நாலுபேருக்குத் தெரிகிறமாதிரி ஏதாவதொரு துறையில் பிரபலமாகிவிட்டால், தன் சமூகத்தைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டான் தமிழன். 'உங்களுக்கு இருக்கிற பாப்புலாரிட்டிக்கு அரசியல் பற்றியெல்லாம் நீங்கள் பேசலாமா' என்று வேப்பிலை அடித்தே ஊமையாக்கி விடுவார்கள், சுற்றியிருக்கிற பூசாரிகள். இந்தப் பொதுவான விதிக்கு, விதிவிலக்கு மாயா.
இசை உலகில் தமிழனின் ஒருமுகம் ஏ.ஆர். ரஹ்மான் என்றால், இன்னொரு முகம் - எம்.ஐ.ஏ. என்கிற பெயரில் பாப் இசை உலகை அதிரவைக்கும் மாயா. ஈழச் சகோதரியான இந்த இளம் பாடகி, 'எங்கள் மண்ணில் நடந்தது போர் அல்ல... அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை' என்பதை உலக அரங்கில் உரத்த குரலில் பதிவு செய்து வருபவர். எதிர்த்துக் குரல் கொடுக்க, இலங்கைத் தூதரகங்கள் ஏற்பாடு செய்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நடந்த இனப்படுகொலையைத் துணிவுடன் தோலுரிப்பவர்.
ராதிகா சிற்சபேசன் என்கிற இன்னொரு ஈழச் சகோதரி, இன்றைக்கு கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர். 'இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் கலந்துகொள்ளமாட்டார் - என்று அறிவிப்பது மட்டுமே போதாது, கனடா சார்பில் அதிகாரிகள் கூட கலந்துகொள்ளக் கூடாது. இனப்படுகொலை செய்த ஒரு நாட்டில் நடக்கும் அந்த மாநாட்டை கனடா முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்' என்கிறார் ராதிகா.
எழரைக்கோடி தமிழர்கள் இருக்கும் தாய்த்தமிழ் மண்ணிலிருந்து - 'இனப்படுகொலை செய்த இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது' என்கிற குரல் உரக்க ஒலிக்கவில்லை இன்னும். ஒருவேளை, 'அங்கே நடந்தது போர்தான், இனப்படுகொலை இல்லை' என்கிற மார்க்சிஸ்ட்களின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை நம்பிவிட்டதா தமிழ்நாடு?
உலகின் மிக மோசமான குற்றம் - இனப்படுகொலைதான். குறிப்பிட்ட இனத்தில் பிறந்ததற்காகவே குழந்தைகளைக் கூட கொல்வது, 'அந்த இனத்திலா பிறந்தாய்' என்று சொல்லிச் சொல்லி பாலியல் வன்முறைக்குப் பெண்களைப் பலியாக்குவது, பிணங்களைக் கூட புணர்வது - ஈழமண்ணில் அரங்கேற்றப்பட்டது ஈவிரக்கமற்ற இந்தக் காட்டுமிராண்டித்தனமன்றி வேறென்ன?
இதை எப்படி மன்னிக்க முடியும்? இதைத்தான் கேட்கிறோம் நாம். குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்று - என்கிறோம்.
'அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர்களாவது, கொன்று குவித்த சிங்கள வெறியர்களுடன் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து விட்டுப் போகட்டுமே' என்று சாவு வீட்டில் வந்து சமாதானம் பேசுகிறார்கள் நாச்சியப்பன்களும் நாராயணசாமிகளும்! வெட்கங் கெட்டவர்கள்!
கற்பழித்துக் கொலை செய்த குற்றவாளிகளைக் கூண்டிலேற்றித் தண்டிக்காமல், சுதந்திரமாக நடமாடவிட்டுவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரையும் க்ளோஸ் சர்க்யூட் கேமரா மூலம் கண்காணித்து, மேலதிகக் கொலைகளும் கற்பழிப்புகளும் நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள் போல! முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? 'இனிமேல் உங்களைக் கற்பழிக்கவோ கொலைசெய்யவோ கற்பழித்துக்கொலைசெய்யவோ மாட்டோம் - என்று பகவான் புத்தரின் பெயரால் உறுதிமொழி அளிக்கிறோம்' என்று அவர்களிடம் எழுதி வாங்கிக்கொள்ளப் போகிறார்களா இந்த மேதாவிகள்? புரியவில்லை.
