Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒட்டுமொத்த கவனமும், அதீத ஆர்ப்பரிப்பும், நிலை கொள்ளா பரபரப்பும் நீடித்த உதைபந்தாட்ட போட்டியொன்று நிறைவுற்ற மைதானத்திற்குள் நின்று நாலா பக்கமும் சுற்றிப் பார்க்கிற உணர்வு எனக்கு. போட்டியை நடத்தியவர்கள் ஒரு அணியாகவும், அழைப்பாளர்களாக வந்தவர்கள் சிலர் இன்னொரு அணியாகவும் சிறப்பாக(?) ஆடி முடித்திருக்கிறார்கள்.

பிரேஷிலும்- இத்தாலியும் மோதும் இறுதிப்போட்டிக்கு ஒப்பான ஆட்டம் என்று ஊடக நண்பரொருவர் கூறுகின்றார். ஓரளவுக்கு உண்மைதான். ஏனெனில், அந்த பரபரப்பு ஊடக சூழலில் அடங்கிவிடவில்லை.

ஆனாலும், எனக்கு அந்தப் போட்டியில் பந்துகளாக நாங்கள் (தமிழர்கள்) உருட்டப்பட்ட உணர்வே இன்னமும் இருக்கிறது. போட்டியின் பார்வையாளர்களாகவோ, போட்டியிடும் அணியினராகவோ இருந்துவிடுவது பல நேரங்களில் ‘பந்துகளாக’ இருப்பதைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. பந்துகளாக இருக்கிறவர்களுக்கு மட்டுமே அதன் வலியும், அலைக்கழிப்பின் ஆதங்கமும் புரியும். தமிழ் மக்கள் உதைபடும் பந்துகளாக நிலைமாறி நீண்ட நாட்களாகிறன. நானும் பந்துகளின் பகுதியாகவே இருக்கிறேன். ஆனாலும், சில மணி நேரத்துக்கு கொஞ்சம் வெளியில் நின்று இந்தக் கட்டுரையை எழுத முனைகிறேன்.

23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை (CHOGM) மிகுந்த பொருட் செலவில் ஆடம்பரமாக இலங்கை நடத்தி முடித்திருக்கிறது.  இந்த மாநாட்டை நடத்துவதற்காக 1500 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான பணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செலவளித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஓரளவுக்கு அதனை எம்மாலும் உணர முடிந்தது. அரச தலைவர்களுக்கான வாகனங்கள், உபசரிப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு என்பவற்றுக்காக பெருமளவு நிதி செலவளிக்கப்பட்டிருந்தது. கொழும்பு, அம்பாந்தோட்டை நகரங்கள் ‘தலைக்கு குளித்து வந்த இளம் பெண்’ணைப் போல காட்சி அளித்தன. அவ்வளவு பந்தமும்- சுத்தமும்- அழகும்.

CHOGM களம்

இலங்கை இம்முறை பொதுநலவாய மாநாட்டினை நடத்துவதை மிகப்பெரிய அளவில் விரும்பியது. பெரும் கௌரவமாக உணர்ந்தது. இறுதி மோதல்களுக்குப் பின்னராக தன்னுடைய முன்னோக்கிய பயணம் பற்றி அறிக்கையிடல்களுக்காகவும்- சர்வதேசத்திடமிருந்து நற்பெயரை பெற்றுக்கொள்வதற்குமான களமாகவும் கருதியது. அதில், வெற்றி பெறுவதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்தது. குறிப்பாக, இராஜதந்திர- அரசியல் அறிவின் உச்சத்தில் தன்னை வைத்துக் கொண்டு மாநாட்டினை எதிர்கொள்ள வேண்டும் என்று யோசித்து செயலாற்றியது. அதற்கான திட்டமிடல்களை பல மாதங்களுக்கு முன்னர் இருந்தே வெளிவிவகாரத்துறையை கையாளும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்டவர்கள் அடங்கிய பெரும் குழுவை அமைத்து செயலாற்றியது.

