எதற்கும் துணிந்தவர்களாகி விட்டார்கள் இலங்கை கடற்படையினர். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும் அதைக் கண்டு பயந்துவிட மாட்டோம், ஓய்ந்துவிட மாட்டோம் என்று நிருபிப்பதை போன்று மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
நேற்று (10.04.2013) இரவு இந்திய கடல் பகுதியான வேதாரணியத்தைச் சேர்ந்த மீனவர்கள் செல்வம், மணிகண்டன், விஜயகுமார், சௌந்தர்ராஜன் ஆகிய 4 பேர் பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை, இலங்கை கடற்படையினர், நம் இந்திய எல்லைக்குள் வந்து இரும்பு பைப், மற்றும் இரும்பு கேபிளினால் மிகக் கடுமையாக தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல், இவர்களின் வலை, ஜி.பி.எஸ் கருவி, ஐஸ் பெட்டி ஆகியவற்றையும் அறுத்தும் உடைத்தும் அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
இனி ஒருமுறை உங்களை கடலில் பார்த்தால் சுட்டு கடலில் வீசிவிட்டுப் போய் விடுவோம் என்று எச்சரித்து விட்டு சாவகாசமாக கிளம்பியிருக்கின்றனர்.
நான்கு பேருக்கும் பலத்த உள்காயம் ஏற்பட்டு உடலின் பல பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு உள்ளது.
அடிபட்ட மீனவர்கள் தமது ஊருக்கு தகவல் சொல்ல அவர்கள் மற்ற படகுகளில் சென்று அவர்களை ஏற்றி கரைக்கு கொண்டுவந்து நாகபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.
அங்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேதாரண்யம் எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் சென்று பார்த்து ஆறுதல் சொன்னார்கள்.
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் கூறியதாவது:
இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தோம். நமது எல்லைக்குள்ளே அத்துமீறி வந்து தாக்குதல் நடத்தினர். எங்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவிகளை பறித்து சென்றனர்.
இந்திய கடற்படை இந்த பகுதியை கண்டுகொள்வதே இல்லை. இதனால்தான் இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை தாக்குகிறது.
கடந்த 5ம் தேதி காரைக்காலில் இருந்து சென்ற 26 பேரை கைது செய்தனர். அதன்பிறகு இராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 25க்கும் மேற்பட்டவர்களை பிடித்து சென்றனர்.
நமது நாட்டு எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தும் இலங்கை இராணுவத்தை கண்காணிக்க இந்த பகுதியில் நமது கடற்படையும் ரோந்து செல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.




0 Responses to தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!! தமிழக மீனவர்கள் மீது இரும்பு கேபிளினால் தாக்குதல்! (காணொளி இணைப்பு)