இனப்படுகொலை செய்தவர்களைக் கொன்று குவிக்கவேண்டும் என்றோ, கற்பழித்தவர்களைக் காயடிக்க வேண்டும் என்றோ - 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' நீதியைக் கேட்கவில்லை நாம். அதற்காக, கற்பழித்தவனும் கொலைகாரனும் சுதந்திரமாக நடமாடட்டும், எங்கள் உறவுகளுக்கு சோறு தண்ணீர் கிடைத்தால் போதும் - என்று இங்கேயிருந்தே தீர்மானிப்பது அயோக்கியத்தனம். பாதிக்கப்பட்டவர்கள் அங்கேயிருந்து கேட்க இயலாத நீதியை இங்கேயிருந்து நாம் கேட்க வேண்டாமா?
இதே கேள்வியை, பசில் ராஜபட்சேவைச் சந்தித்துப் பேசியிருக்கும் தமிழக மீனவர் தலைவர்களிடமும் கேட்க வேண்டியிருக்கிறது. "எங்கள் உறவுகளைக் கொன்று குவித்த இலங்கைக் கடற்படையினரை அடையாளம் காணவேண்டும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும், அந்தக் கொலைகாரர்களைத் தண்டிக்க வேண்டும்" - என்று பசிலிடம் கேட்டீர்களா, இல்லையா?
மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதை, தாக்கப்படுவதைக் கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியிலேயே இதெல்லாம் நடப்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக, இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டிக்கவேண்டும் - என்கிறார் முதல்வர். நீங்கள் மட்டும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டுகிறீர்கள் - என்றெல்லாம் பசில் புளுகியதை எப்படிக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்? 'சர்வதேச கடல் எல்லையே என்றாலும் சுட்டுக் கொல்ல நீ யார் சட்டாம்பிள்ளை' என்று மதிகெட்ட மகிந்தன் தம்பியின் சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்க வேண்டாமா?
கொன்றவனையே சந்திக்கும்போதுகூட, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்க முடியாதென்றால், அரசியல்வாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? சுஷ்மா ஸ்வராஜ், டி.ஆர். பாலு, திருமாவளவன், கனிமொழி, டி.கே. ரங்கராஜன், ரவிசங்கர் பிரசாத் போன்றவர்கள் அரசியல்வாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள். ராஜதந்திரம், அரசியல் நாகரிகம் எல்லாம் பார்த்துத் தொலைக்கவேண்டும் அவர்கள். அதனால்தான், இனப்படுகொலை செய்தவர்களைக் கூண்டில் ஏற்றுங்கள் - என்றோ, எங்கள் மீனவ நண்பர்களைக் கொன்ற கடற்படை அதிகாரிகளை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் - என்றோ, ராஜபட்சேவைச் சந்தித்தபோது வலியுறுத்தவில்லை அவர்கள். வேறெதை வலியுறுத்தினார்கள் என்பதும் தெரியவில்லை.
நீங்கள் அவர்களைப்போல அரசியல்வாதிகளா என்ன? உயிரைப் பணயம் வைத்து உழைத்துப் பிழைக்கிற எங்கள் மீனவ உறவுகளின் பிரதிநிதிகள். உங்களில் எவரும், தலைவர் வேடம் கலையாமல் பார்த்துக் கொள்பவர்களும் இல்லை. அன்றாடம் கடல்தாயின் மடியில் இறங்கி நேர்மையாகத் தொழில் செய்பவர்கள் தான் தலைவர்களாக இருக்கிறீர்கள்....
கொல்லப்பட்ட மீனவச் சொந்தங்களுக்கு நியாயம் கேட்கக் கிடைத்த வாய்ப்பை வீணடித்திருக்கலாமா?
இந்த மீனவரை இத்தனாம் தேதி இத்தனை மணிக்கு இந்த இடத்தில் சுட்டுக்கொன்ற அல்லது தாக்கிய சிங்களக் கடற்படையினர் மீது இத்தனை நாளுக்குள் நடவடிக்கை எடு, இல்லாவிட்டால் ஒட்டுமொத்த மீனவர்களும் படகுகளுடன் கடலில் இறங்கி சிங்களக் கடற்படையினரைச் சிறைப்பிடிக்கச் செல்வோம்' என்று, கொல்லப்பட்ட மீனவ உறவுகளின் பெயர்ப் பட்டியலுடன் ஒரே ஒரு முறை அறிவித்துப் பாருங்கள். அதற்குப் பிறகு, சிங்களக் கப்பல் உங்கள் பக்கம் வரவே வராது. வந்தால் உதைப்பார்கள் - என்று தெரிந்தால் போதும்.... விடு ஜூட் என்று விலகிவிடும் இலங்கை.
இதைச் செய்யாமல், நேரம் ஒதுக்கியதற்கு நன்றி - என்று நீங்கள் ஆரம்பித்தவுடனேயே, உங்கள் நாடிபிடித்துப் பார்த்திருப்பான் பசில். உடனேயே திருவாயைத் திறந்து போதனை செய்யத் தொடங்கியிருப்பான். 'சர்வதேச கடல் எல்லையைத் தாண்டுகிறீர்கள், கடல் வளத்தைச் சுரண்டுகிறீர்கள், இரு தரப்பு மீனவருக்கும் பிரச்சினை இருக்கிறது' என்றெல்லாம் அவன் துண்டை விரித்துச் சுண்டல் விற்றிருக்கிறானென்றால், அவன் பேசவில்லை... உங்களுடைய வெள்ளந்தியான அணுகுமுறையால் நீங்கள்தான் அப்படிப் பேசவைத்திருக்கிறீர்கள். இருதரப்பு மீனவருக்கும் பிரச்சினை - என்று அவன் சொன்னவுடனேயே, 'எல்லை தாண்டிவந்த எத்தனை சிங்கள மீனவர்களை இந்தியக் கடற்படை சுட்டுக்கொன்றிருக்கிறது' என்று திருப்பிக் கேட்டிருக்க வேண்டாமா நீங்கள்?
தன்னுடைய மறைவிடத்தை அடுத்தவன் பார்ப்பதைப் பற்றிய அருவருப்பே இல்லாமல் 'என் சிறுநீரைக் குடி' என்று சொன்னவர்களின் உறுப்பைச் செருப்பால் அடிக்க முடியாமல் போயிருக்கலாம்... அதற்கு நியாயம் கேட்கக் கிடைத்த வாய்ப்பையுமா நழுவவிடுவது?
இங்கேயிருந்து அங்கே போய்வந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபட்சே சகோதரர்கள் அரசியல் வகுப்பெல்லாம் எடுத்து அனுப்பியபோது, நான் இப்படியெல்லாம் கேட்கவில்லை நண்பர்களே! அவர்கள் வெறும் அரசியல் வாதிகள். அவர்களிடம் பேச எனக்கென்ன இருக்கிறது?
உங்களை அப்படி அந்நியமாக நினைக்கவில்லை நான். 'வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு, முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை' என்கிற பாடலை நினைத்தபடியே தான் பார்க்கிறேன் உங்களை! இன்று நேற்றல்ல, எழுபத்தாறிலிருந்து எண்பத்து ஒன்றுவரை ஒரு கடலோரக் கல்லூரியின் மாணவனாக இருந்த சமயத்தில் உங்கள் வாழ்வியலை மிக அருகாமையிலிருந்து பார்த்துப் பார்த்து வியந்தவன் என்கிற அக்கறையோடு தான் கேட்கிறேன் இதை!
இலங்கையைப் பற்றித் தெரியாதா உங்களுக்கு! கொன்று குவித்தவர்களின் பிணங்களை வைத்தே பிசினஸ் செய்கிற கேடுகெட்ட தேசம் அது. 'கொன்று குவிக்க உதவியதற்கு நன்றி நண்பா! கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு வீடு கட்ட பைசா வெட்டு' என்று கூசாமல் கேட்கிறது இந்தியாவிடம். மறுவார்த்தை பேசாமல் அள்ளிக் கொடுக்கிறார்கள் சுய மரியாதை சிங்கங்கள். (கொடுக்காட்டா போட்டுக் கொடுத்துடுவானுங்களே!)
விவரம்தெரியாமல், 'மகிந்த ராஜபட்சேவைப் பார்க்க வரவா' என்று நாம் மனு கொடுக்கலாமா? சர்வதேச நீதிமன்றக் கூண்டில் அந்த மிருகம் நிறுத்தப்படும் நாளில், ஒரு ஓரமாய் நின்று பார்க்கத்தானே போகிறோம்... அதற்குமுன் அப்படி என்ன அவசரம் உங்களுக்கு?
வடகிழக்கு என்பது தமிழர் தாயகம், தமிழரின் தாய்மண். அந்த மண்ணையும் அபகரிப்பதற்காகத்தான் நடத்தப்பட்டது இனப்படுகொலை. இனப்படுகொலை நடந்த பகுதிகளில் பல கடலோரப் பகுதிகள். உங்களை போலவே உழைத்துப் பிழைத்த மீனவர்கள் காலங்காலமாக வசித்த பகுதிகள்.
கொல்லப்பட்டவர்களில் மீனவர்களின் எண்ணிக்கையே அதிகமாயிருக்கலாம். 30 ஆண்டுகளாகவே அவர்களை நிம்மதியாகப் பிழைக்க அனுமதிக்கவில்லை சிங்களக் கடற்படை. இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டு, பசில் என்கிற ஓநாய் உங்களிடம் புளுகுகிறது - 'வடக்கிலுள்ள மீனவர்களின் நலன் எங்களுக்கு முக்கியம்' - என்று!
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதிருக்கிறது.... 'வடக்குப் பகுதி மீனவர்கள் 30 ஆண்டுகளாய் மீன்பிடித் தொழிலை இயல்பாக மேற்கொள்ள முடியவில்லை... இப்போதுதான் அவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்யத் தொடங்குகிறார்கள்...
அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள்' என்று பசில் என்கிற ஓநாய் - சென்டிமென்டாகப் பேசியதும் உருகிவிட்டீர்கள் நீங்கள்.
பசப்பு வார்த்தைகளால் உங்களிடம் சொன்ன பொய்யும் புரட்டும் இரண்டே நாளில் அம்பலமாகிவிடும் என்பது டெல்லியிலிருந்தபோது பசிலுக்கும் தெரியாது.... அவனது நீலிக் கண்ணீரைப் பார்த்துக் கண்கலங்கிய உங்களுக்கும் தெரியாது. டெல்லியிலிருந்து அவன் கொழும்பு திரும்புவதற்கு முன், முல்லைத்தீவில் ஆரம்பித்துவிட்டது மீனவர்களின் போராட்டம். 'எங்களது வாழ்வுரிமையை காப்பாற்று' என்று உரத்த குரலில் முழங்குகிறார்கள், வடக்குப் பகுதி தமிழ் மீனவர்கள்.
பசில் சொன்னதைப்போல், வடபகுதி தமிழ் மீனவர்களின் மீன்பிடித் தொழில், நாம் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதால்தான் பாதிக்கப்படுகிறதோ என்றே எண்ணத் தோன்றியது முதலில்! தப்பித் தவறி முதல்முறையாக அவன் ஒரு உண்மையைப் பேசிவிட்டானோ - என்கிற வியப்போடு அந்தச் செய்திக்குள் நுழைந்தபிறகுதான் தெரிகிறது, அந்தக் கள்ளப் புத்தனை நிதர்சனம் நிர்வாணப்படுத்தியிருப்பது!