பொதுநலவாயத்தின் முக்கிய நாடுகளான பிரித்தானியா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகியவற்றை மாநாட்டுக்காக அழைத்துவர வேண்டும் என்பதில் அதீத அக்கறையுடன் இருந்தது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து வருவதை தன்னுடைய அதீத பொறுப்பாக இலங்கை அரசாங்கம் கருதியது. நிலைமை இப்படியிருக்க, இன்னொரு பக்கத்தில் சனல்4 என்கிற வடிவில் தலையிடியொன்று அரசாங்கத்திற்கு வந்து சேர்ந்தது. ‘கொலைக்களம்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ என்கிற தொனியில் இலங்கையை குற்றஞ்சாட்டும் ஆவணப்படங்களை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடக குழு பொதுநலவாய மாநாட்டுக்கு வர விரும்பியது.

இறுதி மோதல் காலங்களில் நாட்டிலிருந்து அநேக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியேற்றப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியான நிலைமையே நான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டபோதிலும் இங்கு காணப்பட்டது. அப்படியிருக்க சர்வதேச மாநாடொன்றை நடத்தும் போது சர்வதேச ஊடகங்களை நாட்டுக்குள் அனுமதித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இலங்கை அரசாங்கத்தின் கழுத்தினை இறுக்கியது. உள்நாட்டு ஊடகங்களில் அதிகமானவை அரச ஊடகங்கள் போல செயலாற்றத் தொடங்கிவிட்ட பின், அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் இல்லை. அப்படியான நிலையில், மாநாட்டுக்காக சர்வதேச ஊடகங்களை அனுமதிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். அதுவும், குறிப்பிட்டளவு சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்துடன்.

குற்றச்சாட்டுக்கள்

இலங்கையின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் 2005களுக்குப் பின் மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. குறிப்பாக, ஊடகவியலாளர்களின் மீதான அத்துமீறல், மற்றும் கடத்தல்- காணாமற்போதல் என்பவை தொடர்பில். நிலைமை அப்படியிருக்க இறுதி மோதல் காலங்களில் அது அதிகரித்தே காணப்பட்டது. ஊடக சுதந்திரம் அற்ற நாடு, மனித உரிமைகளை மதிக்காத நாடு என்கிற குற்றச்சாட்டுக்களை கடந்து விடுவது பற்றி அரசாங்கம் சிந்திப்பதற்கு பதில் இறுதி மோதல்களை வெற்றி கொள்வதில் அதீத கவனம் செலுத்தியது. வெற்றியும் பெற்றது. வெற்றிக் கொண்டாட்டங்கள் அதிக காலம் நீடிக்கவில்லை. மெல்ல மெல்ல இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நாடுகளும், ஊடகங்களும் முன்வைத்தன. அது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் பெருமெடுப்பில் பிரதி பலித்தது. வெற்றிக்கொண்டாட்ட கனவில் இருந்த அரசாங்கத்திற்கு, குற்றச்சாட்டுக்களை  எப்படி கையாழுவது என்கிற தலையிடி வந்து சேர்ந்தது. அதுவும், ஒவ்வொரு மார்ச் மாதமும் வரும் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரை எப்படி எதிர்கொள்வது என்கிற சிக்கல். இப்படித்தான் இலங்கை அரசாங்கம் இருந்து வந்திருக்கிறது.

மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக எதிர்கொண்ட இலங்கை சர்வதேச மாநாடொன்றை நடத்தும் போது அவற்றுக்கான பதில்களையும், அது தொடர்பில் எழும் அழுத்தங்களையும் சமாளித்தே ஆக வேண்டியிருந்தது. மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னரே மனித உரிமை மீறல் குற்றங்களை புரிந்துள்ள இலங்கை மாநாட்டினை  பொதுநலவாயத்தின் உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை மனித உரிமை அமைப்புக்களும், பல்வேறு நாடுகளிலுள்ள பிரதான கட்சிகளும் விடுக்க ஆரம்பித்தன. இது, இலங்கைக்கு பெரும் இடராக அமைந்தது. குறிப்பாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கைக்கு செல்லக்கூடாது என்கிற அந்நாட்டின் பிராந்தியக் கட்சிகளின் அழுத்தங்கள். இறுதியில் அந்த அழுத்தங்களுக்கு அவர் பணிந்தும் போனார். அப்படியானதொரு சூழ்நிலையே பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இருந்தது. ஆனால், அவற்றை அவர் “இலங்கை மீது அதீத அழுத்தங்களை வழங்குவதற்காக செல்கிறேன்“ என்கிற தொனியில் சமாளித்துவிட்டு வந்தார். இறுதி நேரத்தில், பொதுநலவாய மாநாட்டை 2015ல் நடத்துவதற்கு தெரிவான மொரீஷியஸின் பிரதமரும் நிராகரித்தார். அது மட்டுமில்லாமல், மாநாட்டை நடத்தும் வாய்ப்பையும் புறக்கணித்தது.

பெருமெடுப்பில் ஆச்சரியமூட்டும் அளவுக்கு பொதுநலவாய மாநாட்டை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டாலும், மாநாடு நெருங்க நெருங்க ‘மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள்’ என்கிற வடிவில் அழுத்தங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. அப்படியான தருணங்களில் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கைக்கு ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தார். ஆனால், அவர் அளித்த ஆறுதல் அழுத்தங்களை குறைக்கும் அளவுக்கு இருக்கவில்லை. அப்படியான நிலையிலேயே  பொதுநலவாய மாநாட்டினை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

மறுபுறம், சனல் 4 ஊடக குழுவினரின் இலங்கை வருகையும், அதனூடான பரபரப்பும். அவர்கள் விமானத்தில் வந்து இறங்கியது முதல் ஆரம்பமாகிவிட்டது. பொதுநலவாய மாநாடுகள் எவ்வளவு கவனம் பெற்றதோ அதேயளவு கவனத்தை சனல் 4 குழுவின் வருகையும் பெற்றது. அவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், வடக்கு நோக்கிய ரயில் பயணத்தின் போதான இடையூறு, கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டமை மற்றும் ஜனாதிபதியிடமான கேள்வியும், அவர் தேநீர் விருந்து அழைத்ததும் என்று அடுத்தடுத்து பரபரப்பா இருந்தது.  இலங்கைக்கு சர்வதேச ஊடகங்களை சமாளிப்பது ஏற்கனவே பெரும் பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது. அதில், சனல் 4 என்பது பெரும் தலையிடியாக இருந்து வருகிறது.  அப்படியிருக்க அவர்களை நாட்டுக்குள்ளேயே அனுமதித்துவிட்டு அல்லற்பட வேண்டிய இருந்தது. ஒவ்வொரு முறையும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் எரிச்சலின் உச்சத்திலிருந்து பதிலளித்துக் கொண்டிருக்கின்றனரோ? என்று தோன்ற வைத்தது.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம், சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடக குழுவினரின் கவனத்தை பெற்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வுகள் கொழும்பில் ஆரம்பித்த 15ஆம் திகதியே அதுவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. பொதுநலவாயத்தின் பிரதான அமர்வுகள் பெற்ற அவதானத்தைத் தாண்டிய அவதானத்தை அது பெற்றுக்கொண்டது.

சர்வதேச ஊடகங்கள் அண்மைய நாட்களில் இலங்கைக்குள் இவ்வளவு சுதந்திரமாக(?) அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டங்களை முழுமையாக- நேரடியாக கண்டு கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கவில்லை. அப்படியான தருணமொன்றை எதிர்பார்த்து காத்திருந்த மக்களும் தமது பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அடையாளப்படுத்த முனைந்தார்கள். அது எவ்வளவு பலன்களை தரும் என்பது பற்றியெல்லாம் அவர்கள் யோசித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தமது அவலங்கள் தாங்கிய குரலை ஓங்கி ஒலிக்க செய்ய வேண்டும் என்று விரும்பினர். அதை நிறைவேற்றியும் காட்டினர்.

