விருதுநகர் தேசபந்து
திடலில் மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞரின் 90-வது பிறந்த நாள் மற்றும்
பாராளுமன்ற தேர்தல் நிதிஅளிப்பு விழா கூட்டம் நடைபெற்றது. மாவட்ட
செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை
தாங்கினார்.
மாநில
நெசவாளர் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.
முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நிதியாக முதல் கட்டமாக
ரூ.2.5 கோடி வழங்கப்பட்டது.
இதை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.
தலைவர் கலைஞரின் 90-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அடுத்த ஆண்டு ஜூன்
3-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு
போட்டி நடைபெற்றது. உங்களுக்கு தெரிந்திருக்கும். மாநிலங்களவை தேர்தலில்
தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது.
சட்டமன்றத்தில் 23 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள தி.மு.க. இந்த தேர்தலில் களம் இறங்கியது. இதுதொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் கலந்தாலோசித்த தலைவர் கலைஞரிடம் நாங்கள் 23 எம்.எல்.ஏ.க்களுடன் இந்த தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? என்று கேட்டதுடன், ஜனநாயக முறையில் போட்டியிடுவோம் என்றும் கருத்து கூறினோம்.
ஆனாலும்
தலைவர் கலைஞர் இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று
கட்டளையிட்டார். முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிடம் ஆதரவு
கேட்டோம். அவர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவு அளிக்கப்போவதாக
தெரிவித்து விட்டார்கள்.
திராவிட
கட்சிகளுடன் கூட்டே கிடையாது என்று கூறிக்கொண்டிருக்கும் பா.ம.க.விடமும்
நானும், துணை பொதுச்செயலாளர் துரைமுருகனும் சென்று பேசினோம். ஆனாலும்
அவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார்கள். மனிதநேய மக்கள்
கட்சியும், புதிய தமிழகம் கட்சியும் எங்கள் வேண்டுகோளுக்கிணங்க
செயற்குழுவையும், பொதுக்குழுவையும் கூட்டி ஆதரவு தருவதாக கூறினார்கள்.
ஆக
அவர்களையும் சேர்த்து 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். இறுதியாக
காங்கிரஸ் கட்சியை அணுகினோம். அவர்களும் யோசித்து கூறுவதாக சொல்லி பின்னர்
ஆதரவு தந்ததால் 32 வாக்குகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும்
வாக்குப்பதிவு முடிந்த பின்பு தே.மு.தி.க., அ.தி.மு.க. ஏஜெண்டுகள் செல்லாத
ஓட்டு தி.மு.க. ஓட்டுதான் என்று கூறியும் 31 ஓட்டுகளுடன் தி.மு.க. வெற்றி
பெற்றது.
இந்த
வெற்றியை தாங்கமுடியாத சிலர் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசும்,
தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் என்று பிரசாரம் செய்து
வருகிறார்கள். பின்னால் வரும் ஒரு தேர்தலுக்கு ராஜ்யசபைத் தேர்தலில்
கிடைத்த ஆதரவை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கலைஞர் விளக்கம் அளித்து
உள்ளார். ஆனாலும் தொடர்ந்து இதே பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.
மாநிலங்களவை
தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு தே.மு.தி.க.வையும்
அணுகினோம். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே தி.மு.க.வுடன் இணைந்து
போட்டியிடவே விருப்பம் தெரிவித்தனர். ஆனால் கட்சி தலைமையிடமிருந்து தகவல்
ஏதும் வராத நிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
சட்டமன்ற
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டு காரணமாகவே
தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார் என கூறி இருக்கிறார்.
அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேர்
தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களித்து
உள்ளனர். இந்த அடிப்படை விஷயம்கூட தெரியாமல் ஒரு சட்டமன்ற எதிர்க்கட்சி
தலைவராக இருக்கும் விஜயகாந்த் பேசுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
இவ்வாறு பேசினார்.
0 Responses to அடிப்படை விஷயம்கூட தெரியாமல் விஜயகாந்த் பேசுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது: மு.க.ஸ்டாலின்