முல்லைத் தீவு மீனவர்கள் - சாகும் வரை உண்ணாவிரதம் - என்கிற அறப்போரில் இறங்கியிருக்கிறார்கள்.
"தென்னிலங்கையில் இருந்து வரும் 'வெளி மாவட்ட' மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதைத் தடை செய்யவேண்டும், அவர்களை இந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றவேண்டும்"
- இதுதான் போராடும் தமிழ் மீனவர்களின் கோரிக்கை. தமிழ்நாட்டு மீனவ உறவுகளை வழிநடத்தும் தலைவர்கள், தங்களைத் தவறாக வழிநடத்த பசில் முயன்றதை இனியாவது புரிந்துகொள்ளவேண்டும். நாற்பத்தெட்டே மணிநேரத்தில், அந்த நரியின் - நீலச் சாயம் கரைஞ்சி போச்சி, ராஜா வேஷம் கலைஞ்சி போச்சி! இதற்குப் பிறகும் அப்பாவி ஆட்டுக்குட்டிகளாகவே இருந்துவிடக் கூடாது நாம்!
போராடிய மீனவர்களிடம், 'கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுகிறோம். நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்' என்று சமத்காரமாகப் பேசிப் பார்த்தார்கள் இலங்கை அதிகாரிகள். 'வெளி மாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட்டால்தான் உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம்' என்று தெளிவாகத் தெரிவித்துவிட்டார்கள் தமிழ் மீனவர்கள். அவர்களது இந்த உறுதிக்குப் பிறகுதான் -'முல்லைத் தீவு, நாயாறு கடல் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்கள் ஒரு வாரத்தில் வெளியேற்றப்படுவார்கள்' என்று அவசர அவசரமாக அறிவிப்பு வருகிறது. போலீசாரால் அவர்களை வெளியேற்ற முடியவில்லை என்றும், அவர்களை வெளியேற்றும் பொருட்டு ஒரு அமைச்சரே வரப்போகிறார் என்றும் செய்தி வருகிறது.
அமைச்சர் வந்தாரா, முல்லைத் தீவு பகுதியிலிருந்து தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றினாரா - என்பது இனிதான் தெரியும். இப்போதைக்கு நாம் புரிந்துகொள்ள முடிவது, வட பகுதி தமிழ் மீனவர்களுக்கு யாரால் பிரச்சினை என்பதைத்தான்! இதை மூடி மறைத்து, தமிழக மீனவர்கள் மீது பழிபோட பசில் என்கிற ஓநாய் வேஷம் போட்டிருக்கிறது.... தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் மோதலை ஏற்படுத்திக் குளிர்காயப் பார்த்திருக்கிறது... அந்த முதலையின் கண்ணீரைப் பார்த்து ஏமாந்த தமிழக மீனவர் தலைவர்கள் - நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்கக்கூட மறந்து திரும்பி வந்திருக்கிறார்கள்!
கடந்த சில ஆண்டுகளாகவே, வடக்குப் பகுதி மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை, அத்துமீறி நுழையும் தென்னிலங்கை மீனவர்கள் நசுக்கி நாசமாக்கிக் கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தென்னிலங்கை மீனவர்கள், முல்லைத் தீவை ஒட்டிய பகுதிகளில் குடியேறியே விட்டனர். வடபிராந்திய கடற்படை அதிகாரி உடவத்த - தமிழ் மீனவர்களை அச்சுறுத்தும் விதத்தில் 'தென்னிலங்கை மீனவர்கள் இங்கே வந்து மீன்பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது' என்று எச்சரித்திருந்தான்.
