Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பிறகு, பேரறிவாளனுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் நிரபராதி என்ற உண்மையை பளாரென அறைந்து சொல்கிறது,

 உயிர் வலி ஆவணப்படம். 55 நிமிட ஆவணப்படத்தில்,  பற்றரி வாங்கிக் கொடுத்தது உண்மைதான். ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்காக என்று தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்று பேரறிவாளன் வாக்குமூலம் அளிக்கவே இல்லை என்கிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன்.

ஒரு பேராசிரியராகப் பணி புரிந்து, பின்னர் வருமான வரித் துறையிலும், பிறகு சி.பி.ஐ-யிலும் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் தியாகாராஜனின் சொந்த ஊர் சேலம், குள்ளம்பட்டி. இப்போது ஒடிசாவில் வசிக்கும் அவர் அளித்த வாக்குமூலம்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் உங்கள் பங்கு என்ன?

1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது எனக்குக் கொச்சியில் பணி. அந்தக் கொலையை விசாரிக்க, இந்தியா முழுவதும் இருந்து காவல் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்த போது தமிழ் நன்கு பேசவும் எழுதவும் தெரிந்த என்னை சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இணைத்தார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுப் பதிவதுதான் என் வேலை. சுமார் 17 பேரிடம் நான் வாக்குமூலங்களைப் பெற்றேன். நளினியிடம் ஆங்கிலத்திலும், மற்றவர்களிடம் தமிழிலும் பெற்றேன்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பேரறிவாளன் என்ன வாக்குமூலம் கொடுத்தார்?

பேரறிவாளனின் வாக்குமூலம் சுமார் நான்கு பக்கங்களைக் கொண்டது. பேரறிவாளன் என்னிடம், சிவராசன் கேட்டுக்கொண்டபடி பற்றரிகளை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது’ என்று சொன்னார். அந்த வரிகளில், ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் சொன்ன உயிரான அந்த வார்த்தைகளை எழுதாமல் தவிர்த்துவிட்டேன்.

ராஜீவ் காந்தி கொலை பற்றி எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் சொன்னதை எழுதாமல் விட்ட நான், இந்த விஷயம் தெரிந்துதான் பேரறிவாளன் பற்றரியை சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தார் என்று கற்பனையான ஒரு காரணத்தையும் எழுதவில்லை. அந்த இடம் மிகப் பெரும் மௌனங்களால் கடக்கப்பட்டிருக்கிறது அந்த வாக்குமூலத்தில்.

பின்னர் எப்படி, ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்று வாக்குமூலத்தில் பதிவானது?

துரதிர்ஷ்டவசமாக, தமிழில் இருந்து ஆங்கிலத்தில் வேறொரு குழுவினரால் வாக்குமூலங்கள் மொழிபெயர்க்கப்பட்ட போது நிகழ்ந்த தவறு அது. மேலும், நீதிமன்றத்தில் பேரறிவாளன் சொன்ன விஷயங்கள் அடிபட்டுப் போயின. பேரறிவாளன் தமிழில் சொல்லி நான் எழுதிய வாக்குமூலத்தில், பற்றரி வாங்கிக் கொடுத்தேன் என்று பேரறிவாளன் சொன்னதைப் பதிந்த நான், ராஜீவ் காந்தியைக் கொல்லத்தான் இவர் பற்றரி வாங்கினார்’ என்று எழுதாமல், ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றேன்.

ஆனால், அந்த வாய்ப்பை பேரறிவாளனின் தரப்பினர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சிவராசன், ராஜீவ் காந்தியைக் கொலை செய்யப் போகிறோம். பற்றரி வாங்கிக் கொடு என்று பேரறிவாளனிடம் கேட்டாரா? யாரைக் கொலை செய்யப்போகிறோம் என்பது பேரறிவாளனுக்கு முன்னரே தெரியுமா?’ என்பதெல்லாம் அந்த வாக்குமூலத்தில் இல்லை.

ஒரு வாக்குமூலப் பதிவிலேயே இவ்வளவு குழப்பக் குளறுபடிகள் என்றால், வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தின் மீதுமே சந்தேகம் வருகிறதே!

இல்லை... இல்லை! சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சந்தேகிப்பதோ, அதன் விசாரணையைக் குற்றம் சொல்வதோ என் நோக்கம் அல்ல. இந்தக் குறிப்பிட்ட தவறுக்கு முழுப் பொறுப்பாளியும் நான்தான். அதற்காக வேறு எவரையும் நான் குற்றம் சொல்ல முடியாது. தவறு இழைத்து விட்டதாக நான் உணர்ந்த வருத்தமும் வேதனையும் நீண்ட காலமாக என் மனதை அழுத்திக் கொண்டிருந்தன. இது என் தவறுதானே தவிர, ஒட்டுமொத்த விசாரணை அமைப்பின் தவறோ... அந்தக் குழுவின் தவறோ அல்ல!

நான் மீண்டும் சொல்கிறேன்... வாக்குமூலப் பதிவில், 'எனக்கு எதுவுமே தெரியாது என்று பேரறிவாளன் சொன்னதைத் தவிர்த்த நான், பேரறிவாளனுக்கு மிக நேர்மையாக சில வாய்ப்புகளையும் வழங்கிச் சென்றேன். அவர் சொன்னதை முழுமையாக எழுதவில்லை. அதே சமயம் சொல்லாத எதையும் புதிதாகச் சேர்க்கவும் இல்லை. இருந்தாலும் ஓர் அதிகாரியாக நான் கடமையில் வழுக்கியிருக்கிறேன். அதற்கு பொறுப்பு நான்தான்.

