Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிரியின் கையில் இருக்கும் ஆயுதங்களை விட, ஆதரவாளர்களின் மௌனம் தான் கொடுமையானது - என்கிற மார்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை, உலகின் எந்த மூலையில் எவர் நினைவில் வைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஒட்டுமொத்தத் தமிழகமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஈடு இணையற்ற அந்தக் கறுப்பினத் தலைவன், நமக்கே நமக்காகச் சொன்னதைப் போலவே இருக்கிறது அந்த வார்த்தைகள்.

அமைதிப்படை என்கிற பெயரில் தமிழ் ஈழ மண்ணில் தரையிறங்கிய ராஜீவின் படைகள், விடுதலைப் புலிகளை அழிக்கும் பணியையும், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களை நசுக்கும் பணியையும் ஈவிரக்கமின்றி மேற்கொண்டபோது, 26வது மைலில் மைல்கல் போன்று அசைவே இல்லாமல் கிடந்தது யார்?   2008 - 2009ல், ஈழத்தில் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த சமயத்தில், 26வது மைலில் உடலின் ஒன்பது வாசலையும் மூடிக்கொண்டு மௌனம் சாதித்தவர்கள் யார்? இன்று உலகம் முழுக்க,

இனப்படுகொலைக்கு எதிரான குரல் வலுவடைந்துவரும் நிலையிலும் அதைப்பற்றிப் பேசலாமா வேண்டாமா - என்று கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிற அதிமேதாவிகள் யார்?
கண்ணாடி முன்னால் போய் நின்று நன்றாகக் கண் திறந்து  பாருங்கள். இந்தியாவின் துணையுடன் விரிவாகவும் தெளிவாகவும் திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலையை ராஜபக்சே அரசு 4 ஆண்டுகளாக மூடி மறைக்க முடிவதற்கு முழுமுதற் காரணம் யார் என்பதைக் கண்ணெதிரில் பார்ப்பீர்கள்.

ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கும், அவர்கள் கொல்லப்பட்டதை மூடி மறைக்க முடிவதற்கும் எவரது மௌனம் காரணமோ, அவரை, அந்த முதல் குற்றவாளியைக் கண்ணாடியில் பார்ப்பீர்கள். தன்னிரக்கமும் கோபமும் வருகிறதா? அதை அடக்காதீர்கள்! 'மோதிமிதித்து விடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்கிற பாரதி பாதையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! வேறு வழி?

''நாங்கள் ஏழரைக் கோடி ஜனங்களும் நாய்களோ, பன்றிச் சேய்களோ'' 

என்று பாரதியின் வார்த்தையில் ஒரு வார்த்தை மாற்றிப் படித்துப் பாருங்கள். அப்படியாவது நமக்கு சுரணை வருகிறதா என்று பார்ப்போம்!

எண்ணிக்கையில் குறைந்த ஒரு கறுப்பினத்தால், தன் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு உரிய நேரத்தில் நீதியைப் பெற முடிகிறது. தமிழகத்தில் இருக்கும் ஏழரைக் கோடி பேருடன் சேர்த்து, உலகமெங்கும் இருக்கும் 10 கோடி தமிழர்களால் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் உலகின் முதல் இனம், உயர் தனிச் செம்மொழி,  ஆண்ட பரம்பரை, மீண்ட பரம்பரை என்கிற அலப்பரை.

பக்கத்து வீட்டுக்கு நெருப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... அதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் நம் வீட்டு அடுப்பில் கூழ் காய்ச்சிக் கொண்டிருக்கிறோம் - என்றால் உண்மையில் நாம் யார்? அறிவிருக்கிறதா உனக்கு - என்று நம்மைப்பார்த்துக் கேட்பார்களா மாட்டார்களா? 'எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம் இந்தக் கேள்வியை? எங்களிடம் தொல்காப்பியம் இருக்கிறது, சங்கப் பாடல் இருக்கிறது, ஐம்பெருங் காப்பியம் இருக்கிறது, திருக்குறள் இருக்கிறது, திருவாசகம் இருக்கிறது' என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருந்தால், 'அறிவு இருக்கிறதா' என்று கேட்டு நமது பிடரியில் நாலு தட்டு தட்டுவார்களா மாட்டார்களா?

''அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர்''
 
என்று வள்ளுவன் சொன்னது நம்மைத் தவிர வேறு எவருக்குப் பொருந்தும்? அறிவாளிகள் தான் நாம்... அறிவார்ந்த சமூகம் தான்... ஆனால் மனிதப் பண்பு இல்லாத சமூகம். சக மனிதன் அடித்துக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிற ஒரு சமூகம், கொன்றவன் யார் என்று காவலர்கள் கேட்கிறபோது சகலத்தையும் பொத்திக் கொள்கிற ஒரு சமூகம், இப்படியொரு ஜன சமூகம் இருந்தாலென்ன, இல்லாது போனாலென்ன!
நாம் கடைந்தெடுத்த கோழைகள் என்பதும், வாய்ச் சவடால் வீரர்கள் என்பதும் தெரியாமலா ராஜபக்சே அவ்வளவு தைரியமாக திருப்பதிக்கு வந்து செல்கிறான்! அந்த அளவுக்கு அவன் நம்மை அவமதிக்கிறான் என்றால், அந்த மிருகம் நம்மை மதிக்கிற அளவுக்குக் கூட நமக்கு சுரணை இல்லாமல் போயிருக்கிறது என்றுதானே அர்த்தம்!

எதிலெல்லாம் வீரம் காட்டுகிறோம் - என்று நினைத்துப் பார்த்தாலே வேதனையாயிருக்கிறது. ஓடுகிற ரயிலில் ஒரு கல்லூரி மாணவர்களை இன்னொரு கல்லூரி மாணவர்கள் கத்தியோடும் கட்டையோடும் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்.

எந்த மாணவர்கள்? 4 மாதங்களுக்கு முன், எங்கள் தமிழக மாணவச் செல்வங்கள் ஒட்டுமொத்தமாக வீதிக்கு வந்து எங்கள் பாலச்சந்திரனுக்கு நீதி கேட்டபோது, அவர்களோடு சேர்ந்து நிற்காமல், 'எங்களுக்கு எவ்ளோ பிராப்ளம் இருக்குதுன்னு தெரியுமா' என்று எங்கள் முகத்துக்கு நேரே கேள்வியை நீட்டினார்களே... அந்த மாணவர்கள்! அவர்களைத் தவிர யார் இந்தப் பொறுக்கித்தனத்தில் வீரம் காட்ட முடியும்?

ரூட்டு தல - என்று பொறுக்கிகளுக்குப் பெயர் வைப்பதும், மண்ணுக்காகப் போராடிய மாவீரர்களைப் பற்றியெல்லாம் படமெடுக்காத கோலிவுட்  அந்தப் பொறுக்கிகளைப் பற்றிப் படமெடுப்பதும் கொடுமையிலும் கொடுமை.

இந்தப் பொறுக்கிகளெல்லாம் படித்துக் கிழிப்பார்களாம், அவர்களைக் கல்லூரியில் அனுமதிப்பார்களாம்... ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டுப் போராட முயலும் மாணவர்களை மட்டும் சாம பேத தான தண்டங்களால் அடக்குவார்களாம், அந்தப் போராட்டத்தை முடக்குவார்களாம்... நல்ல கல்லூரிகள்... நல்ல நிர்வாகங்கள்!

இன்னொரு புறம், "இங்கேயே ஆயிரம் பிரச்சினை, இதற்கே நியாயம் கேட்க முடியவில்லை, அங்கே நடந்ததற்கு எப்படி நியாயம் கேட்கமுடியும்" - என்று கேட்கிற தன்னம்பிக்கையின் சிகரங்கள். பேரன்புக்குரிய அந்தச் சகோதர சகோதரிகளுக்கு பணிவன்போடு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான்.....  கண்ணெதிரில் நடந்த ஒரு இனப்படுகொலைக்கே, கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உயிர்களுக்கே, கற்பழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் சகோதரிகளுக்கே நாம் நியாயம் கேட்க முடியாதென்றால், வேறெதற்கேனும் நம்மால் நியாயம் கேட்டுக் கிழித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? வாய்ப்பேயில்லை.

மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட அந்த மக்கள் போராட்டத்தின் வலுவையும் வலியையும் தெரிந்துகொள்ள முடியாதவர்களும் முயலாதவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? 'தமிழ்நாட்டில் இருக்கிற பிரச்சினைகளைத் திசை திருப்ப, வாயைத் திறக்கும் போதெல்லாம் ஈழம் ஈழம் என்றே முழங்குகிறார்கள் சிலர்' என்று சொல்லும் அந்த 'மகத்தான' மனிதப் பிறவிகளை என்ன பெயரால் அழைப்பது?

கொட்டாவியைக் கூட தங்களது சொந்த நலன்களுக்காக இல்லாமல் வேறெவரின் நலனுக்காகவும் விட்டுவிடக் கூடாது என்கிற முடிவோடு இருக்கிற அவர்கள், சாதி மசாலாவையோ  மத மசாலாவையோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலையில் அரைக்கத் தொடர்ந்து முயல்பவர்கள். மக்கள் போராட்டம் ஒன்றை எப்படி வடிவமைக்கவேண்டும் என்பதை பிரபாகரன் போன்றவர்களின் வரலாற்றிலிருந்து தெரிந்துகொள்ள முயல்வதை விட்டுவிட்டு, தன்னிரக்கத்தோடு இப்படி ஒப்பாரி வைப்பதை அவர்கள் நிறுத்தவேண்டும்.

இவர்களைப் போல் பிரபாகரன் வாய் வீரம் காட்டிக் கொண்டிருக்கவில்லை. இவர்களைப் போல், பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கவில்லை. இவர்களைப் போல் சாதிய அடிப்படையில் மக்களைப் பிரித்துக் கொண்டிருக்கவில்லை.

இவர்களைப்போல் சந்தர்ப்பம் பார்த்து சவுண்ட் கொடுக்கவில்லை. அந்த மனிதன் உண்மையைப் பேசினான், உண்மையாய்ப் பேசினான். அவனுடைய வார்த்தையே அவனது வாழ்கையாய் இருந்தது. 'என்னுடைய வாழ்க்கைதான் என்னுடைய செய்தி' என்று சொல்லும் தகுதி காந்திஜிக்கு இருந்ததைப் போலவே,  பிரபாகரனுக்கும் இருந்தது.
  
ஈழத்தில் நடந்த உரிமைப்போருக்காக தமிழ்நாடு வாரி வழங்க வேண்டும் - என்று பிரபாகரன் ஒருபோதும் கோரிக்கை வைத்ததில்லை. தங்கள் மண்ணில் தாங்கள் நடத்தும் போருக்கு தாய்த் தமிழ்நாடு தார்மீக ஆதரவைக் கொடுத்தால் போதும் என்று சொன்னவர் பிரபாகரன். இதை வசூல் சக்கரவர்த்திகள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மாவீரனாகவே வாழ்ந்து கொண்டிருந்த பிரபாகரனைப் பார்த்து,  மாவீரனாகவே ஜொலித்துக் கொண்டிருந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். வாரி வழங்கியது தனிக் கதை.

"தமிழீழம் தான் தீர்வு என்று தமிழ்நாட்டிலிருந்து குரல்கொடுப்பது என்ன நியாயம்? அந்தக் குரல் ஈழத்திலிருந்து எழும்பட்டும்" என்று ராஜபக்சேவின் குரலில் பேசுகிறார்கள் சில அறிவுஜீவிகள். தமிழனுக்கு அறிவு இருந்தால் எப்படியெல்லாம் பயன்படுத்துவான் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது, மக்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டபோது, எங்கள் சகோதரிகள் திட்டமிட்ட வகையில்  பாலியல் வன்முறையால் சீரழிக்கப்பட்டபோது, இந்த அறிவுஜீவிகள் எல்லாம் சைலண்ட் மோடில் இருந்தார்கள்.

இப்போதுதான் அவர்களது வாய் கிழிகிறது. ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் பேரை உயிர்த்தெழச் செய்து தமிழீழத்தைக் கேட்கச் சொல்லலாம் - என்று ஏதாவது அமானுஷ்ய திட்டத்தோடு இந்த அறிவு ஜீவிகள் களத்தில் குதிக்கிறார்களா? அல்லது, சுற்றிலும் துப்பாக்கிச் சனியனோடு திரிந்து கொண்டிருக்கும் ராணுவப் பொறுக்கிகளின் முற்றுகையில் இருக்கும் மிச்சசொச்சம் தமிழர்களுக்குத்  தமிழீழம் கேட்கும் துணிவு இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க விரும்புகிறார்களா? அவர்களது திட்டம் என்னவென்று  தெரியவில்லை.

இப்போது நாம் இங்கேயிருந்து கேட்பது தமிழீழம் கூட அல்ல... இந்தியாவின் துணையுடன் இலங்கை நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலையின்போது கொன்று குவிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கான நீதியைத்தான் நாம் கேட்கிறோம். நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்க இந்த அறிவு ஜீவிகளுக்குத் துணிவிருக்காது... ஆனால், தப்பிப் பிழைத்த தமிழர்கள் மட்டும் துணிவுடன் பேசியாக வேண்டும் என்றால், எந்த ஊர் போங்கு இது?

தமிழீழம் தேவை - என்கிற தனிக் குரலே தேவையில்லை.  நடந்தது இனப்படுகொலைதான் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்வதன் மூலம் 'விரட்டி விரட்டிக் கொன்ற இனத்துடன், கொல்லப்பட்ட இனம் எப்படிச் சேர்ந்து வாழமுடியும்' என்கிற பாமரனுக்கும் புரிகிற கேள்வியைத்தானே எழுப்புகிறோம். இதுகூடவா புரியவில்லை, அறிவு ஜீவிகளுக்கு! அல்லது, புரிந்தேதான், இலங்கையின் ஒருமைப்பாட்டை எப்படியாவது கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காக - இனப்படுகொலை - என்று பேசுவதையே தவிர்க்கிறார்களா?

