Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


எதிர்வரும் செம்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சருக்கான வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணக்கிளை முன்மொழிந்துள்ளதாக அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்  சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் யாழ் கிளையினருக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட ஆராய்வுக் கூட்டமொன்று நடைபெற்றது. அதன்போதே வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா அவர்களை முன்மொழிய தீர்மானிக்கப்பட்டது. குறித்த தீர்மானம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவருமான இரா.சம்பந்தனுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

யாழ் ஊடக அமையத்தின் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே சீ.வி.கே. சிவஞானம் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஐந்துக்கும் அதிகமான கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்படாத நிலையில் தமிழரசுக் கட்சியின் யாழ் கிளை மாவை.சேனாதிராஜா அவர்களை முன்மொழிந்துள்ளமை சிறு சலசலப்பைத் தோற்றுவிக்குமென்று கருதப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்திருக்கிறது. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய ஏனைய கட்சிகளும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வந்த போதிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், வடக்கு மாகாண சபைத் தேர்தல்களுக்கான முதலமைச்சர் வேட்பாளராக மாவை.சேனாதிராஜாவை தமிழரசுக் கட்சியின் யாழ் கிளை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராஜா: சீ.வி.கே. சிவஞானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com