பொதுநலவாய மாநாடுகளின் இணை அமர்வுகள் ஆரம்பித்த நாட்களில் இருந்து யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொதுமக்களும் இணைந்து தமது காணிகள் தமக்கு மீள வழங்கப்பட வேண்டும் மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.

அதுபோல, கொழும்பில் மனித உரிமைகளை வலியுறுத்தும் நிகழ்வொன்றை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அதில், கலந்து கொள்வதற்கான வடக்கிலிருந்து பேரூந்துகளில் வந்த காணாமற்போனவர்களின் உறவினர்கள் சுமார் 400 பேரளவில் வவுனியாவின் மதவாச்சியில் பாதுகாப்பு தரப்பினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது, அவர்களை வவுனியா நகர சபை மைதானத்தில் போராட்டத்தில் இறங்க வைத்தது.

 அதன் இன்னொரு உச்சகட்ட போராட்டமாகவே யாழ்ப்பாணத்தின் நல்லூரில் காணாமற்போனோரின் உறவினர்களின் போராட்டம் அமைந்தது. அன்றைய தினமே, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்தது  கவனத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அதுபோல, திருகோணமலையின் சம்பூரிலும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆக, வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.  கொழும்பில் சர்வதேச மாநாடொன்றை நடத்திக் கொண்டிருக்கிற, அரசாங்கத்திற்கு இவ்வாறான மனித உரிமைகளை கோருகின்ற போராட்டங்கள் சிக்கல்களை கொடுத்தன.

மனித உரிமைகளை மதித்தல் என்பதற்கான உறுதிப்படுத்தல்களை செய்ய வேண்டிய அவசியம் இன்னும் இன்னும் அரசாங்கத்தின் மீது அழுத்தியது. அதுவே, மாநாட்டு காலத்தின் பேசும் பொருளாகவும் அதிகம் இருந்தது.

 டேவிட் கமரூன்

பொதுநலவாயம் என்பது  பிரித்தானியாவின் ஆட்சியில் பல்வேறுபட்ட காலங்களில் இருந்த நாடுகள் என்பதன் அடிப்படையிலேயே தோற்றம் பெற்றது. அப்படிப்பட்ட நிலையில், பிரித்தானியாவை இலங்கை மாநாட்டில் பங்கு கொள்ள வைப்பதற்கான தேவை அரசாங்கத்திற்கு அதிகமாக இருந்தது. மாநாட்டில், பிரித்தானிய மகா ராணியின் சார்பில் இளவரசர் சார்ள்ஸ் கலந்து கொள்வது உறுதிப்படுத்தப்பட்ட பின், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அதனை முன்னிறுத்தியும்- இலங்கை மீதான அழுத்தங்களை முன்னிறுத்தியும் மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியிருந்தார்.

தன்னுடைய நாட்டின் உள்ளக அரசியற்சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு இலங்கையின் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டினை கையாளும் தேவை பிரதமர் டேவிட் கமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இருந்தது. அது, தன்னுடைய எதிர்கால அரசியல் களத்தின் ஆதாயங்களையும்- தன்னுடைய இராஜதந்திர வெற்றியையும் கவனத்தில் கொண்டது. அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான அடிப்படைகளை முழுவடிவில் நிறைவேற்றியது.

டேவிட் கமரூன் இலங்கைப் பயணத்தின் போது தன்னுடன் அழைத்து செல்லும் இராஜதந்திரிகள், ஊடக குழு தொடர்பில் அதிக அக்கறை கொண்டார். பிரதானமாக சனல் 4ஐ தன்னோடு இணைந்துக் கொண்டார். அது. தனக்கான வாக்குகளை எதிர்கால தேர்தலில் பெற்றுத்தரும் என்று நம்பினார். அதன் ஒருகட்டமாக யாழ்ப்பாணத்திற்கான பயணத்தையும் கருதினார். அதுபோல, இலங்கை அரசாங்கத்தையும், பொதுநலவாய மாநாட்டினையும் எவ்வாறு கையாள்வது என்று வகுத்துக் கொண்டார்.

