சிங்கள மக்கள் கருத்தடை செய்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பௌத்த தர்மத்தின் வழி செல்லும் இலங்கையர்களின் தொகை அதிகரிக்க வேண்டும் என்று பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள இளையோரிடம் கருத்தடை மாத்திரைகள் பாவிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது, இனத்தின் வளர்ச்சிக்கு தடையானது. அந்த மாதிரியான முறைகளைக் கைவிட வேண்டும். அத்தோடு முஸ்லிம் வைத்தியர்களை நாடிச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், முஸ்லிம் வைத்தியர்கள் சட்டவிரோதமாக சிங்கள இளைஞர்களுக்கு கருத்தடை செய்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தங்களது இனத்தை பெருக்கி எல்லா இடங்களிலும் வளர்ந்து வருகின்றனனர். வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அவர்களின் ஆதிக்கமேயுள்ளது. எனவே, சிங்கள மக்கள் எச்சரிக்கையுணர்வுடன் இனத்தைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டுநாயக்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சிங்களவர்கள் முஸ்லிம் வர்த்தகர்களை நிராகரிக்குமாறும்- முஸ்லிம் வைத்தியர்களையும் மருந்துகளையும் நாட வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை எல்லோரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார். இதனிடையே, சிறுபான்மையினங்கள் மீதான பொதுபல சேனாவின் அச்சமூட்டுக்கள் கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to சிங்களவர்கள் கருத்தடை செய்ய வேண்டாம், பௌத்தம் காக்கப்பட வேண்டும்: பொதுபல சேனா