், செல்வராஜ் ஆகியோர் சம்பவ
இடத்துக்கு வந்தனர். பஸ் கொளுந்து விட்டு எரிந்ததால் வடக்கு தீயணைப்பு
நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அண்ணாதுரை
தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பஸ்சில் எரிந்த தீயை
அணைத்தனர்.
விபத்துக்கு
காரணமான பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பலியான ஹேமலதாவின்
பிணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று கூறி பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல்
செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு மேலும்
அதிகரித்தது.




0 Responses to இளம்பெண் உயிரை பறித்த தனியார் பஸ்சுக்கு தீவைப்பு