இலங்கைக்கு வருவதற்கு முன் இந்தியப் பயணத்தை மேற்கொண்ட டேவிட் கமரூன், அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அதில், பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமை தொடர்பிலும் பேசப்பட்டது. மன்மோன் சிங்கின் அந்த முடிவு தொடர்பில் மதிப்பளிப்பதாக ஊடகங்களிடம் பேசியுமிருந்தார். இப்படி, இலங்கை விஜயத்துக்கு முன்னரே இலங்கை மீதான அழுத்தங்களை மெல்ல பதிவு செய்ய ஆரம்பித்தார். இப்படி டேவிட் கமரூனின் வருகை இலங்கைக்கு வருவதற்கு முன்னரே பரபரப்புக்களோ ஆரம்பித்தது.

இலங்கை வந்த டேவிட் கமரூன், விமான நிலையத்தில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த வரவேற்பு நடனத்தைப் புறக்கணித்தார். வருகை ஏட்டில் கையெழுத்திடவில்லை. அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் வாகனத்தையும் தவிர்த்துவிட்டு பிரித்தானிய தூதரக வாகனத்தைப் பயன்படுத்தினார். அதனை, அவர் பொதுநலவாய மாநாட்டின் பிரதான அமர்வுகளுக்கு வரும் போதும் கடைப்பிடித்தார். இது, இலங்கைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

மாநாட்டின் பிரதான அமர்வுகள் ஆரம்பித்த 15ஆம் திகதி பிற்பகலில் அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, காணாமற்போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தையும் காணும் வாய்ப்பை ஏற்பட்டது. அத்தோடு, உதயன் பத்திரிகை நிறுவனத்தில் ஊடகவியலாளர்களுடனும், வலிகாமம் பகுதிக்கும் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடனும் பேசினார். அது, பொதுநலவாய மாநாடு அளவுக்கு சர்வதேச கவனம் பெற்றது. அதனை இலங்கை மீதான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்.

அது, “மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நீதியான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னெடுக்கப்படாத பட்சத்தில்; இலங்கை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும்“ என்கிற கடுந்தொனியில் கருத்து வெளியிட வைத்தது.

 பிரதிபலிப்பு

2009களுக்குப் பின்னர் சர்வதேச ரீதியில் கேள்விகளையும், குற்றச்சாட்டுக்களையும் பெருமளவு தவிர்த்து வந்த இலங்கைக்கு பொதுநலவாய மாநாடு கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. அந்த பதில்களை தீர்க்கமாவும், சமயோசிதமாகவும் முன்வைக்கவும் வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பதில்களிலிருந்தே, திருப்ப திருப்ப கேள்விகள் சில நாடுகளினாலும், சர்வதேச ஊடகங்களினாலும் முன்வைக்கப்பட்டன. அப்போது அரசாங்கம் நிலைதடுமாறிப் போய்விட்டது.

”முப்பது வருடகாலமாக நீடித்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்த எங்களுக்கு முன்னோக்கி பயணிப்பதற்கு கால அவகாசம் தேவை. மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளை நீதியாக முன்னெடுக்கின்றோம். இலங்கைக்கென்று சட்டமும்- அதன் பிரகாரமான நெறிமுறையான ஆட்சியும் உண்டு. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றி வருகிறோம்” இந்தப் பதில்களை இலங்கை அரசாங்கத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வேறு வேறு வார்த்தைகளின் வடிவில் வந்து கொண்டிருந்தன. இன்னமும் இந்தப் பதில்களே வந்து கொண்டிருக்கின்றன. அதில், பெரிய மாற்றங்களை எதிர்காலத்திலும் காண முடியாமல் இருக்கும்.

