இலங்கை அரசாங்கம் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க எடுத்த முயற்சிகள் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக தடைப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான கேணல் ஹரிகரின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைச் சட்டமான 13வது திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டுவர மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் சூழலே உள்ளது. அதனால், தேர்தல்களுக்கு முன்னர் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. ஆனால், இந்தியா அதனை வலுவாக எதிர்த்துள்ளது. அதனாலேயே குறித்த திருத்தங்களைச் செய்வதை இலங்கை தாமதப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை காரணம் காட்டியும் இலங்கையின் மீது அதிக அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கிறது. 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்தால் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பது உள்ளிட்டவகையான அழுத்தங்கள் அவை என்றார்.
இந்தியாவில் அடுத்த வருடம் பாரளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டு அழுத்தங்களைச் சமாளிக்கும் வகையில் இந்திய மத்திய அரசாங்கம் செயற்பட வேண்டிய தேவையும் உள்ளது. ஆகவே, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை வழங்க வேண்டிய தேவை இப்போது அதிகரித்துள்ளது. அதையே இப்போது காண முடிகிறது என்று கேணல் ஹரிகரின் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to இந்தியாவின் அழுத்தங்களுக்குள் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது : கேணல் ஹரிகரன்