யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 26வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதான வைத்தியசாலைக்குள் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினரால் கடமையிலிருந்த வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில், 68க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் படுகாயங்களுக்கும் உள்ளாகினர்.
இந்திய அமைதி காக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூருதல் ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாண வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் உறவினார்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன் 26வது வருட நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் “அமைதி காக்கும் பணிகளுக்காக“ என்ற அறிவித்தலுடன் 1987ல் இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படையினரால், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கு மாகாணத்தின் பகுதிகளில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. அது, இன்னமும் வரலாற்றின் பக்கங்களின் இரத்தக்கறை படிந்த நினைவுகளாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to இந்திய அமைதி காக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம்