Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் தொடரும் இலங்கை எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையை சேர்ந்தவர்கள் எவரும் கலந்து கொண்டால் அப்போட்டிகள் சென்னையில் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் எவரும் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி சில மாணவர் குழுக்கள் கையெழுத்தியக்கமும் தொடங்கியிருக்கின்றனர்.

'இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டுக்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பு நிலை காணப்படுகிறது எனவும், இதனால் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்வது தமிழகத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கும்' எனவும் எச்சரித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

'இந்திய மத்திய அரசே, இலங்கை வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுறுத்தும் படியும்' அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அண்மையில் இலங்கை விளையாட்டு வீரர்கள் பங்குபெற்றால் ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் நடத்தப்பட அனுமதி அளிக்கப்பட மாட்டாது என முதல்வர் அறிவித்திருந்தார். அத்துடன் அதற்கு முன்னர் இலங்கையை சேர்ந்த கால் பந்து குழுவினர் கூட திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் உயர் மட்ட குழுவினர் நடத்திய நிர்வாக ஆலோசனை கூட்டத்தில், சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்களை தவிர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போட்டியை காணவரும் ரசிகர்களின் பாதுகாப்பு மாத்திரமின்றி இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும் இங்கு முக்கியமானது என தெரிவித்துள்ள ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா இறுதியில் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம்திகதி தொடங்கி மே மாதம் 26ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறுகின்றன.

இம்முறை அபிஎல் போட்டிகளில் 12 இலங்கை வீரர்கள் பங்குபெறுகின்றனர். அவர்களில் இருவர் இரு அணியின் கேப்டன்களாக செயற்படவுள்ளனர். டெல்லி அணிக்கு மஹெல ஜெயவர்த்தனவும், ஹைதராபாத் அணிக்கு குமார் சங்ககாரவும் கேப்டன்களாக செயற்படவுள்ளனர்.

இதேவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நுவன் குலசேகர மற்றும் தனஞ்சயா ஆகியோரும் இடைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விரைவில் இது தொடர்பில் அறிவிப்பு வெளியிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com