தமிழ்த்திரையுலகின் மூத்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் இன்று காலமானார்.
அவருக்கு வயது 91. இதயக்கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சென்னை மந்தை வெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். 1922ம் ஆண்டு மார்ச் 24ம் திகதி மதுரையில் பிறந்து வளர்ந்த சௌந்தர்ராஜன் தென்னிந்திய திரையுலகின் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான பின்னணி பாடி இசையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்தார்.
1950ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் எனும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி' எனும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக மொத்தம் 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக இவர் பாடியுள்ளார். இதை தவிர்த்து 2500 க்கு மேற்பட்ட தெய்வீக மற்றும் பிறமொழிப் பாடல்களையும் பாடியுள்ளார். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இவர் பாடியிருக்கிறார். இவர் பாடிய பல தெய்வீக பாடல்களுக்கு இவரே இசையமைத்திருக்கிறார். எஸ்.எம். சுப்பையா நாயுடு தொடக்கம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை 52 வகையான இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த ஒரே பின்னணி பாடகரும் இவர் தான். 1991ம் ஆண்டு ஞானபைரவி திரைப்படத்தில் பாடிய பின்னர் திரைப்பட பாடல்களில் டி.எம்.எஸ் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
ஒரு தடவை ராஜீவ் காந்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தின் போது உள்ளம் உருகுதையா பாடலை டி.எம்.எஸ் பாட அதைக்கேட்டு உணர்ச்சிவசப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி, டி.எம்.எஸ் அருகில் வந்து அவ்வரிகளின் அர்த்தத்தை கேட்டுள்ளார். அர்த்தத்தை சொன்னதும், எனது இதயம் உண்மையில் உருகிவிட்டது என டி.எம்.எஸுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றதாக முக்தா சிறீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
2003ம் ஆண்டு டி.எம்.எஸ் ற்கு பத்ம சிறீ விருது வழங்கப்பட்டது. முன்னதாக தமிழ்நாட்டின் கலைமாமணி விருதும் பெற்றிருந்தார். 1960, 70 காலப்பகுதியில் தமிழ்நாட்டின் மாநில விருதை பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுடன் இணைந்து பல முறை பெற்றுள்ளார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என தமிழ்த்திரையுலகின் அனைத்து பழம்பெரும் நடிகர்களுக்காகவும் திரைஇசைப்பாட்டல்களை பாடியூள்ளார்.
இறுதியாக 2010ம் ஆண்டு தமிழ் செம்மொழி மாநாடு பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் குரல் கொடுத்திருந்தார்.
டி.எம்.எஸ் இன் மறைவு உலகெங்கும் பரவியிருக்கும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மாத்திரமல்லாது தமிழ்த் திரை இசையுலகுக்கே பெரும் இழப்பாக ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
0 Responses to தமிழ்த்திரையுகின் மூத்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் காலமானார்