உலகத் தமிழர்களும், கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதற்குப் பிறகு, “காமன்வெல்த்” மாநாடு இலங்கையில் நடைபெற்று முடிந்துவிட்டது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு, அந்த மாநாட்டினை நடத்திய இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலை; இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனம்.
ஈழத் தமிழர்கள் - இலங்கையிலே வாழ்வோர் மற்றும் உலகமெங்கும் வாழ்வோர், ஏன் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை தமிழர்களின் நெஞ்சங்களிலும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இடம் பெற்றுவிட்டார். அவரைப்போல் நடந்துகொண்டிருந்தால் இந்தப் புகழும், பெருமையும் நம்முடைய இந்தியப் பிரதமருக்கும் கிடைத்திருக்கும்.
இந்திய அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து, “டெசோ” கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் தீர்மானத்தில், “சல்மான் குர்ஷித்தை அந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை குறித்து, சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் பிரதமர் செய்ததைத்தான் இந்தியாவும், இந்தியப் பிரதமரும் செய்ய வேண்டுமென்று தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்த்தது. ஆனால் பிரிட்டன் பிரதமர் தமிழ்ச் சமுதாயத்தின் மீது காட்டுகின்ற அக்கறையையும், பரிதாபத்தையும், இந்தியா காட்டுகிறதா? பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாதது பற்றி கருத்து தெரிவிக்கும் போது, அவர் உண்மையிலே தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க அதிலே கலந்து கொள்ளவில்லை என்றால், இலங்கைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அதற்கான காரணத்தை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கலாம் அல்லவா?
ஈழத் தமிழர்களுக்கு இன்னின்ன கொடுமைகள் நடைபெற்றிருக்கின்றன, அதற்காக ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், உண்மை உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்று அந்தக் கடிதத்திலே தெரிவித்திருக்கலாம் அல்லவா?
தமிழர்களின் கோரிக்கைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு, பிரதமருக்குப் பதிலாக அந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு சென்றாரே, அவர் அங்கே செய்தது என்ன? இங்கிலாந்து பிரதமர் மாநாட்டின் முதல் நாள் அன்றே யாழ்ப்பாணத்திற்கு ஓடோடிச் சென்று, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையெல்லாம் பார்த்து ஆறுதல் வழங்கினாரே; அதைப் போலச் செய்தாரா? விசாரணை நடத்தப்பட வேண்டு மென்று அவரைப் போல பேட்டி அளித்தாரா? காமன்வெல்த் மாநாட்டிலே இலங்கையிலே நடைபெற்ற கொடுமைகளைப் பற்றியெல்லாம் கர்ஜித்தாரா? பிரதமர் ஏன் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று காரணங்களை அடுக்கினாரா? எதுவுமே செய்யவில்லை; சல்மானுக்கென்ன; மாண்டு மடிந்தது நமது தமிழ் இன மக்கள்தானே?
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
0 Responses to காமன்வெல்த் மாநாட்டுக்கு சல்மான் குர்ஷித் சென்றாரே, அவர் அங்கே செய்தது என்ன? கலைஞர் கேள்வி