இலங்கையை அதிகமாக எரிச்சற்படுத்திக் கொண்டிருக்கிற சொல்லாடல் ‘சர்வதேச விசாரணை’ என்பது. இறுதி மோதல்களின் பின்னரான வெற்றி நாட்கள் இலங்கைக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதன் காலம் நீடிக்கவில்லை. எதிர்பார்க்காத பக்கங்களிலிருந்து அபரிமிதமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. சரத் பொன்சேகா என்கிற வெற்றிப் பங்காளியே சிக்கலாக உருமாறி நின்றார். அவரை சமாளித்து அடுத்து பயணிக்கலாம் என்றால், ‘சனல் 4’ இன்னொரு சிக்கலாக மாறி நின்றது. இன்னமும் அப்படியே நிற்கிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை மீதான அழுத்தத்தை பிரயோகிக்க ஆரம்பித்தது முதல் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச ரீதியில் பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை கையாளுவது போலவே ஆரம்பத்தில் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கையாண்டது. அது வெற்றியளிப்பது போல தோன்றினாலும்; இன்னொரு புறத்தில் படுபயங்கர சிக்கல்களுக்குள் மாட்டிவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரின் போது பொறுப்புக்கூறவேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுவிட்டது. சர்வதேச இராஜதந்திர அரசியல் நகர்வுகளின் கவனம் இலங்கையை ஆளும் அரசாங்கத்தின் மீது விழுந்தது. அதனை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் சீனாவின் மீதான உறவின் பின்னணிலும்- இணக்கத்திலும் வலுப்பெற்றதாக காணப்பட்டது. ஆனால், யதார்த்தம் இலங்கைக்கு வேறுமாதிரியான படிப்பினைகளைக் கொடுத்தது. சில நாட்களுக்கு முன் சீனாவே, இலங்கை மனித உரிமையினை பாதுகாப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்திவிட்டது. இந்த நிலையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தி முடித்துவிட்ட இலங்கைக்கு, 2014 மார்ச் மாதம் என்பது இன்னொரு பெரும் தடையாக இருக்கும்.

இனி,

கட்டுரை மேலுள்ள பகுதியோடு முடிந்துவிட்டது. ஆனாலும், எம்மைப் பற்றி பேசுவதற்கு சின்னதாக விடயமொன்று இருக்கிறது. அதாவது, திடீர் திடீர் என்று எமக்கு முன்னால் ஆபத்பாண்டவர்கள் தோன்றுவது பற்றியது. திடீரென தோன்றும் ஆபத்பாண்டவர்களை நாங்கள் அதிக நேரங்களில் முழுமையாக நம்புகிறோம். இல்லையென்றால் எமது நம்பிக்கையின் அளவு பெரிதாக இருக்கும். அப்படியான ஆபத் பாண்டவர்களாக சில மாதங்களுக்கு முன் நவநீதம்பிள்ளையும், இப்போது டேவிட் கமரூனும் தோன்றுகிறனர். ஆனால், இந்த ஆபத்பாண்டவர்களினால் எமக்கான உரிமைகள் முழுமையாக கிடைத்து விடுவதில்லை. அதுபோல, இவர்கள் நிரந்தரமாக எம்மை தத்து எடுத்துவிடுவதில்லை. இதுதான் யதார்த்தம். ஆனால், சின்ன சின்ன விடயங்களில் இலங்கை அரசாங்கம் விட்டுக்கொடுப்பு செய்ய சிலவேளை அது உதவலாம். அதனூடு எமக்கு சின்ன விடயங்களில் சலுகைகள் கிடைக்கலாம். சலுகைகள் உரிமைகளாக அதிகம் மாறிவிடுவதில்லையே? மற்றப்படி, ஆபத்பாண்டவர்கள் தங்களைக் காப்பாற்றுவதற்காகவும், தங்களுடைய இராஜதந்திர நகர்வுகளுக்காகவுமே தோன்றுகிறார்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை!

4தமிழ்மீடியாவிற்காக : புருஜோத்தமன் தங்கமயில்

0 Responses to பொதுநலவாய மாநாடு 2013: இலங்கையை பொறுப்புக்கூற பணித்த களம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com