Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை அருகே விளார் கிராமத்தில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ் சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவிடம் கட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்கா பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அதில் தலையிடாமல் அமைதி காத்த அரசு, அதன் திறப்பு விழா முடிந்த ஒரு சில நாட்களில், திடீரென நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி, அதிகாலை வேளையில் அவசரம் அவசரமாக இடித்து நொறுக்கியது ஏனென்று விளங்கவில்லை.

சட்டவிரோதமாக அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்குமெனில் அதனை அப்புறப்படுத்துவதற்கு, உரிய காலக்கெடுவுடன் அரசு உரியவர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும்.  அவ்வாறு எந்த அறிவிப்பையும் செய்யாமல் நினைவிடத்தை எழுப்பியவர்களுக்கு போதிய காலக்கெடுவையும் வழங்காமல், திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கியதன் மூலம் அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிற வேளையில், இந்திய அரசை எதிர்த்துத் தமிழகமே கொதித்துக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக மக்களின் எழுச்சியைத் திசை திருப்பும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி இந்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய ஓரிரு நாட்களில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருப்பது, தீர்மானம் நிறைவேற்றியதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, தமிழக அரசின் நம்பகத்தன்மையின் மீதும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக எழுப்பப்பட்டுள்ள இந்த முற்றம் தமிழ் மக்களின் இனம்சார்ந்த உணர்வுகளோடு தொடர்புடையதாகும்.  அத்தகைய சிறப்பைப் பெற்ற நினைவு மண்டபத்தை இடித்ததன் மூலம் தமிழக அரசு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது. அதிமுக அரசு, ஈழத் தமிழர்களுக்கு உற்றத் துணையாய் நிற்கும் என்று நம்பியவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் முற்றம், தனியார் இடத்தில் எழுப்பப்பட்டிருந்தாலும் அது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் சொந்தமான நினைவிடமே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  எனவே, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமான முள்ளிவாய்க்கால் முற்றத்தில், தமிழக அரசு மீண்டும் சுற்றுச்சுவரை எழுப்பவும் பூங்காவை அமைக்கவும் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.  அத்துடன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான பொய் வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

1 Response to முள்ளிவாய்க்கா​ல் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்: திருமா​வளவன்

  1. Unknown Says:
  2. this guy is ass, now talk about tamil

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com