பீஹாரில் மூவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட பெண் ஒருவரை அவரது நண்பர் ஒருவர் தாமாக முன்வந்து திருமணம் செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பீகாரின் பங்கா மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் கடத்தப்பட்டு மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அப்பெண்ணின் நண்பர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
பங்கா மாவட்டத்தின் மந்தர் பார்வத்திற்கு குறித்த பெண்ணும் அவரது நண்பரும் சுற்றுலா சென்றிருந்த போது, ஓரிடத்தில் வழிகேட்கச்சென்ற போது அக் குழுவினரிடம் சிக்கொண்டுள்ளனர். மூன்று மணித்தியாலங்களாக அவர்களை பிடித்து வைத்திருந்த அக்குழுவினர் பின்னர் அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதோடு அப்பெண்ணிடமிருந்த பணத்தையும் பறித்துச்சென்றுள்ளனர். குறித்த பெண் பாரஹத் காவல்நிலையத்திற்கு தாமாகச் சென்று முறையிட்டதன் படி இவ்விபரம் வெளியில் வந்துள்ளது. இந்நிலையிலேயே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவரது நண்பர் ஒருவர் சம்மதம் தெரிவித்து கோவிலில் மணம் முடித்துள்ளார்.
எளிமையான முறையில் நடைபெற்ற இத்திருமண நிகழ்வுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினரும் கலந்து கொண்டுள்ளனர். மந்தர் பார்வத் என்பது இந்து பக்தர்களால் புனித மலையாக பார்க்கப்படும் இடமாகும். இம்மலையையே பாற்கடலில் அமுதம் கடைந்தெடுக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.
0 Responses to பீஹாரில் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணை மனமுவந்து திருமணம் செய்து கொண்ட நண்பர்