அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென்பகுதியைத் தாக்கிய கடும் காட்டுத் தீயினால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் அங்கு முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டது மட்டுமன்றி பல்கலைக் கழகங்களில் இருந்து மாணவர்களும் வீடுகளில் இருந்து மக்களும் வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். கடற்கரை ஓரமாக அதிகபட்சமாக 15 சதுர மைல பரப்பளவில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாகப் போராடி வருகின்றனர்.
இது குறித்து தீயணைப்பு வீரர் ஒருவர் கூறுகையில் 'நாம் இயற்கை அண்னையின் கருணையை எதிர்பார்த்தே இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டு வருகின்றோம்!' என்றார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 900 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீயால் 8 மைல் நீளத்துக்கு பசுபிக் கடலோர அதிவேகப் பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடமேற்கே வெண்டுரா மாவட்டத்தில் வனங்களில் காற்றின் வேகத்தால் தீ வேகமாகப் பரவியிருந்தது. இந்தக் காட்டுத் தீ அனர்த்தத்தில் ஆயிரக் கணக்கான நிலங்களும், சில வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் அவர்களின் பணியும் தாமதம் அடைந்துள்ளது. இந்நிலையில் இத் தீ எந்நேரமும் எந்த இடத்திலும் பரவலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதேவேளை ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தில் சூடான நிலக்கரிப் படுக்கைகள் இருப்பதால் தீயின் வீரியம் இன்னமும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது.
0 Responses to கலிபோர்னியாவின் தெற்கே கடும் காட்டுத் தீ : இயல்பு வாழ்க்கை பாதிப்பு