Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.

ஒரு ஈழத்தமிழனிடம் இலலாத விடயங்கள் வேறு யாரிடம் இருக்க முடியும். ஈழம் என்ற சொல்லாடல் இங்குள்ளவர்களுக்கு முன் அறிமுகம் இல்லாத ஒன்றாக இருக்கலாம். அது எனது தேசத்தின் பெயர். மன்னிக்கவும். இங்கு பேசிய எவருமே தமது தேசத்தை குறிப்பிடவில்லை.

குறிப்பிடுகிற இடமும் இது இல்லை என்பது எனக்கு தெரியும். அதற்கான தேவையும் இங்கு இல்லை. பல்கலைக்ககழக பதவி நிலைகளாலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தகுதிகளின் அடிப்படையிலுமே இங்கு அறிமுகமும் பேசுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. என்னையும் எனது பீடாதிபதி அந்த வழிமுறைகளினூடாகவே பேச அழைத்தார்.

ஆனால் நான் எனது தேசத்தை மையப்படுத்தி பேசுவதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் வருந்த வேண்டாம். உங்கள் கருத்தரங்க தலைப்புக்கு வஞ்சகம் செய்யமாட்டேன்..ஒரு வேளை மற்றவர்களிலும் பார்க்க முழுமையாக தலைப்புக்கு நியாயம் செய்தவனாகவும் நான் இருக்கலாம்.

வன்முறையும் உளவியல் சிக்கல்களும் இங்கு குழுமியிருக்கும் உங்களுக்கு ஆய்வும் அக்கறையும் சார்ந்தது. ஆனால் எனக்கு – நான் சார்ந்திருக்கும் இனத்திற்கு அதுவே வாழ்வு என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் பிரதிநிதியாகவே நான் உங்கள் முன் நிற்கிறேன்.

பேசுவதற்கு எதுவுமேயற்ற – அக்கறையற்ற – ஆர்வமற்ற வெறுமையான ஒரு உளவியலால் பின்னப்பட்டிருந்த ஆழ்ந்த மௌனம் நீண்ட நாள்களுக்கு பிறகு – சுமாராக 3 வருடங்களுக்கு பிறகு தற்போது உங்கள் முன்னால் உடைந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

எனது உரையின் ஆரம்பமே உங்களை திகைப்பிலாழ்த்தி கொண்டிருக்கிறது என்பதை உங்கள் உடல்மொழி மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒரு மன நோயாளியின் நாட்குறிப்புக்கள் போல் இருப்பதை உணரக்கூடியாதாக இருக்கிறதல்லவா? எனக்கு அது தெரியும். இது அந்த வகையான ஒன்றுதான். ஏனெனில் நானும் ஒரு உளவியலாளன்தானே.
என்னை விட அனுபவத்தில் அறிவில் முதிர்ந்த அறிஞர்கள் நீங்கள் அதை இன்னும் துல்லியமாக உணரமுடியும். நான் ஒரு குறியீடு. இன்று எனது இனத்தை சேர்ந்த ஒருத்தருடன் நீங்கள் உரையாடினால் இதை விட மோசமான அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

அதற்கு நான் உத்தரவாதம். பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள், தொழிலாளிகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் என்று சமூக நிலை மட்டங்களிற்கும் அப்பால் ஊடுருவி அவர்களின் உளவியல் ஊனப்படுத்தப்பட்டிருக்கிறது.

கூட்டு மன அதிர்வு என்ற உளவியல் பதம் குறித்து நான் உங்களுக்கு விளக்கம் செய்வது அபத்தம் என கருதுகிறேன். இன்று எமது இனத்தின் நிலை இதுதான்.

