Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிய நாயகர்களுக்கு கல்லறை எதற்கு..? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவிதமாக ஒளிகாட்டும் மாவீரர் நாள் இந்த ஆண்டு மிகவும் புதிதாக தீபங்களுக்குள்ளால் தன் திருமுகம் காட்டுகிறது.

“ஏதோ நன்மைகள் நடக்கப்போகின்றன..” என்ற இனம்புரியாத உணர்வுகள் அரும்ப.. மலர்கிறது மாவீரர்நாள்.

சங்கரில் ஏற்றப்பட்ட மாவீரர் நாளின் முதல் விளக்கு நூறாகி, ஆயிரங்களாகி, இலட்சோப இலட்சங்களாகி பெருகிச்செல்கின்றது.

இது சாதாரண ஒளியல்ல, ஈழத் தமிழினத்தைச் சூழ்ந்துள்ள கொடிய சிங்கள இனவாத இருளை விலக்கும் ஒளிப்போர்..

அந்த ஒளிப்போர் இந்த ஆண்டு பெற்ற வெற்றி மகத்தானது..

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியமைத்த பிரிட்டனின் இதயத்தை மூடியிருந்த இருளையே விலத்தி புத்தொளி பரவச்செய்திருக்கிறது.

மாவீரன் சங்கர் தனது முதலாவது உயிர் விளக்கை ஏற்றியபோது.. இருள் மிகுந்த உலகத்தின் மீது ஒரு விளக்கை வைத்தான், ஒரு விளக்கால் இந்த மயான இருளைப்போக்க முடியாது.. இதுபோல இலட்சோப இலட்சம் விளக்குகளை ஏற்றினால்தான் இந்த உலகம் நம்மை அடையாளம் காணும் என்றான்..

இன்று இசைப்பிரியாவரை எத்தனை இலட்சம் மாவீர விளக்குள்..

மாவீரர் தீபத்தை ஏற்றிவிட்டு தியாகமே வடிவாக நின்ற திருமகன் பிரபாகரனிடம்,” உங்கள் அரசியல் கொள்கைதான் என்ன..? ” வென்று சிலர் வினவினார்கள்..

” என்னுடைய அரசியல் பாதை இந்தத் தீபங்களின் வெளிச்சத்தில் தெரிகிறது, இந்தத் தீபங்களே எனக்கு வழிகாட்டிச் செல்கின்றன..” என்றார்..

அன்று உலகத்தால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை..

ஆனால் அதற்கு முதல் இன்னொருவன் ஒளியின் இயல்புபற்றி இந்த உலகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லியிருந்தான் அவன்தான் விஞ்ஞானி ஐன்ஸ்டைன்.

அகலித்துக்கொண்டே அசுர வேகத்தில் ஓடும் இந்த ஒளி ஒரு கட்டத்தில் வளைகிறது, அது ஒரு நாள் புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வருகிறது என்றான்.

அதுதான் இந்த ஆண்டு மாவீரர்நாளில் நடந்திருக்கிறது, ஒளி புறப்பட்ட இடத்திற்கே வந்திருக்கிறது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனை முதல் தடவையாக அதுதான் யாழ். மண்ணுக்கு அழைத்து வந்தது.

இலங்கைத் தீவில் நின்று, சிறீலங்கா மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று அவரை முழங்கவும் வைத்தது.

இந்தப் வெற்றிக்கு மாவீரனைத்தவிர வேறு எவரும் உரிமை கோர முடியாது.

மாவீரர்கள்..

பல போர்க்களங்களை வென்றார்கள்… வெற்றிக் கொடி ஏற்றினார்கள்..!

ஆனையிறவையே கைப்பற்றி அகிலப்புகழ் பெற்றார்கள்..!

இருந்தாலும் இருட்காட்டில் கிடந்த உலகத்தால் ஈழத்தின் இதயத்தைப் பார்க்க முடியவில்லை.

ஓயாத அலைகள் மூன்றில் சிங்கள இராணுவம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் போல பலாலி முகாமிற்குள் முடக்கப்பட்டது.

அவர்களை நயவஞ்சகமாக அழித்திருக்கலாம்… ஆனால் அது போர் விதியல்ல.. அவர்களை மன்னித்து விட்டார்கள்.. போர் நெறி காத்தார்கள்.. ஆனாலும் ஈழத்தின் இதயத்தை இந்த உலகத்தால் பார்க்க முடியவில்லை.

அந்த மகத்தான முடிவை உலகம் மதித்ததா..? இல்லை..

பதிலுக்கு உலகத்தின் வல்லரசுகள் எல்லாம் ஒன்றிணைந்து புலிகளை வேரோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றன.

அப்போதுதான் சிங்களத்தின் இதயம் மட்டுமல்ல உலகத்தின் இதயமே இருட்காட்டில் கிடப்பதை பிரபாகரன் கண்டு கொண்டார்.

மாவீரர்நாள் உரையில்.. ” சின்னஞ்சிறிய ஓர் இனத்தை அழிக்க இத்தனை உலக வல்லரசுகள் ஒன்று திரண்டு நிற்கிறீர்களே.. இது நீதியா..?” என்று கேட்டார்.