இந்த அறிவுஜீவிகளுக்கு தமிழக அரசியல் தலைவர்களைப் பார்த்தால் அப்படியொரு நக்கல், கிண்டல். தங்களுடைய அறிவு, பாமரத் தமிழனுக்குப் பயன்படவே கூடாது என்பதில் பிடிவாதமாயிருக்கும் இந்த அறிவுஜீவிகளால், அரசியல் தலைவர்களில் யார் யார் இந்த இனத்துக்காக உண்மையிலேயே போராடுகிறார்கள், யார் யார் போலிவேஷம் போடுகிறார்கள் என்பதை எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவே கூடாது - என்று குரல் கொடுக்கும் தலைவர்களுக்கும், 'காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதைப் பிரதமர் தவிர்க்கவேண்டும்' என்று பிய்ந்து போன காலணிக்கு பாலிஷ் போடுபவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?

2009ல் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தபோது காங்கிரஸ் தயவில் பதவியில் இருந்தார்களே, அவர்களைக் குறை சொல்ல நமக்கும் தகுதியில்லை. இனப்படுகொலையை நிறுத்த நம்மளவில் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்தோம் - என்று நம்மை நாமே கேட்டுப் பார்த்துக்கொண்டால், நமது மனசாட்சியே நம் கன்னத்தில் அறையும். 'அந்தச் சமயத்தில் அங்கே என்ன நடக்கிறது என்பதை நான் தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமலிருந்தது' என்று மற்றவர்கள் மீது பழிபோடக் கூடாது. உங்களைப் போன்றவர்களின் உறக்கத்தைக் கலைக்கத்தானே  சாஸ்திரி பவன் வாசலில் நெருப்புப் பிழம்பாக எரிந்து விழுந்தான் முத்துக்குமார். அவனுக்கு மட்டும் அங்கே என்ன  நடக்கிறது என்பது எப்படித் தெரிந்தது?

சரி, அப்போது தெரியாது - என்று சொல்லும் நமக்கு, நடந்தது இனப்படுகொலைதான் என்பது இப்போது தெரிந்துதானே இருக்கிறது. இப்போது அதை அம்பலப்படுத்த, அதற்கு நீதி கேட்க நம்மளவில் நாம் என்ன செய்கிறோம்? நாம் அமைப்பாக இல்லாமலிருக்கலாம், தனித்துப் போராட முடியாதவர்களாயிருக்கலாம். அப்படியொரு நிலையில், போராடுகிற அமைப்புகளின் முகவரி அகவரியெல்லாம் பார்க்காமல் அதில் பங்கெடுப்பது தானே முறை. நாம் தெருவுக்கு வர எது தடையாயிருக்கிறது? இந்தியாவா?

தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நமது உறவுகள் கொல்லப்பட்டார்கள்....... தமிழச்சிகள் என்கிற ஒரே

காரணத்துக்காகத் தான் நமது சகோதரிகள்

கற்பழிக்கப்பட்டார்கள். இந்தியர்கள் என்கிற ஒரே காரணத்தால், இதையெல்லாம் தட்டிக்கேட்க முடியாத நிலையில் இருக்கிறோமென்றால், வரலாறு நம்மை மன்னிக்காது.

இனப்படுகொலையை மூடி மறைக்க முயலுவோருக்கும், அதைப் பற்றிப் பேசவும் நியாயம் கேட்கவும் பயப்படுகிற நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங் சொன்னதைப் போல் நமது மௌனம்தான் இந்த இனத்தை அழிக்கும் ஆபத்தான  ஆயுதம். நாம்தான் முதல் குற்றவாளி.

நடந்த இனப்படுகொலைக்கு அமெரிக்காவிலிருந்து நியாயம் கேட்கும் மருத்துவர் - சகோதரி - எலினா சான்டர் தெளிவாகச் சொல்கிறார் - "கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நீதிகேட்டுக் குரல் கொடுக்கும் கடமை தமிழகத் தமிழர்களுக்குத்தான் மற்றெவரையும் காட்டிலும் அதிகம்" என்று! அவர் சொல்வதன் பொருள் புரிகிறதா உங்களுக்கு? இன்று உலகே குரல் கொடுக்கிறது... 'இனப்படுகொலை செய்த இலங்கைக்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்த என்ன தகுதி இருக்கிறது' என்று! முதல் குற்றவாளிகளான நமது குரல், உலகின் குரலுடன் இணையப்போகிறதா இல்லையா?

0 Responses to ''நாங்கள் ஏழரைக் கோடி ஜனங்களும் நாய்களோ, பன்றிச் சேய்களோ'' - புகழேந்தி தங்கராஜ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com