உளவியல்துறை சார்ந்தவனாக இந்த நிலையை சில நணபர்களுடன் சேர்ந்து கண்டடைந்தேனேயொழிய முழுமையாக என்னால் இதிலிருந்து விடுபடமுடியவில்லை. கூடுவிட்டு கூடுபாய்வது போல் அவ்வப்போது எனது இனத்தின் உளவியலில் இருந்து விடுபடுவதும் மீண்டும் அதற்குள் ஐக்கியமாவதுமாக பிளவுண்ட இரட்டை மனநிலையில் உலாவருகிறேன். போதாதற்கு நான் அரசியல் விவகாரங்களை வேறு அலசுபவன். அந்த அனுபவமும் வாசிப்பும் எமது அரசியல் விடுதலையை சூனியமாகவே காட்டுகிறது.

அதன் நிமித்தமாக நான் மற்றவர்களிலும் பார்க்க அதிக தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறேன். எனது தேசத்தின் உளவியலைத்தான் இங்கு நான் விபரிக்க போகிறேன். இத்தகைய உளவியல் பின்புலம் உள்ள தேசத்தில் உள்ள குழந்தைகளின் பெண்களின் உளவியல் எப்படி கட்டமைக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு மேலதிகமாக விபரிக்க வேண்டி இருக்காது என்றே நம்புகிறேன்.

தெற்காசியாவில் இந்திய தேசத்தின் அடிப்பகுதியில் முழுவதும் நீரால் சூழப்பட்டு ஒரு துளி போன்ற உருவ அமைப்பைக் கொண்ட ஒரு நிலப்பரப்பில் மதத்தால், மொழியால், பண்பாட்டால், கலாச்சாரத்தால் குறிப்பாக உளவியலால் துண்டாடப்பட்ட இரு வேறு இனக்குழுமங்கள் அந்தத் தீவில் பரந்திருந்த போதும் அது “சிறீலங்கா” என்ற ஒற்றைத் தேசமாக “உருவாக்கப்” பட்டிருக்கிறது.

மேன்மைதங்கியவர்களே இந்த “உருவாக்கம்” என்பதன் அர்த்தத்தை சற்று அழுத்தமாக உணாந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இயல்பான ஒரு விடயத்தை அதன் வழியே அணுகாமல் உருவாக்குதல் அல்லது உற்பத்தி செய்தல் என்பது உளவியல் மொழியில் எத்தகைய அயோக்கியத்தனம் என்பது உங்களுக்கு புரியும்.

மேன்மை தங்கியவர்களே நான் “சிறீலங்கனாக” உருவாக்கப்பட்டிருந்தேன். பின்பு கடந்த ஏறத்தாழ 30 வருடங்களாக தமிழீழக் குடிமகனாக இருந்தேன். மே 18ற்கு பிறகு – மே 18 என்ன என்பது குறித்த விடயங்களுக்கு பிறகு வருகிறேன்- நான் “சிறீலங்கனாக” மறு உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அது எனது தேசம் அல்ல. அது எனது அடையாளமும் அல்ல.

எனது கடவுச்சீட்டில் இன்னும் பல ஆவணங்களில் “சிறீலங்கன்” என்றே உள்ளது. இது என்னைத் தொந்தரவு செய்கிறது. மே 18 இற்கு பிறகு இன்னும் அதிகமாக… மேன்மே தங்கியவர்களே இங்கு நான் என்பது நான் அல்ல அதன் பின்னால் ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் குரல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும்.

மே 18 என்று குறிப்பிட்டேன் அல்லவா.. அது ஒன்றும் முக்கியமான ஒரு நிகழ்வு நடந்த நாள் அல்ல. எனது இனத்தைச் சேர்ந்த வெறும் 150000 பேர் உயிருடன் கொன்று புதைக்கப்பட்ட நாள். அதாவது தமிழீழக் குடிமகன் என்ற எமது அடையாளம் மீண்டும் பறித்தெடுக்கப்பட்ட நாள். மிகச் சாதாரணமாக ஒரு படுகொலை நிகழ்வை விபரிக்கிறேன் என்று நீங்கள் அதிர்ச்ச்சியடைவதை உணர முடிகிறது.