உலகத்தால் புரிய முடியவில்லை..

சரணடையுங்கள் என்றார்கள்..

சரணடைபவனை தன்னைவிட உயர்வாக மதிக்க வேண்டுமென்ற கொள்கை சிங்களக் கலாச்சாரத்திலேயே கிடையாதே..?

பெற்ற தந்தை தாதுசேனனையே உயிருடன் கல்லறையில் வைத்துக் கட்டிய சிங்கள காசியப்பன் வரலாற்றுக்கு ஏது சரணடைவு..?

சிங்கள வரலாறு தெரியாத சீரழிந்த உலகம் கேட்க மறுத்து…பிடிவாதம் பிடித்தது..

நடேசனையும், புலித்தேவனையும் அனுப்பி அந்த மாவீர உயிர் விளக்குகளை ஏற்றச் செய்தார்.

வெள்ளைக்கொடியும் தெரியாத அடர் இருட்டுக்குள் கிடக்கிறது சிங்கள இனவாதம் என்பதை உலகத்தின் முன் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

நாம் சிங்கள இனவாதத்திற்கு எதிராகப் போராடினோம்..

இந்திய வல்லரசுக்கு எதிராகப் போராடினோம்..

அது ஆயுதப்போராட்டம்… ஆனால்..

பயங்கரவாத பட்டம் கட்டி உலக வல்லரசுகளே.. நம்மோடு போராடக் களமிறங்கியபோது ஆடுகளம் மாறியது..

இனி எப்படிப் போராடுவது..?

தன்னந்தனியாக உலகத்துடன் நம்மால் போராடத்தான் முடியுமா..?

முடியும்..

சிறீலங்கா, இந்தியா, உலகம் இந்த மூவரின் இதயங்களையும் மூடியிருப்பது ஒரே இருள்தான்..

இவர்களுக்கு எதிரான ஒரு போர் உயிர் விளக்குகளை ஏற்றும் உன்னதப்போர்தான்.

ஒரு சில நாட்களில் வன்னி மண்ணில் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர் விளக்குகள் ஏற்றப்பட்டன.

இதுவரை இந்த உலகப்பந்தில் எண்ணற்ற போர்கள் நடந்துவிட்டன, அறுநூறுக்கும் மேற்பட்ட பெரும் போர்கள் நடந்து முடிந்துவிட்டன..

ஆனால்..

உயிர் விளக்குகளை ஏற்றி உலக நாடுகளின் வஞ்சக இருளை அகற்ற நடந்த போர் எதுவென்று கேட்டால் அது வன்னியில் நடந்த போர் என்பதுதான் விடை.. அதை நடாத்தியவர்கள் நமது மாவீரர்களே..

வெற்றி என்பது போரினால் மட்டுமே வருமென்று உலகம் கருதுகிறது, அப்படியல்ல.. போராடாமலும் வெற்றி பெறலாம் என்பதை உலகத்திற்கு மௌனித்துக்கிடக்கும் மாவீரன் சொன்னான்..

ஒரு காலத்தில் உலகத்தில் அதிக உபாதைப்பட்டு பிரிந்த உயிர் இயேசுநாதரின் உயிர் என்று சொன்னார்கள்.

யாரும் இல்லாத கல்வாரி மலையிலே ஏற்றப்பட்ட அந்த பேசாத விளக்குத்தான் உலகிற்கு ஞானஒளி கொடுத்ததாகவும் பின்னாளில் கொண்டாடினார்கள்.

ஆனால் அதற்குப் பின் மிகப்பெரும் உபாதையுடன் பிரிந்த உயிர்கள் இசைப்பிரியாவும், அவளோடு மரணித்த மாவீரப் பெண் புலிகளின் உயிர்களும்தான்.

இவர்கள் ஏற்றிய உயிர்விளக்குத்தான் மன்மோகன் சிங்கை சிறீலங்கா வரவிடாது தடுத்தது..

போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று சிறீலங்கா தலைநகரில் நின்றே டேவிட் கமரோனை குரல் கொடுக்க வைத்தது.

இதையெல்லாம் செய்ய யாரால் முடியும் அந்த மாவீரனைத்தவிர..

தன்னை இழந்தவன் உண்டு..

தன் உயிரை இழந்தவன் உண்டு..

தன் சமாதியையும் இழந்தவன் இந்த உலகில் உண்டா..?

இருக்கிறான்.. அவன்தான் மாவீரன்..!

ஆம்.. இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..

கல்லறைகளை இடித்து மாவீரனைத் தேடுகிறான் பகைவன்.

உள்ளத்தில் இருக்கிறான் உயர்ந்த மாவீரன் என்பதை அவனெங்கே அறியப்போகிறான்.. பேதை..

காவிய நாயகர்களுக்கு கல்லறை எதற்கு..? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

விளக்கத்தான் முடியுமா இந்த விளக்குகளை..

கி.செ.துரை

0 Responses to காவிய நாயகர்களுக்கு கல்லறை எதற்கு..? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com