இலங்கையின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அதிர்ப்தி கொண்டுள்ள இந்தியா, இந்தியாவுக்கான தெளிவுபடுத்தல்களைச் செய்யும் முடிமாக திடீர் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் (யூலை) 04ஆம் திகதி டில்லி செல்லவுள்ள அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடமும் அழுத்தங்களை வழங்கும் என்று தெரிகிறது.
இலங்கை- இந்திய ஒப்பந்தங்களுக்கு அமைய தோற்றம்பெற்ற 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவையும் அமைத்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள இந்தியா, இலங்கை மீது கோபத்துடன் இருப்பதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு இலங்கை மீது அதிக அழுத்தங்களை எதிர்காலத்தில் இந்தியா வழங்கவும் தீர்மானித்துள்ளது.
குறிப்பாக, கொழும்பில் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்வதிலிருந்து விலகுவதற்கும் இந்தியா தீர்மானித்துள்ளது. இதனால், மிகவும் அச்சமடைந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய விசேட செய்தியுடன் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை எதிர்வரும் 04ஆம் திகதி டில்லிக்கு அனுப்புகிறார். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும், வடக்கு தேர்தல்கள், 13வது திருத்தம் பற்றிய தெளிவுபடுத்தல்களை பஷில் ராஜபக்ஷ வழங்வுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், சீனாவுடன் நெருக்கமாக இருக்கின்ற இலங்கைக்கு தக்க தருணத்தில் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று காத்திருந்த இந்தியா, பொதுநலவாய மாநாடுகளை துருப்புச்சீ்ட்டாக வைக்கிறது. அத்தோடு, இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கு 13வது திருத்தத்திற்கு அப்பாலான தீர்வு முன்வைக்கப்படும் என்று இலங்கை இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டு மாகாண சபைகளின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையையும் இந்தியா ரசிக்கவில்லை.
இவற்றைக் கருத்தில் கொண்டே டில்லி செல்லும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடமும் இலங்கைக்கான அதிக அழுத்தத்தினை இந்தியா வழங்கும் என்று இந்திய இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to இலங்கை மீதான அழுத்தத்தை; டில்லி செல்லும் பஷில் ராஜபக்ஷவிடமும் இந்தியா விடுக்கும்?