ஆனால் சிறீலங்கா என்ற அடையாளம் தரித்த அரசு மிகச் சாதாரணமாகவே அந்த இனப்படுகொலையைச் செய்தது. மேன்மை தங்கியவர்களே நீங்கள் சார்ந்திருக்கிற தேசங்களும் மிகச் சாதரணமாக அதை வேடிக்கை பார்த்தன என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எனவே நாமும் அதை ஒரு சாதாரண நிகழ்வாக விபரிக்க பழக்கிக் கொண்டிருக்கிறோம்.
சிறீலங்கா – தமிழீழம் என்ற தேச பதங்கள் வரைபடங்கள் வழியே கட்டமைக்கப்பட்டிருக்கும் உங்கள் புவியியல் அறிவை தளம்பச்செய்யலாம். தளம்பாதீர்கள். அது உங்களின் தவறு அல்ல. இது அரசியல் மேடை அல்ல. அரசியல் விளக்கங்களை அடுக்குவதற்கு… போரின் பின்னான உளவியல் சிக்கல்கள் குறித்து பேசக் கூடியிருக்கிறோம்.

இப்போது நான் உங்கள் கருத்தரங்கத் தலைப்பிற்குள் நுழையும் தருணம் வந்துவிட்டதென கருதுகிறேன். ஏனெனில் தமிழீழம் என்ற தேசத்தை அங்கீகரிக்கப்பட்ட உலக வரைபடத்தில் நீங்கள் தேடிப்பிடிக்க முடியாது. அது எமது கனவு தேசம். இப்போது எமது இனத்தின் உளவியல் சிக்கலின் ஆரம்ப புள்ளியை தொட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இங்கு கூடியிருக்கும் எல்லோரினதும் ஆதர்சபுருசரான சிக்மன்ட் பிராய்ட்டின் நனவிலி கோட்பாட்டை விபரித்து உங்கள் புலமையை சிறுமைப்படுத்தவும் எனது நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை.

அங்கீகரிக்கப்படாத ஒரு தேசத்தின் குடிமக்களாக 30 வருடங்கள் இருந்தோம்.

தேசம், தேசியம், தேசியக்கொடி, தேசியத்தலைவர் என்று அந்த வாழ்க்கையின் வழியேதான் எமது உளவியல் கட்டமைக்கப்ட்டிருந்தது. இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிய ஒன்று. இன்று அந்த வாழ்வு மிகப் பெரிய போர்க்குற்றங்களின் – இனப்பபடுகொலையின் வழி முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் வழியேதான் தனியாகவும் குழுவாகவும் நாம் உளவியல் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

மேன்மை பொருந்தியவர்களே இனி நான் விபரிக்கப்போகும் விடயங்கள் உங்கள் நிம்மதியை குலைக்கலாம். உங்கள் இனிய பொழுதுகளை இதை செவிமடுப்பதனூடாக தொலைக்கவும் கூடும். போரின் விளைவுகளையும் அதன் விளைவாக சிறார்களும் பெண்களும் சந்திக்கும் அவலங்களையும் உளவியல் தாக்கங்களையும் கேட்க - தீர்வுகளைப் பரிசீலிக்க ஆவலுடன் நீங்கள் இங்கு கூடியிருந்தாலும் நான் சொல்லப் போகும் கதைகள் நிச்சயம் உங்களைத் தொந்தரவு செய்யும். இதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களைத் தொந்தரவு செய்வது எனது நோக்கமல்ல.

இது சபிக்கப்பட்ட – பாவப்பட்ட ஒரு இனத்தின் கதை. பாவம், சாபம் என்று உளவியலுக்கும் தர்க்கத்திற்கும் சம்பந்தமில்லாத சொல்லாடல்களை எல்லாம் இங்கு அடுக்குகிறேன் அல்லவா! என்ன செய்வது ஏதாவது ஒரு அடையாளப்படுத்தலின் ஊடாக அதைக் கடந்து விட வேண்டும் என்ற துடிப்புத்தான் இது. அந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனாக இதை காவித்திரிய வேண்டியவனாக நான் இருக்கிறேன்.