இதெல்லாம் தெரியாமல்தான், 'பேச்சுவார்த்தை நடத்த கொழும்புக்கு வரலாமா' என்று கேட்டிருக்கிறார்கள் நமது மீனவச் சொந்தங்கள். அவர்களே இப்படிக் கேட்டதாகக் கொழும்பு பத்திரிகைகளில் செய்தி வருகிறது. 'அங்கே வாருங்கள், பேசுவோம்' என்று பசில் அழைத்ததாக இங்கேயிருப்பவர்கள் சொல்கிறார்கள். எது உண்மை என்பது முக்கியமில்லை.
உழைத்துப் பிழைக்கிற எங்கள் மீனவ உறவுகளின் சார்பில் பேசப் போகும் எவரும், இதுவரை கொல்லப்பட்டிருக்கிற தமிழக மீனவர்கள் அறுநூறு எழுநூறு பேர் பற்றிய முழு விவரங்களுடன் கொழும்புக்குச் செல்லவேண்டும். கொலைகாரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்து - என்று வலியுறுத்தவேண்டும். அதுதான் முக்கியம்.
கொழும்பு புறப்படும் முன், அதே பட்டியலைத் தமிழக முதல்வரிடமும் அவர்கள் கொடுத்து விட்டுப் போகட்டும். 'தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் வெளி விவகாரத் துறை ஒரு துரும்பைக்கூட தூக்கி வைக்காதது ஏன்' என்கிற நியாயமான கேள்வியை எழுப்புகிற முதல்வரும் அதன்மீது நடவடிக்கைகளைத் தொடங்கும் நிலையில், இருமுனைத் தாக்குதலில் இலங்கை நசுங்கும். நச்சுப் பெருச்சாளியைக் கிடுக்கி இல்லாமல் பிடிக்க முடியுமா?
நம்முடைய சகிப்புத்தன்மை இருக்கிறதே... அதுதான் நமது ஆகப்பெரிய பலவீனம்.... அது இனப்படுகொலையானாலும் சரி, மீனவர்கள் படுகொலையானாலும் சரி! மீண்டும் மீண்டும் மீனவர்கள் கொல்லப்பட்ட பிறகும், தாக்கப்பட்ட பிறகும், 'இனிமேல் இப்படி நடக்க அனுமதிக்கக்கூடாது' என்று மத்திய அரசுக்கு மடல் அனுப்பினால் எப்படி? 'சுட்டுக் கொன்றவர்களை எங்களிடம் ஒப்படைக்கச் சொல்' என்று வற்புறுத்த வேண்டாமா?
சொந்தத் தம்பிகளில் ஒருவனைக் கொன்றவனிடம் போய், 'இன்னொரு தம்பியை நீ கொன்றுவிடக் கூடாது' என்று கெஞ்சிக் கொண்டா இருப்போம்? சொந்தச் சகோதரனுக்கு ஒரு நியாயம், மீனவச் சகோதரர்கள் என்றால் வேறு நியாயமா?
மீனவச் சகோதரர்களைப் பார்த்து உரிமையுடன் கேட்கிறேன்... இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் அறுநூறு பேரிலிருந்து ஆயிரம் பேர் வரை இருக்கக்கூடும். இவ்வளவு பேரைக் கொன்று குவித்த இலங்கைக் கடற்படை வெறியர்கள் அத்தனைப் பேரையும் காப்பாற்றுகிற, மீண்டும் உங்களைக் கொல்ல அவர்களைக் கப்பலேற்றி அனுப்புகிற இலங்கை உங்களைக் காப்பாற்றும் என்று இன்னுமா நம்புகிறீர்கள்? சுட்டுத் தள்ளுவது, சிங்களக் கடற்படை.
பசிலோ, வடக்கு மீனவர்களுக்காகத்தான் எல்லாம் - என்று பழியை நமது தொப்புள்கொடி உறவுகள் மீதே திருப்பப் பார்க்கிறான்... கொல்லப்பட்ட நமது உறவுகளுக்காக நியாயம் கேட்டிருந்தால் இப்படியெல்லாம் பித்தலாட்டம் செய்திருக்குமா அந்த பௌத்த மிருகம்?
0 Responses to இரண்டேநாளில் வெளுத்தது பசிலின் சாயம். - புகழேந்தி தங்கராஜ்