தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு பதில் கேரளா தெலுங்கு திரைப்படங்களை இலங்கையில் வெளியிடுமாறு இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு இலங்கையின் பௌத்த பிக்குகள் அமைப்பான ராவண பாலய அமைப்பு கடிதம் வழங்கியுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய தமிழ் திரைப்பட கலைஞர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரத போராட்டங்களை கண்டித்து, இம்முடிவை இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் எடுக்க வேண்டும் எனவும், தமிழ் திரைப்படங்களை இலங்கையில் தடை செய்வதன் மூலம், தமிழ்நாட்டு சினிமா படைப்புக்களில் பாரிய வெளிநாட்டு உரிமை விற்பனை வருமானத்தை கட்டுப்படுத்தலாம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 15% வீதமானோருக்கு அதிகமானோர் தமிழர்கள் ஆவார்கள், இவர்களில், இலங்கையின் பூர்வீகத்தமிழர்கள், இந்திய மலையகத்தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்கள் அடங்குவர்.
இதேவேளை இந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் தடை செய்வது, சரியான பதில் நடவடிக்கை அல்ல என இலங்கையின் பிரபல சினிமா நடிகையும், பாராளுமன்ற உறுப்பினருமான மாலினி ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அரசுக்கு எதிரான தென்னிந்திய சினிமா கலைஞர்களின் போராட்டங்களை கண்டித்து கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கை கலைஞர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்லனர். கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இது நடைபெறும். தென்னிந்திய சினிமா கலைஞர்களின் போராட்டத்தை கண்டித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதம் ஒன்றும் கையளிக்கப்படும்.
உண்மையில் இலங்கை தமிழ் மக்களின் மகிழ்ச்சிக்காக திரைப்படங்கள் நிச்சயம் அவசியமானது. இலங்கை கலைஞர்களும் தென்னிந்திய தமிழ் கலைஞர்களின் படைப்புக்களை வரவேற்கிறார்கள் என்றார்.
பிரபல நடிகர் ரவீந்த ரந்தெனிய கருத்து தெரிவிக்கையில் தென்னிந்திய கலைஞர்களின் போராட்டம் கவலை அளிக்கிறது. உண்மையில் அவர்கள் இலங்கைக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வேண்டும். அப்போது தான் அவர்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள் என்றார்.
1958ம் ஆண்டு இலங்கையின் தமிழ் பாடகிய பானுமதி சிங்கள பாடலை பாடுவதற்கு, அப்போதைய சிங்கள அரசு தடை விதித்திருந்ததும், 1978ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிப்பதற்கு இலங்கையின் பிரபல நடிகை மாலினி பொன்சேகாவுக்கு அப்போதைய சிங்கள அரசால் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.




0 Responses to 'தமிழுக்கு பதில் தெலுங்கு திரைப்படங்களை இலங்கையில் வெளியிடுங்கள்' : இராவண பாலய