கடந்த 22 வருடங்களாக பேரறிவாளனுக்காகத் துடிக்காத மனசாட்சி, இப்போது பதறுவது ஏன்?

மூன்று மாதங்கள் மட்டுமே நான் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் நேரடியாகப் பணி செய்தேன். பின்னர் கொச்சிக்குச் சென்றுவிட்டேன். வழக்கு நீதிமன்றத்தில் பதியப்பட்ட போதும், தீர்ப்பு வந்த போதும், பின்னர் மேல் முறையீடுகளின் போதும் அவற்றில் பங்கேற்றேன். அப்போதும் இந்தக் குற்ற உணர்வு என்னை உறுத்திக்கொண்டுதான் இருந்தது. ஆனால், இந்த விசாரணை அமைப்பில் என் பங்கு என்பது மிகவும் சிறியது. நான் எதையேனும் பேசி, உலகமே உற்றுக் கவனிக்கும் வழக்கில் ஒரு குழப்பம் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக, அப்போது நான் வெளிப்படையாகப் பேசவில்லை.

சமீபத்தில் தூக்குத் தண்டனைக் கைதியான புல்லரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, என் மனசாட்சியின் உறுத்தல் அதிகரித்ததால், இப்போது பேசுகிறேன். இனிமேலாவது பேரறிவாளனுக்கு நீதி கிடைக்கட்டும்! காலம் கடந்தாவது உண்மையைப் பேசி விட்டால், இனி வாழ்கிற வாழ்வை நிம்மதியாகக் கழிக்கலாம் என்பதாலும் இப்போது நான் பேசுகிறேன். நான் செய்ததற்கும், செய்யத் தவறியதற்கும் நான் மட்டுமே முழுப் பொறுப்பு.

ஆக, பேரறிவாளன் நிரபராதி என்று சொல்கிறீர்களா?

என் அனுபவத்தில் மிகப் பெரிய குற்றவாளிகளைப் பார்த்திருக்கிறேன். பேரறிவாளன் விடயத்தில், அவர் சொன்ன ஒன்றைப் பதியாதது என் தவறு. மிகப் பெரிய தண்டனையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்கிறேன். அதற்காக அவர் நிரபராதி என்று என்னைச் சொல்லச் சொன்னாலும், நான் தயங்க மாட்டேன்.

தேர்தல் நெருக்கத்தில் நீங்கள் இப்படிப் பேசியிருப்பதால், மிகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்கலாம்; அரசியல் அழுத்தங்கள் ஏற்படலாம். கொடுத்த வாக்குமூலத்தில் உறுதியாக இருப்பீர்களா?

நிச்சயமாக! இந்த வாக்குமூலத்தில் இருந்து நான் பிறழ மாட்டேன். இது தொடர்பாக எங்கு வேண்டுமானாலும், நீதிமன்றத்தில்கூட வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். தூக்குக் கயிற்றின் கீழ் நிற்கும் பேரறிவாளனுக்கு நியாயம் கிடைப்பதற்கு என் பங்கும் முக்கியமானது என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். ஒரு நீதிப் பிழையைச் சரிசெய்ய என் வாக்குமூலம் உதவும் என்றால், அதற்காக எத்தகைய விளைவுகளையும் சந்திக்கத் தயார்.என்றார் அந்தச் சிபிஐ அதிகாரி தியாகராஜன்

பேரறிவாளன் யார்?

ஜோலார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற பேரறிவாளன், எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிப்பு முடித்தவர். பகுத்தறிவும், ஈழ விடுதலை உணர்வும் உந்தித் தள்ள, திராவிட கழக அமைப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த பேரறிவாளனை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் தேடி வந்தபோது, மகன் மீது எந்த சந்தேகமும் இல்லாததால், தானே அனுப்பி வைத்தார் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.

19 வயதில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க மல்லிகை இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு, இப்போது வயது 42. சிறையில் இருந்தபடியே ப்ளஸ்-டூ தேர்வு எழுதி, சிறை வரலாற்றிலேயே 1,096 மதிப்பெண்கள் பெற்றவர். எம்.சி.ஏ. பட்டப்படிப்பிலும் தேறியிருக்கிறார். இப்போது தியாகராஜனின் பேட்டிக்குப் பிறகு, அற்புதம்மாள் மீண்டும் முழு உத்வேகத்துடன் மகன் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.

நீதி வேண்டி..

55 நிமிடங்கள் ஓடக்கூடிய உயிர் வலி என்ற ஆவணப்படத்தை உருவாக்கியிருப்பவர்கள், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர். அதன் செயலாளர் செல்வராஜ் கூறியதாவது,

இந்த ஆவணப்படத்தை, பேரறிவாளனின் நண்பர்கள், ஆசிரியர்கள் உள்பட பலரிடமும் தகவல்கள் சேகரித்துத் தொகுத்தோம். படத்தில், பலருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய ஓர் அதிகாரி கனத்த மனதுடன் தன் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அத்தனைப் பதிவுகளிலும் தியாகராஜனின் வாக்குமூலம்தான் பிரதான கவனத்தையும், பலத்த அதிர்ச்சியையும் தூண்டியிருக்கிறது.

தெரிந்தே ஒரு கொலையை நீதித்துறை செய்துவிடக் கூடாது என்பதற்கான போராட்டத்தில் நிற்கிறோம், நீதி வேண்டி என்றார்.

0 Responses to பேரறிவாளன் ஒரு நிரபராதி!- வாக்குமூலத்தைத் திருத்திய தியாகராஜனின் வாக்குமூலம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com