மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாட்டில் சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தும் எந்த முயற்சிகளையும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எடுக்கவில்லை.
மாறாக தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், தேசிய ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தனது குழுவினருடன் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தார். அங்கு நல்லூர் ஆலய வழிபாடுகளை முடிந்துக்கொண்ட அவர், மக்கள் சந்திப்பொன்றிலும்- யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார். அந்த சந்திப்புக்களில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இன, மத பேதங்களின்றி நாட்டு மக்கள் எல்லோரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும். அதற்கான தேவையே எமக்கு முன்னால் உள்ளது. மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அதனையே அவசரமாக செய்திருக்க வேண்டும். ஆனால், அதைவிட்டு அரசாங்கமும், அரசியல்வாதிகளும் சுயலாபங்களைத் கருத்தில் கொண்டு மக்களை மறந்து செயற்படுகின்றனர். மக்கள் இன்றைக்கு வறுமைக்குள் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்றார்
தெற்கில் மாகாண சபைகள் இயங்குகின்றன. ஆனால், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் பின்நிற்கிறது. இதிலிருந்தே தமிழ் மக்களை மாற்று மனநிலையுடன் அணுகுவது புரிகிறது. இலங்கை- இந்திய ஒப்பத்தங்களில் படி உருவான 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்யப்போவதாக அரசாங்கம் அறிவித்து இந்தியாவோடு முரண்பாடுகளை அதிகப்படுத்துகிறது. இது, இப்போது தேவையற்ற நடவடிக்கை. இந்தியாவோடு நட்புறவோடு இருக்க வேண்டும். அதுதான் இலங்கையின் முன்னேற்றத்துக்கு அவசியமானது என்றார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கே.பி, தமிழினி, தயா மாஸ்டர் ஆகியோரை முன்னிறுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமும் கருதுகிறதே ஒழிய, தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவது தொடர்பில் கொஞ்சமும் சிந்திக்கவில்லை என்று கூறிய சரத் பொன்சேகா, வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
0 Responses to தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடிகளில் மஹிந்த அரசாங்கம் ஈடுபடுகிறது: சரத்