அதே வேளை அதை உங்களுக்குள் கடத்த வேண்டியவனாகவும் இருக்கிறேன். என்னை – எனது நிலையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது ஒரு துயரமான நிலை. நிறைய சங்கடங்கள் நிறைந்ததும் கூட. மேன்மை தங்கியவர்களே உங்களில் யாருக்குமே இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.

உங்கள் துறை சார்ந்தது என்ற முறையில் வன்முறைகளையும் அதன் விளைவான உளவியல் சிக்கல்களையும் நிறையவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனக்கும் இதில் ஓரளவு பரிச்சயம் இருப்பதும் உண்மைதான். ஆனால் எனது தேசத்தில் இன்று நடப்பவை எதுவும் இதுவரை எங்குமே நடைபெற்றதாக எனக்கு தெரியவில்லை.

இதுவரை என்னுடன் உரையாடிய யாருமே ஒரு முன்னுதாரணத்தை காட்டவில்லை. நாம் தான் இதில் முன்னுதாரணமாய் இருக்கிறோம் என நினைக்கிறேன். ஏதோ பெருமையான விடயத்தை கூறுவது போல் இதை குறிப்பிடுகிறேன் அல்லவா! எத்தகைய அபத்தம் பாருங்கள். உங்களில் யாரேனும் ஒரு முன்னுதாரணத்தை காட்டினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

ஏனெனில் அந்த மக்கள் சமூகம் எப்படி இந்த உளவியல் நிலையை கடந்தார்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன். அந்த ஆய்வு முறையை அறிய விரும்புகிறேன். ஏனெனில் அது எமது மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது.

இல்லை அப்படி ஒரு உதாரணம் இல்லை, இனித்தான் இந்த சிக்கல் ஆராயப்பட வேண்டும் என்றால் அது இன்றிலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இல்லை மன்னித்துகொள்ளுங்கள்.. இந்த கணத்திலிருந்தே அது தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நாம் எம்மிலிருந்து மிக வேகமாக நழுவிக் கொண்டிருக்கிறோம்.

மே18. அனைத்துத் துயரமும் ஒன்றாய் குவிந்த நாள். அன்றிலிருந்துதான் பேதலித்து மரத்துப்போன வெற்று நிலைக்குள் நாம் வந்து சேர்ந்தோம். யாரை எதிர்த்துப் போராடி யாரிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று விரும்பினோமோ அவர்களிடமே மண்டியிட்டு இரந்து உயிர்வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை எவ்வளவு துயரமானது.

இது எமது உளவியலை எப்படி ஊனமாக்கும் என்பதை நான் விரிவாக வேறு விளக்க வேண்டுமா? இந்த ஊனமுற்ற உளவியல் கடந்த கால போராட்டத்தின் மீதான வெறுப்பாக – போராட்டத்தை முன்னெடுத்த போராளிகள் மீதான வெறுப்பாக, தமது கனவு தேசம் குறித்த அருவருப்பாக, வசைபாடல்களாக, காட்டிக்கொடுப்புக்களாக, அச்சம் நிறைந்த ஒப்படைப்பாக, எதுவுமே பேச முடியாத மௌனமாக என்று பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலைக்குப் பிறகும் படுகொலை அரசோ நாம் கண்ட “கனவை” வைத்தே எம்மை அடையாளப்படுத்தவும், அணுகவும், எமது எதிர்காலத்தை திட்டமிடவும் முற்படுகிறது. விளைவாக இனப்படுகொலையைச் சந்தித்த நாம் தற்போது இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி கொண்டிருக்கிறோம்.

உட்புறமாகத்தாழிடப்பட்ட கதவாக எனது தேசத்தின் அனைத்து துயரங்களும் அனைத்துலகத்தின் பார்வைக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. எமது தேசத்திற்கு அண்மையாக உள்ள வேறு சில படுகொலை அரசுகளின் துணையுடன் சர்வதேச தலையீடு தடுக்கப்படுகிறது. போர் முடிந்து முழுமையாக இரு வருடங்கள் ஆகப்போகிறது.

அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் இன்னும் முழுமையாகவோ பகுதியாகவோ பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை நம்புவது உங்களுக்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நம்புவதற்கு கடினமான விடயம் எல்லாம் எமது வாழ்வை மிக இயல்பாக கடந்து செலவதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
இறுதி யுத்தம் என்று சொல்லப்படுகிற காலப்பகுதியில் – வன்னிபெரு நிலப்பரப்பு என்று சொல்லப்படுகிற எமது பாரம்பரிய மண்ணில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் மக்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு. மேன்மை தங்கியவர்களே படுகொலை அரசின் ஆக்கிரமிப்பின் வழி நிலப்பரப்பு சுருங்கத் தொடங்க அதற்கு ஏற்றாற்போல் எமது மண்ணில் இருந்த மக்கள் தொகையும் சுருங்கத் தொடங்கியது.

தொடர்ந்து மனிதக்கேடயம், மக்களை மீட்டல் என்ற அரசியல் கணிதத்திற்கு ஏற்றது போல் எமது மக்கள் தொகையும் மாறி மாறி ஏறி இறங்கியது - ஒரு இசையின் தாளத்திற்கு ஏற்ப சுழன்றாடும் ஒரு நடனக்கலைஞரைப்போல்.. முடிவாக இன்று அந்த மண்ணில் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள்? எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? என்பதற்கான எந்தவிதமான அதிகாரபூர்வ ஆதாரங்களும் இல்லை.

இன்று படுகொலை அரசு மேம்போக்காக சொல்கிற கணக்கின்படி அந்த மண்ணில் 275000 மக்களே இருந்தார்கள் என்று சொல்கிறது. 
கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், காணமல் போனவர்களும் இந்த 275000 இற்குள்தான் வருகிறார்கள் என்பதை தயவு செய்து கவனத்தில் குவியுங்கள். அதுவும் படுகொலை அரசின் அமைச்சர் பெருமக்கள் வாயளவில் அடிக்கடி மாறி மாறி முன்வைக்கும் கணக்கு இது. எந்தவிதமான எழுத்து ஆதாரங்களும் இதற்கு கிடையாது.

நான் கணிதத்தில் கெட்டிக்காரன் சந்தர்ப்பவசத்தால் உளவியல்துறைக்கு வந்து சேர்ந்தவன் – நான் மட்டுமல்ல உலகளவிலேயே தமிழர்கள் கணிதத்துறையில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் எம்மால் இந்த “கணிதத்தை” சரிபார்க்கவோ சமன்படுத்தவோ முடியவில்லை.

எனது இந்த உரை முடிந்ததும் நிச்சயமாக நீங்கள் என்னை உங்கள் துறை சார்ந்து பாதிக்கப்பட்ட பெண்களின், குழந்தைகளின் விபரங்களை தருமாறு அணுகுவீர்கள். அது எனக்கு தெரியும். தயவு செய்து அந்த தகவலை மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். எனெனில் அது என்னிடம் இல்லை. மன்னிக்கவும் யாரிடமும் இல்லை.

ஆனால் அறிஞர் பெருமக்களே – மேன்மை பொருந்தியவர்களே நீங்கள் சாhந்திருக்கும் அரசுகள் – அமைப்புக்களின் வாயிலாக இந்த விபரங்களை திரட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கைகள் சார்ந்தே நான் இந்த உரையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த புள்ளவிபரங்கள் எடுக்கப்படுவதை தடுத்து வைத்திருக்கிறது படுகொலை அரசு. பெரும்பாலான குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்களுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. – ஏதோ சில நூறு பேர் என்று நினைக்காதீர்கள், இந்தத் தொகை பல்லாயிரக்கணக்கில் வரும் – அவர்களின் அந்த நிலை நான் இந்த உரையை நிகழ்த்தும் இந்த கணம் வரை எந்த மாற்றத்திற்கும் உட்படவில்லை.

