Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர் விவகாரம் குறித்து திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கேரள மீனவர்கள் 2 பேரைச் சுட்டுக் கொன்ற இத்தாலி வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  இத்தாலி வீரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும், கேரள அரசும் திட்டவட்டமாக அறிவித்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இத்தாலி சென்ற அந்த வீரர்கள் இந்தியா திரும்பவில்லை. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங், இத்தாலி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். சோனியா காந்தி இத்தாலி துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

உச்சநீதிமன்றம் இரு வீரர்களுக்கும் உத்தரவாதம் அளித்த இத்தாலி தூதர் வெளிநாடு செல்வதற்கு அதிரடியாகத் தடை விதித்தது. அதன் பின் இத்தாலி அரசு பணிந்து, 2 வீரர்களையும் இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பியது. இது இத்தாலிக்கான நிலை. இலங்கையின் நிலையைப் பார்ப்போம்.

பிப்.27-ல் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மார்ச் மாதம் 2-வது வாரத்தில்தான் விடுவிக்கப்பட்டனர். மார்ச் 13-ல் ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்றுவிட்டனர். 

தலைமன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மார்ச் 14-ல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அப்போது தமிழக மீனவர்களை இரும்புத் தடிகளாலும், துப்பாக்கியின் பின்புறத்தாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். 

மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் பறிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் வலைகளையும் அறுத்ததுடன், மீன்களையும் பறித்து கடலில் கொட்டியுள்ளனர். மார்ச் 18-ல் புதுக்கோட்டையைச் சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போதெல்லாம் மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதும், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கையிடம் முறையிடுவதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் மார்ச் 13-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் உள்ள 19 மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 19 பேரின் குடும்பத்தினர் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்டித்து சனிக்கிழமைகூட மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் காதுகளில் விழுகிறதா? கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொலை செய்த இத்தாலி கடற்படையினர் தொடர்பாக இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவாதித்து, வேகம் காட்டும் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் 19 பேரின் சிறை நீடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன சொல்கிறது? 

கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபாடுபடுத்தி பார்ப்பது நியாயம்தானா? இதுவரை 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நிகழ்விலாவது கேரள மீனவர் - இத்தாலி கடற்படையினர் பிரச்சனையில் பின்பற்ற அணுகுமுறையும், வேகமும் தமிழக மீனவர் பிரச்னையில் கடைப்பிடிக்கப்பட்டது உண்டா?’’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

0 Responses to இந்தப் போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் காதுகளில் விழுகிறதா?: கலைஞர் கேள்வி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com