பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்குள் சிக்காமல் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றினைந்து உரிமைகளுக்காக போராட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேஜர் அசாத் சாலி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அம்பாறையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடத்திய மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக பிராந்தியச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
மோதல்கள் முடிவுக்கு வந்து ஆயுதங்கள் களையப்பட்டுள்ள இன்றை காலத்தில் தமிழ்- முஸ்லிம் மக்கள் பழைய குரோதங்களை மறந்து ஒரே தாயின் சகோதரர்களாக பயணிக்க வேண்டும். அதுவே, உரிமைகளைப் பெற்றுத்தரும். 13வது திருத்த சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ள எத்தனிக்கின்ற மாற்றங்களை எதிர்க்க வேண்டிய தருணமிது என்றார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து பணியாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது என்பதை கடந்த தேர்தலிலேயே உணர்ந்தியுள்ளது. அதுபோல, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் திரும்பவும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளது. ஆகவே, இணக்கமாக அரசியலொன்றை தமிழ்- முஸ்லிம் மக்கள் முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to சிறுபான்மையின மக்கள் உரிமைகளுக்காக சேர்ந்து போராட வேண்டிய காலமிது - எம்.ஏ.சுமந்திரன்