இதன் மறுபக்கம் என்னவென்றால் தொடர்பு இல்லை எனில் அவர்கள் உயிருடன் இல்லை என்பதே இதன் மறுவளமான உண்மை.

கணவன்மாரை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், போரில் ஊனமுற்ற பெண்கள், குழந்தைகள் என்று எமது மக்கள் வாழ்வியல் முற்றாக சிதைக்கப்பட்டிருந்தாலும் படுகொலை அரசு இந்த புள்ளிவிபரங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறது. போதாததற்கு எஞ்சியுள்ளவர்களின் வாழ்வியலை அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் கட்டியெழுப்புவதற்கும் தி;ட்டமிட்டு தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

போரில் கொல்லப்பட்டவர்கள்,  ஊனமுற்றவர்கள் போக எஞ்சியுள்ளவர்களின் உளவியல் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. பசியும், பஞ்சமும் கலாச்சார சீர்கேடுகளும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. காரணம் இந்த நிலைக்கான காரணத்தை தாம் கண்ட கனவின் மீதான அருவருப்பாகவும் அந்த கனவை தாங்கிய போராளிகள் மீதான வெறுப்பாகவும் மக்கள் கண்டடையும் வண்ணம் அவர்களின் உளவியல் ஊனப்படுத்தப்படுகிறது. துரதிஸ்டவசமாக எமது மக்களும் இதை நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதை வேதனையுடன் இந்த இடத்தில் குறிப்பிட்டுகொள்கிறேன்.

இதற்காக எமக்குள்ளிருந்தே சோரம் போன அரசியல்வாதிகளை, போராளிகளை, கலைஞர்களை, எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களினூடாகவும் நாம் ஒரு திசையை நோக்கித் துரத்தப்பட்டுகொண்டிருக்கிறோம். இதற்காக நாம் அவர்களை நோகவும் முடியாது. ஏனெனில் மே 18 உருவாக்கிய பேதலித்து மரத்துபோன வெற்று உளவியலின் பிரதிபலிப்புக்கள்தானே அவர்களும்

மொத்தத்தில் மனநோயாளிகளின் கூடாரமாக எனது தேசம் மாறிக்கொண்டிருக்கின்றது என்பதை நான் அறிவுறுத்த விரும்புகிறேன். இந்த தேசத்தில் வாழும் பெண்கள், குழந்தைகள் குறித்து நான் தனியாக ஒரு உரை நிகழத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மே 18 இலிருந்து இன்று வரை சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் விலங்குகளைப் போல் கூடாராங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வப்போது பகுதி பகுதியாக விடுவிக்கபடுகிறார்கள். குடும்பத்தில் கொல்லப்பட்டவர்கள் போக ஊனமுற்றவர்களாக, மனநோயாளிகளாக, வாழ்வதற்கு வழியற்றவர்களாக மிகுதி உள்ளவர்கள் வெளியே விடப்படுகிறார்கள்.

குடும்பத்தை தாங்கிய – உழைக்கும் வலுவுள்ளவர்கள் இல்லாமல் எந்தவிதமான நிவாரணங்களும் இன்றி எப்படி மிகுதிகாலத்தை கொண்டு செலுத்த முடியும். குடும்ப தலைவர்களான ஆண்கள் அல்லது வளர்ந்த பிள்ளைகள் பயங்காரவாதிகள் என்ற அடையாளத்துடன் நிரந்தரமாகவே தடுத்துவைக்ப்பட்டுள்ளார்கள். போராளிகள் விடுதலை என்ற பெயரில் அவ்வப்போது விடுதலை செய்யப்படுபவர்கள் இவர்களில் சிலரே ஒழிய அவர்கள் உண்மையான போராளிகள் கிடையாது.

