வயதானாலும் வாலிபக் கவிஞர் என்று, திரையுலகினர் மற்றும் மக்களால் வர்ணிக்கப்பட்ட கவிஞர் வாலி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று பிற்பகல் காலமானார்.
கடந்த மாதம் முதலாகவே, உடல் நல குறைவால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கவிஞர் வாலிக்கு, நேற்று செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
வாலி நலம் பெற வேண்டும் என்று திரையுலகமே பிரார்த்தித்து வந்த நிலையில், இன்று பிற்பகல் வாலி காலமானார் என்கிற துயரத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற வாலி, தமிழக அரசின் விருதுகளை 5 முறை பெற்றுள்ளார்.
ஆயிரக் கணக்கான பாடல்கள் எழுதியுள்ள வாலி, பல புத்தகங்களும் எழுதியுள்ளார் எனபது குறிப்பிடத் தக்கது. கவிஞர் வாலியின் இழப்பு என்பது தமிழ் திரையுலகின் வாலிபக் கவிஞர் எனும் இடத்தை வெற்றிடமாக்கிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ளாராம் வாலி. ஐந்து தசாப்த காலமாக இவ்வளவு நீண்டகாலம் நிலைத்து நின்ற திரைப்பட பாடலாசிரியர் வேறு எவரும் இல்லை என்கின்றார் திரைப்பட ஆய்வாளர் வாமனன்.
பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார் வாலி.
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.
0 Responses to கவிஞர்வாலி உடல்நலக் குறைவால் சென்னையில் பிற்பகல் காலமானார்...