அறிஞர் பெருமக்களே தனித்தனியாக நான் இங்கு எதனையும் பட்டியலிட விரும்பவில்லை. அதற்கு இது இடமும் அல்ல. அதற்கு நேரமும் இல்லை. இந்த அவலத்தின் உச்சமாக ஒன்றை கூறலாம் என நினைக்கிறேன். இங்கு கூடியிருப்பவர்களில் சரிபாதிக்கும் மேலாக பெண்கள் இருக்கிறார்கள். உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

ஏற்கனவே தாயானவர்கள் இனித் தாயாக போகிறவர்கள் என்ற அடிப்படையில், நீங்கள் கருத்தரித்து சுமந்து பெற்ற உங்கள் குழந்தைகளை பிறந்த மறுகணமே கொலை செய்து வீசுவீர்களா? ஆனால் எமது பெண்கள் அதைச் செய்கிறார்கள்.

 இப்போதெல்லாம் வீதியோரங்களில், வயல்வெளிகளில், மலக்குழிகளில் பிறந்த மறுகணமே கொல்லப்பட்ட சிசுக்களின் உடல்களை சாதாரணமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. இது என்ன அவலம் என்று நீங்கள் பதட்டமுறுவது எனக்கு புரிகிறது.
தடுப்பு முகாமில் தடுத்துவைக்கபட்டிருக்கிற பெண்களில் சிலரை இப்படி வல்லுறவுக்குட்படுத்தி கருத்தரிக்க செய்து வெளியே விடுகிறது படுகொலை அரசின் இராணுவம். வெளியே இருந்தால் அல்லவா அத்தகைய கருக்களை ஆரம்பத்திலேயே கலைக்க முடியும். வெளியே இருந்த பெண்கள் சிலருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

முன்னாள் போராளிகளாக, போராளிகளின் மனைவியர்களாக, போராளிகள் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்ததற்காக அவர்களுக்கு இந்த “தண்டனை” வழங்குகிறது படுகொலை அரசு. ஒரு வரியில் கூறினால் இனச்சுத்திகரிப்பின் நவீன வடிவம் ஒன்றை எமது பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறது படுகொலை அரசு.

அந்த பெண்கள் எதிர்காலத்தை வைத்தே எமது ஒட்டு மொத்த இனத்தின் எதிர்காலத்தை மதிப்பிட்டு கொள்ளலாம். தமிழீழத் தேச மக்களை “சிறீலங்கா” என்ற தேச அடையாளத்திற்குள் அடைக்க படுகொலை அரசு மேற்கொள்ளும் மிக கீழ்த்தரமான யுக்திகளில் ஒன்றாக இதுவும் இருக்கிறது.

 “ஒரு கல்லில் இரு கனிகள்” என்று ஒரு பழமொழியை எமது கிராமத்து முதியவர்கள் அடிக்கடி மொழிவார்கள். பெண்கள் மீதான இத்தகைய வன்முறையினூடாக படுகொலை அரசு பல நூறு கனிகளை இலக்கு வைத்துள்ளது மட்டும் திண்ணம். மனித வாழ்வின் ஆதாரமும் அடிப்படையும் பெண்களிடமிருந்துதானே தொடங்குகிறது.

போர் முடிந்த பின்னும் இனப்டுகொலை அரசின் சூழ்ச்சிக்குள் சிக்கியவர்களாகவும் இனச்சுத்திகரிப்பின் இலக்காகவும் எமது இனப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. எல்லாப் போரின் முடிவிலும் பாதிக்கப்படுவது பெண்களும் சிறார்களும்தான். எமது தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல…
ஆனால் ஏனைய தேசங்களைவிட மிக ஆழமான –

மீளெழமுடியாத பாதிப்புக்குள் சிக்கியுள்ளார்கள் என்ற நிதர்சனம் தினமும் எம்மை நிலைகுலையசெய்து கொண்டிருக்கிறது…
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மீட்பர்களைத்தான் காண முடியவில்லை.

0 Responses to மே 18 தமிழீழக் குடிமக்கள் என்ற எமது அடையாளம் மீண்டும் பறித்தெடுக்கப்பட்ட நாள்: பரணி கிருஸ்ணரஜனி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com